ஆதலின் காதல் செய்வீர்!






மறுநாள் அதிகாலை மூன்று மணிக்கெல்லாம்
விமான நிலையம் புறப்பட வேண்டும்!
எதையும் மறக்காமல், துலக்குவதற்கு பிரஷிலிருந்து,
குளிருக்கு ஸ்வெட்டர் வரை,
சார்ஜரிலிருந்து அமிர்தாஞ்சன் வரை!
எதுவும் விட்டுப் போகாமல், ஒரு அவசர கதியில்
நானும் மனோவும் செயல்பட்டுக் கொண்டிருக்க,
தனியாக விளையாடிக் கொண்டிருந்த
மகன் அகிலனின் அழுகுரல் திடீரென்று கேட்கவும்,
விழுந்து அடித்துக் கொண்டு பால்கனி சென்று பார்க்கையில்,
அவனது இடது புருவத்துக்கு மேலிருந்து
இரத்தம் பீரிட்டு வழிந்து கொண்டிருந்தது!
ஒரு கணம் மனதில் எல்லாம் வாஷ் அவுட்
ஆன மாதிரி ஒரு பிளாஷ் வந்து சென்றது!
யோசிக்க அவகாசம் இன்றி, அவனை தூக்கிக்கொண்டு இசபெல் மருத்துவமனை ஓடினோம்! நேரம் இரவு மணி எட்டு!
டிரெஸ்ஸிங் முடிந்ததும்,
அநேகமாக தையல் போட வேண்டியிருக்கலாம் என்று இருக்கையில்,
எமெர்ஜென்சி மருத்துவர், ஒரு ஸ்டிக்கர் டேப் ஒட்டினால் போதுமானது;
டி டி இன்ஜெக்சன் போட்டு கொள்ளட்டும் என்றதும்,
நெஞ்சில் லேசாக,
மறுநாள் தில்லி செல்வோம் என்று பட்சி சொன்னது போலிருந்தது!
இது எதுவுமே நடக்காதது போல் அகிலன் நார்மலாக இருக்க,
மனோவோ துயரத்தின் உச்சியில் துவண்டு போய், அழுது கொண்டிருந்தாள்! நானும் தான்! ஆனால் எனதோ ஆனந்த கண்ணீர்( ஹி ஹி) !!
சாமம் இரண்டு மணிக்கெல்லாம் எழுந்து, கிளம்பி,
புதிதாய் வாங்கிய இரண்டு காபின் சூட்கேசுக்குள், கொண்டு செல்வதை எல்லாம் நிரப்பிக் கொண்டு!
டாக்சி வந்ததும், மீனம்பாக்கம் புறப்பட்டோம்!

விமானப் பயணம் - அகிலனுக்கும் மனோவுக்கும் இதுவே முதல் முறை!
போர்டிங் பாஸ் வாங்கி கொண்டு, செக்யூரிட்டி செக்-இன் முடிந்ததும்,
அந்த வளாகத்தில், சென்று அமர்ந்தோம்! சீக்கிரமே முழித்ததால்,
வயிறு பசித்தது! லாபி உணவு ஜாயிண்டில்,
ஆளுக்கு ரெண்டு இட்லி சாப்பிட்டோம்!
போர்டிங் செய்ய அழைப்பு வந்தது!
ட்ரான்சிட் பேருந்தில், விமானம் நோக்கி செல்ல ஆயத்தமாக,
அகிலன் " என்னப்பா ஒவ்வொரு ப்ளைட்டும் பிசாசு சைசில் இருக்கு" என்றான்!

இதோ, இன்னும் சிறிது நேரத்தில், என் நெடுநாள் கனவு நிறைவேறப்போகிறது!
நான் மட்டுமே உணர்ந்திருந்த அனுபவத்தை,
என் பிள்ளைக்கும் மனைவிக்கும்
கிடைக்கச் செய்யப் போகிறேன் எனும் பேரானந்தம்,
என்னை வேறு ஒரு தளத்திற்கு அழைத்துச் சென்றது!
"கோ ஏர்" A 320 ரக விமானம்,
ஒரு திமிங்கலம் போல அந்த அகன்ற பிரதேசத்தில்,
இரு வாயில்களையும் திறந்தபடி,
எங்களை உள்வாங்கிக் கொள்ள ஏதுவாக நின்று கொண்டிருந்தது!
அவர்களிருவரின் கண்களிலும் மின்னலாய்
அந்த நொடிப் பொழுதில் வந்து சென்ற பிரமிப்பை
நான் உணராமல் இல்லை! அந்த உணர்வுக்கு ஈடு இணை இல்லை!

விமானப் பணிப்பெண்களின் வழக்கமான நடைமுறைகளைக் கடந்து,
அந்த அலுமினியப் பறவை பறக்கத் துவங்க ஆயத்தமாக,
அதனுடன் சேர்ந்து என் பலநாள் கனவும்
ஜிவ்வென மேலே எழுந்ததாய் உணர்ந்தேன்!
பறக்க ஆரம்பித்த சில மணித் துளிகளின் உற்சாகம் அடங்கும் முன்பு
மகன் அகிலன் முகம் சற்றே துவளத் துவங்க
எனக்கு அடிவயிறு கலங்க ஆரம்பித்தது!
திடீரென வாந்தி எடுத்தான்!
முன்தினம் பட்ட அடி, அதற்காக போடப்பட்ட டி டி இன்ஜெக்சனின் வேதனை,
நடு இரவு முழிப்பு, அதிகாலை விமானப் பயணம்,
என ஒரு கலவையாக, அவனது இந்த நிலைமைக்கு
என்னால் அர்த்தம் புரிந்து கொள்ள முடிந்தாலும்,
இப்போது வேதனையெல்லாம் பாவம்
அவனுக்குத் தானே எனும்பொழுது "ஐயோ" என்று இருந்தது!
மும்பையில் இறங்கி, சிறு அவகாசத்திற்குள் தில்லி புறப்படும் விமானத்திற்கு
மாற வேண்டியிருந்தது! மும்பையில் மழைத் தூறிக் கொண்டிருந்தது!
சென்னையில் பணிக்கர் டிராவல்ஸில்
தில்லி சுற்றுப் பயணத்திற்கு டிக்கெட்ஸ் புக் செய்யும் பொது
அந்த அலுவலர் "ஜூலை, ஆகஸ்ட் பருவ மழை நேரம், மழை கண்டிப்பாக பெய்யும்" என்று சொன்னது, உண்மையாகிவிடும் போலத் தோன்றியது!
மனதுக்குள் எழுந்த வீண் கவலையை
மறைத்துக் கொண்டு, தில்லி விமானம் ஏறினோம்!

தில்லி இறங்கும் முன்பு, அந்த ஒரு சில நிமிடத் துளிகள்!
வார்த்தைகளில் சொல்லிட முடியாதது!
தலை நகரை அதன் தலை மேல் இருந்து பார்த்தது அப்படியோர் அழகு!
நல்ல வேலையாக மழை இல்லை!
வருண பகவானுக்கு ஒரு பெரிய நமஸ்காரம் போட்டுக் கொண்டு,
ஏர்போர்ட்டிற்கு வெளியே வந்தோம்! மணி காலை பத்து பத்து!
ப்ரீ பெய்ட் டாக்சி கவுண்டர் சென்று,
"கரோல் பாக்" என்று சொல்லி டோக்கன் வாங்கி,
டாக்சி நிறுத்தம் வந்தோம்! ஒரு அழுக்கு ஆம்னி வந்தது!
ஏறிக் கொண்டோம்! எனக்குத் தெரிந்த ஹிந்தியில்,
டிரைவர் நண்பரிடம், பேச்சுக் கொடுத்தேன்!
" வர்ஷா நஹி ஹே" என்று மழை இல்லையா?? என்பதை
கேட்டுப் பார்த்தேன்! அவர் என் ஹிந்தி உச்சரிப்பைக் கேட்டு
ஒரு கேவலப் பார்வைப் பார்த்தார்!

காரின் பின்னிருக்கையில் அமர்ந்திருந்த அகிலன்
முகம் வாடிப் போயிருந்தது! வியர்த்துக் கொட்டியது அவனுக்கு!
மறுபடியும் வண்டியிலேயே வாந்தி எடுத்தான்!
தில்லி டிராபிக் பயங்கரமாக இருந்தது!
கிட்டத் தட்ட 45 நிமிடங்கள் கழித்து, ஹோட்டல் வந்து சேர்ந்தோம்!
HOTEL GRAND PARK INN - கரோல் பாகின் மையப் பகுதியினில் இருக்கும்
ஒரு அழகிய மூன்று ஸ்டார் ஹோட்டல்!
"செக்கின்" செய்ததும், ரூமுக்கு சென்று அகிலனை படுக்க வைத்தோம்!
அசந்து தூங்க ஆரம்பித்தான்!
நான் கீழே சென்று ஒரு சாத்துக்குடி ஜூஸ் வாங்கி வந்து கொடுத்தேன்!
சரியாக ஒரு மூன்று மணி நேரத்
தூக்கத்திற்குப் பிறகு நார்மலாகத் துவங்கினான்!
எழுந்து நடக்க சற்றே சிரமப் பட்டாலும், முயன்றான்!
தெளிவாகத் தெரிந்தான்! கடவுளுக்கு நன்றி சொன்னோம்!
அன்றைய தினம் வேறு எந்த ப்ரோக்ராமும் இல்லாதிருந்தது
ஒருவகையில் நல்லதாகப் பட்டது!

மாலை, அருகில் இருக்கும்
ஜாண்டேவாலன் எனும் மெட்ரோ ரயில் நிலையம் சென்று
ஒரு மெட்ரோ பயணம் மேற்கொண்டோம்!
முழுவதும் ஏசி செய்யப் பட்ட வண்டி!
அடுத்த நிறுத்தம் பற்றிய அறிவிப்பு அழகாக
ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் வருகிறது!
உள்ளே ஏறும் போதும் வெளியே இறங்கும் போதும்
பயணிகள் கியூவில் நின்றே செல்கிறார்கள்!
ஒரு கணம் "கிண்டி ஸ்டேசன்" ஞாபகத்திற்கு வந்து சென்றது!
நம்மூரில் கியூவா? கிலோ என்ன விலை? என்று கேட்பது உரைத்தது!

இரவு ரூம் செர்விஸ் செய்ய சொல்லி,
ஒரு தந்தூரி சிக்கென் முடிச்சு கொடுதேன்!
நாங்கள் இருந்த ஹோட்டலுக்கு வெகு அருகாமையில்,
பணிக்கர் ட்ராவல்ஸ் பிக் அப் பாயிண்ட்டும் இருந்தது!
இல்லை இல்லை, பணிக்கர் ட்ராவல்ஸ் அருகில் இருக்கும் ஹோட்டல் தான்
வசதியாக இருக்கும் என முன் கூட்டியே முடிவு செய்திருந்ததால்,
இப்போது நடக்கும் தூரத்தில்,
அவர்களின் அலுவலகம் இருக்கவும் சந்தோசமாக இருந்தது!

மறுநாள் காலை, முதல் பயணம்!
தில்லி லோக்கல் சுற்று!
Qutib minar, Lotus Temple, Birla Mandir, Indira Gandhi Memorial,
Theen Murthi Bavan, Raj Ghat, Shakti Sthal, Veer Bhoomi,
Delhi Haat, India Gate, Rashtrapathi Bhavan, Parliment, Prime Minister's office
and Red Fort இன்னும் பலவும் சுற்றி வந்தோம்!
தில்லி சாலைகள் அவ்வளவு அழகு!
இரு புறங்களிலும் நேர்த்தியாக செதுக்கப்பட்டிருக்கும் சோலைகள்!
சுத்தமான வீதிகள் என, பார்க்கும் இடமெல்லாம்,
தலை நகருக்கே இருக்கும் மிடுக்கு தெரிந்தது!
நிறைவான மனதுடன், லோக்கல் பயணம்
முடித்துக் கொண்டு, இரவு ரூம் திரும்பினோம்!
மறு நாள், பகல் வேளையில்,
வாடகைக்கு ஒரு ஆட்டோவை அமர்த்திக் கொண்டு,
மீண்டும் ஒரு முறை,
Rashtrapathi Bavan, Parliment Building and Prime Minister's office
சென்று வந்தேன்! வரும் வழியில் ஷாப்பிங்கும் செய்தோம்!
அன்றைய தினம், இரவு எங்களது இரண்டாவது சுற்றுப் பயணம்
Rishikesh and Haridwar செல்வதற்கு தயார் ஆனோம்!

பணிக்கர் ட்ராவல்ஸின் அழகிய
வால்வோ பேருந்தில் சுகமாய் பயணம்!
நடு இரவில், ஒரு டாபாவில் நிறுத்தினார்கள்!
விடியற்காலை 3.30 மணிக்கெல்லாம் ரிஷிகேஷ் வந்து சேர்ந்தோம்!
ரிஷிகேஷ் - கயிலாயத்தின் முதல் அடி!
கங்கை பெருக்கெடுத்து கரை புரண்டு ஓடிற்று!
"லக்ஷ்மன் ஜூலா" எனும் தொங்கு பாலத்திலிருந்து கங்கையை பார்த்தால்
அதன் அழகேத் தனி! வடக்கத்திய கலாச்சாரம்
ஏகோபித்தமாய் அந்த பிரதேசத்தில் வியாபித்திருந்தாலும்
அதிலும் ஒரு மகோன்னதப் புனிதம் இருப்பதாகவே எனக்குத் தோன்றிற்று!
ராமஷ்வர் சுவாமியை தரிசனம் செய்தோம்!
ச்சொட்டி வாலா - வில் காலை பலகாரம்!
சுவாமி சிவானந்தா ஆஷ்ரமம், ராமன் ஜூலா
இன்னும் சில சிறு சிறு கோவில்கள் முடித்துக் கொண்டு,
ஹரித்வார் புறப்பட்டோம்!
வழியில் ஒன்பது சிவலிங்கமும் ஒரே இடத்தில் சங்கமித்து இருக்கும் இடம்
சென்று வழிபட்டோம்!
அரசு ஹேண்டி கிராப்ட் கடையில்,
ருத்ராக்ஷ மாலை வாங்கினோம்!
ஹரித்வார் - கங்கை மீண்டும் அதி அற்புதமாய் பொங்கி வழிந்துக் கொண்டு
ஓடி வரும் அழகு, கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது!
"கங்காஸ்நானம்" செய்தோம்!
மலை உச்சியில் இருக்கும், மானசா தேவி கோவிலுக்கு
Rope Car - இல் சென்றோம்!
கோவிலின் மேலிருந்து கங்கையைப் பார்த்தால்,
ஏறக்குறைய கயிலாயம் சென்று,
அங்கிருந்து சிவனின் தலையிலிருந்து பொங்கி வருவது போலிருக்கும்!
மலையின் கீழ் இறங்கியதும்
ஒரு சிறிய விடுதியில், வடக்கத்திய மதிய உணவை
முடித்துக் கொண்டு மீண்டும் தில்லி கிளம்பினோம்!
இரவு, கரோல் பாகில், ரமா கபேயில் தோசை சாபிட்டோம்!

ரூமில், மறுநாள் விடிகாலை ஆக்ரா பயணம் செல்ல, அலாரம் வைத்து விட்டு,
அயர்ந்து தூங்கி போனோம்! அதிகாலை, எழுந்து கிளம்பி,
வெளியில் வர முற்பட, மனோ சற்றே தூக்கலான மேக்கப் உடன்,
செருப்பை அணியச் செல்ல முனைகையில்,
தான் இன்னும் "நைட் பாண்டுடன்" இருப்பதை அறிந்து நொந்து போனாள்!
என்ன கொடுமை என்றால்,
சுடிதாரின் டாப் போட்டவள், பாட்டம் மாற்ற மறந்து விட்டாள்!

சரியாக காலை ஆறு மணிக்கு ஆக்ரா பயணம்!
முதலில், ஆக்ரா போர்ட் பார்த்தோம்!
முகலாய கட்டிட கலையின் ஆளுமை ஒவ்வொரு கல்லிலும் தெரிந்தது!
இங்கு தான், ஷாஜஹானை, அரண்மனைக் காவலில்
அவன் மகன் அவுரங்கசீப் வைத்திருந்ததாகவும்,
தான் தன் காதலி மும்தாஜுக்காக யமுனை ஆற்றின் கரையோரம் கட்டிய
"தாஜ் மஹாலை", இறக்கும் வரை மன்னன் ஷாஜஹான்
இந்த கோட்டையிலிருந்தே பார்த்து கழித்து வந்ததாகவும் சொல்கிறார்கள்!
இங்கிருந்து தாஜ் மஹால் வெறும் ஒரு கிலோமீட்டர் தான் என்றாலும்,
அதன் அழகு தனித்துவமாய் தெரிந்தது!
மதிய உணவிற்குப் பிறகு, ஆக்ராவில் சிறிய ஷாப்பிங் முடித்துக் கொண்டு,
தாஜ் மஹால் நோக்கி சென்றோம்!
ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு அப்பால்
பாட்டரியால் இயங்கும் வண்டியில் தான் செல்ல வேண்டும்!
மஹாலை நெருங்க நெருங்க,
வானமோ, மப்பும் மந்தாரமுமாக இருந்தது!
மழை கொட்டப் போகும் அத்தனை அறிகுறிகளும் ஆர்பாட்டமாய்த் தெரிந்தன!

நுழைவு வாயிலைக் கடந்து, அதன் பிரகாரத்தில் இருந்த படி,
இது வரை புகைப்படங்களிலும், திரைப்படங்களிலும்
பார்த்துப் பார்த்து பிரமித்த
தாஜ் மஹாலை முதன் முறையாக,
நேரிடையாக, கண்களுக்கு நேராய் பார்த்தேன்!
அந்த ஒரு நொடிப் பொழுதில்,
என்னுள் பயணித்த பல்லாயிரம் கோடி மின்னல்களின்
மின்சார பிரவேசத்தை என்னவென்று சொல்வது!
என் பிறப்பின் நோக்கம் நிறைவேறியதாக உணர்ந்தேன்!
இன்றளவும், உலக அதிசியங்களில் ஒன்றாய், அசைக்க முடியாதபடி
தாஜ் மஹால் இருக்குமேயானால்,
அதற்கான அர்த்தம் புரிந்தது!
நுழைவு மண்டபம் தாண்டி வெளியே வந்து,
மஹாலின் முன்புறமிருக்கும் தோட்டத்து பாதையினைக் கடந்து தான்,
தாஜ் மஹாலின் பிரதான பீடத்துக்கு வர முடியும்!
இறங்கி நடக்க முற்படுகையில்,
வந்ததே ஒரு பெரு மழை!
என் வாழ்க்கையில் அப்படியொரு ராட்சச மழையை சத்தியமாக
நான் பார்த்ததே இல்லை! கொட்டி தள்ளியது அந்த பேய் மழை!
இருந்தாலும், நாங்கள் அசரவே இல்லை!
முற்றிலுமாக, ஆனந்தமாக நனைந்தோம்!

மஹாலின் வசீகரம் ஒரு புறம்! மழையின் வசீகரம் மற்றொரு புறம்!
இவ்விரண்டு அழகுக் குவியலில் மொத்தமாய் மெய் மறந்து போனோம்!
கொட்டும் மழையினையும் பொருட்படுத்தாது
குறைந்தது நூறு புகைபடங்களாவது
எடுத்துத் தள்ளியிருப்பேன்!
எந்த பக்கம், எந்த கோணத்திலிருந்து பார்த்தாலும்,
அதன் தாக்கம் நம்மை விடுவதாயில்லை!

தாஜ் மஹால் - பிரபஞ்சத்தினில் என்றென்றும் சாகா வரம் பெற்று வாழும்!
அந்த இடத்தை விட்டு வருவதற்கு மனசே இல்லாமல்,
கிளம்பி வந்தோம்! வரும் வழியெல்லாம் அதன் நினைவு என்னை ஏதோ
அமானுஷ்யமாக வசியம் செய்து வந்தது என்பது தான் உண்மை!
காதல் எனும் ஒரு ஒற்றைச் சொல்,
அங்கே தான் உயிருடன் இருப்பதாய் உணர்ந்தேன்!
என்னைப் பொறுத்தவரை,
காதலுக்கு மரியாதை செய்யும், அல்லது செய்யத் துடிக்கும்
ஒவ்வொருவருக்கும், அந்த ஜீவ சமாதி, ஒரு கலைக் கோயில்!

மனோவை, நான் முதல் முதலாய், பெங்களுருவில் சந்தித்த,
அந்த தருணம் தொட்டு, இன்று வரை எங்களை
பிணைத்து வைத்திருக்கும் அந்த மயாசக்தியே காதல்!
என் காதல் பாசாங்கு இல்லாதது! பொய் உரைக்காதது!
அந்த காதலின் பரிசாக எங்களுக்கு கிடைக்கப் பெற்றிருக்கும்
மகன் அகிலனோடு, தாஜ் மஹால் சென்று வந்தது கூட,
அந்த காதல் செய்யும் மாயம் தான்!
காதல் எதுவும் செய்யத் தூண்டும்!
காதல் எதையும் சாதிக்கத் தூண்டும்!
காதல் மகத்துவமானது!
ஆதலின் காதல் செய்வீர்! எங்கும் சந்தோசம் பொங்கச் செய்வீர்!

இரவு தில்லி திரும்பியதும்,
கரோல் பாகில் உள்ள, பிகினர்வாளாவில் உணவை முடித்து கொண்டு,
ரூம் திரும்பினோம்!
மறுநாள், எங்களது பயணத்தின் கடைசி நாள்!
மதியம் ஒரு மணிக்கு மும்பை பிளைட்!
ஹோட்டல் சிப்பந்தியாளர்களுக்கு வெகுமதிகள் கொடுத்துவிட்டு,
பிரியா விடையுடன், சென்னைக்கு புறப்பட்டோம்!

இன்றோடு 20 நாட்கள் ஓடிபோய் விட்டன!
நாங்கள் தில்லி சென்று வந்து!
என்றென்றும் எங்களது நினைவில் பசுமையாய்,
அதன் தாக்கங்கள் வாசம் செய்யும் என்பதில் ஐயமில்லை!


Comments

Popular posts from this blog

பண்ணப் பழகடா பச்சை படுகொலை...!

வயசாயிடுச்சில்ல...!

கட்டுமரம்