Monday, August 26, 2013

என்றென்றும் உன் நினைவுகளில் . . . !


 பாரதி!

அப்பாவின் மூத்த மகன்!
அம்மாவின் செல்ல மைந்தன்!
தம்பி தங்கைகளின் அன்புச் சகோதரன்!
எங்களுக்கு எல்லாமுமாம் இருந்தவன்!
முப்பது வயதுக்கு முன்பே இறந்தும் போனவன்!

பாரதி யாரவன்?
அவன் ஒரு தனி மனிதன் மட்டும் தானா?
இல்லை! இல்லை!
அவன் ஒரு சரித்திரம் தாண்டிய சகாப்தம்!

ரத்தமும் சதையுமாய் இயங்கி வந்த
ஒரு உன்னத மனிதனை
காலன் அவசர அவசரமாய் அழைத்துக் கொண்டு போய்
இதோ வருடங்கள் பதினான்கு ஓடிப் போய்விட்டன!

அப்பா தான் அவனுக்கு எல்லாம்!
அவனை அப்பாவும், அப்பாவை அவனும்,
உயிருக்கு உயிராய் நேசம் செய்தது
கூடவே இருந்த எங்களுக்குத் தான் தெரியும்!

அப்பா, தன மகன்  என்னவெல்லாம் ஆக வேண்டுமென
கனவு கொண்டிருந்தாரோ,
எல்லாவற்றையும், ஒன்று விடாமல்
செய்து முடித்தான் என்றால்
அது மிகையில்லை!

தேவகோட்டையில் "டி பிரிட்டோ",
காரைக்குடியில், "எல் எப் ஆர் சி "
குழித்துறையில் அரசுப் பள்ளி!
திருச்சியில் உருமு தனலக்ஷ்மி மற்றும் புனித வளனார் பள்ளி ...!

என அவன் படித்த பள்ளிகளில் எல்லாம்
வகுப்பில் முதல் மாணவனாய்த் திகழ்ந்தது  மட்டுமின்றி,
கலை இலக்கிய போட்டிகளிலெல்லாம் கலந்து கொண்டு,
அனைத்திலும் சிறப்பிடம் பெற்றுத் தேர்ந்தான்!

மகாகவி பாரதியாய்
கார்முகில் கண்ணனாய்
தேசப் பிதா காந்தியாய்
இன்னும் பலவுமாய் பள்ளி மாறுவேடப்  போட்டிகளில்
அவன் தரிக்காத வேடமில்லை!

பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு
பொது தேர்வுகளில் இரெண்டிலும்
பள்ளியின் முதல் மாணவனாய் வந்தாலும்
அதன் பின்னணியில் அவன் பட்ட சிரமங்கள்
ஒன்றல்ல இரெண்டெல்ல ...!

பத்தாம் பொதுத் தேர்வின் பொழுது
அவனுக்கு பெரியம்மை கண்டிருந்தது!
ரிக்ஸா வண்டியில் பள்ளி சென்று
தனித்து தேர்வு எழுதினான்!
அம்மை குணமானதும்
சமயபுரத்துக்கு வேண்டிக் கொண்டு
ஐம்பத்திரண்டு வாரங்கள்
பிரதி ஞாயிறு சென்று வந்து கொண்டிருந்தான்!

பன்னிரெண்டாம் வகுப்பு வேதியியல் பொதுத் தேர்வு
எழுதும் பொழுது, பள்ளி செய்த சிறு குளறுபடியால்
நேர அவகாசமின்றி, கடைசி வினாவொன்றை
தான் விட்டுவிட்டு வந்ததால்
அவன் குமுறிக் குமிறி அழுது கொண்டு வந்தது
இன்னும் எனக்கு ஞாபகம் இருக்கிறது!

அவன் படித்த காலங்களில்
நாங்கள் திருச்சி செக்கடிச் சந்தில்
பாப்பாக்கா வீட்டில் வசித்து வந்தோம்!
அது ஒரு குடிசை வீடு!

இடுக்கு முடுக்குமான மாடிப் படிகளில்
சிலேட்டும் பலப்பமுமாய்
பார்க்கும் நேரமெல்லாம் படித்துக் கொண்டே இருப்பான்!
விடுமுறை நாட்களில்
வீட்டின் பின்புறமுள்ள டவுன் ஸ்டேசனில்
பிளாட்பாரத்தில் மரங்களின் நிழலில்
எங்களையும் அழைத்துக் கொண்டு படிப்பான்!

பாடப் புத்தகங்களைத் தவிர
பொது அறிவுப் புத்தகங்களையும்
நாவல்களையும் விரும்பி வாசிப்பான்!
சுஜாதாவும் ஜெயகாந்தனும்
அவன் எங்களுக்குச் சொல்லிக் கொடுத்தது தான்!

குமுதம் ஆனந்த விகடன்
என்றால் உயிர் அவனுக்கு!
அவை வரும் நாட்களில் கடைக்கு
முதல் ஆளாய் போய் நிற்பான்!

கண் பார்வையில் சிறு வயது தொட்டே
அவனுக்கு குறைபாடு இருந்து வந்தது!
சோடாபுட்டி மாதிரி கண்ணாடி தான் அணியவேண்டுமானாலும்
அதை பத்தியெல்லாம் அவன் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை!
சொல்லப் போனால் கண்ணாடியுடன் இருந்தால் தான்
எங்களுக்கு அவன் அழகனாய்த் தெரிந்தான்!

முகத்தில் அடிக்கடி பருக்கள் அவனுக்கு வருவதுண்டு!
அதை எந்நேரமும் நோண்டிக் கொண்டே இருப்பான்!
கண்ணாடியை கழட்டி வைத்து விட்டு
ஒரு மாதிரி கோணப் பார்வைப் பார்த்துக் கொண்டு
அவன் நோண்டுவது ஏதோ நேற்றுப் பார்த்தது போலிருக்கிறது!

கிடைத்த இடங்களிலெல்லாம் விரல்களிலேயே
தாளம் போடுவான்! கவிதைகள் எழுதவான்!
எதுவும் செய்ய இல்லாவிடில்
எதையோ யோசித்துக் கொண்டே இருப்பான்!
வாழைப்பழம் விரும்பி உண்பான்!
இரவு எந்த நேரமேயானாலும்
அப்பா பிரியப்பட்டால் வாழைபழம்
வாங்க ஓடி விடுவான்!

பிளஸ் டூவில், பள்ளியின் முதல் மாணவனாய்
அவன் வந்ததும், அவன் பெயர்
பள்ளி முதல்வர் அறையில்
ஒரு வருடம் முழுதும் எழுதப் பட்டிருந்ததும்
என் அண்ணன் பாரதி என்று
சொல்லிக் கொண்டு பெருமையுடனும் கர்வத்துடனும்
வலம் வந்ததும் இன்னும் பசுமையாய் நெஞ்சில் உறைந்துப் போயிருக்கிறது!

பள்ளிக் காலம் முழுதும்
பிளாஸ்டிக் கூடையிலேயே புத்தகங்கள்
கொண்டு சென்று வந்தான்!
அதற்காக அந்த கூடைக்குத் தான் பெருமையாய் இருந்திருக்கும்!
இன்னும் நினைவிருக்கிறது, ஒரு கரும் பச்சையும் கருப்பும்
கலந்து பின்னப்பட்ட கூடை அது!

1113 மார்குகள், அவன் வாங்கியது பிளஸ் டூவில்!
RECT யில் அவன் தேர்வானதும்,
மாநில அளவில் அவன் முதல் பத்து இடங்களில் ஒருவனாக
வெற்றி பெற்று இருக்கிறான் எனத் தெரிய வந்தோம்!

REC வளாகத்தில்,
கவுன்சிலிங் சமயத்தில்
தேர்வாளர் அவன் கேட்கும் எந்தத் துறையும்
கொடுக்கத் தயாராய் இருந்த போதும்
அப்பா சொன்னார்கள் என்பதால்
அப்பாவுக்கு  பிடிக்கும் என்பதால்
சிவில் இன்ஜினியரிங் தேர்ந்தெடுத்தான்!

08.08.88 - அவன் கல்லூரியில் அடி எடுத்து
வைத்த தினம்!
அவன் படித்த நான்கு வருடங்களும்
நாங்களும் கூடப் படித்தது போல ஒரு உணர்வு!
வருடம் தோறும் நடை பெறும்
FESTEMBER அப்போதெல்லாம் மிகப் பிரபலம்!
அவனது வகுப்புத் தோழர்கள்
பலரை எங்களுக்கும் தெரியும்!
பீட்டர், பால், மாலினி, பிரகாஷ் இப்படி பலர்!

கல்லூரி இறுதி ஆண்டில்
All over performance பரிசு மற்றும் முதல் இடத்துக்கான Gold Medal - ஐயும்
அவனே தக்க வைத்துக் கொண்டான்!
எட்டாவது செமஸ்டர் முடியுமுன்னே
campus interview - வில் Larsen &Toubro அவனுக்கு வேலை கொடுத்தது!

1992 - இல் இன்ஜினியரிங் முடித்ததும்
வேலை நிமித்தமாக அவன்
ஒரிசாவுக்கு செல்ல வேண்டி இருந்தது!
Jharsaguda எனும் ஒரு வறண்ட பிரதேசத்தில்
சிமெண்ட் தயாரிக்கும்  ஆலை ஒன்றை
அவனது கம்பெனி நிறுவிக் கொண்டிருந்தது!

குருவிக்கூடு போல நாங்கள் வளர்ந்து வந்ததனால்
அவனைப் பிரிந்து எங்களால்
ஒரு நாள் கூட இருக்க முடியாது போனாலும்
அவனுடன் தினமும் பேசுவது போல
நாளுக்கொரு கடிதம் நாங்கள் நால்வரும்
ஆளுக்கொருநாள் என வரிசைப்படி எழுதி கொள்வோம்!
அவனும் அங்கிருந்து தினமும் ஒரு போஸ்ட் கார்டை
எங்களுக்கு அனுப்பிக்கொண்டிருந்தான்!

ஒரிசாவில் அவன் இருந்த போது
அவனுக்குப் புதிதாய் உடம்பில் ஒரு பிரச்சினை வந்தது!
கால் விரல்களில் இருந்து
வெட்டு பட்டது போல இரத்தம் அடிக்கடி
கசியத் தொடங்கும் எனவும்
அதுவே பின்னர் பாதம் முழுமையும்
பரவிக்கொண்டது என்றும் அறிந்து
அவன் பிறிதொரு முறை ஊருக்கு வந்த போது
டாக்டர் பாலாஜியிடம் காண்பித்து அனுப்பி வைத்தோம் !
காண்பித்த முதல் மாதத்திலேயே
அது ஆறிப் போனதாய் ஞாபகம்!
அதனால், இன்றும் எங்களுக்கு
டாக்டர் பாலாஜி மீது ஒரு மரியாதை உண்டு!

மாமா கந்தசாமியின் உதவியால்
அவனுக்கு சென்னைக்கு மாற்றல் கிட்டியது!
சென்னை வந்ததும் ராமாவரம் அருகிலிருக்கும் அவனது
அலுவலகம் மிக அருகாமையில்
S & S - ஸ்டாப்புக்கு எதிரே சபரி நகரில்
அவனது அலுவலக சகாக்கள் நால்வருடன் தங்கி இருந்தான்!
நம்பர் ஐந்து சபரி நகர் மறக்க முடியாத முகவரி!

பின் சில மாதங்களில் தனியாய் ஒரு வீடு பிடித்து
அங்கே குடி போனான்!
அப்பா, அவன் கஷ்டப் படக்கூடாதென்று
அம்மாவை அவனுடன் இருக்க
அனுப்பி வைத்தார்கள்!
ஊரில், லக்ஷ்மிதான் என்னையும் அப்பாவையும் பார்த்துக் கொண்டாள் !

ஆபீஸுக்கு ஒரு சைக்கிளில் தான் செல்வான்!
விடுமுறை நாட்களில் அம்மாவை
வாராவாரம் ஒரு இடம் என்று
சென்னை முழுதையும் கூட்டிச் சென்று காண்பித்தான்
என்று அம்மா  இன்னமும் சொல்வாள்!

அப்பாவின் இஷ்ட புத்திரனாய் திகழ்ந்த
அவனுக்கு அப்பாவே ஒரு பெண்ணைப் பார்த்து
ஏறக்குறைய நிச்சயம் செய்து வந்து,
அவனிடம், "பாரதி, அந்த பெண் உன்னை பார்க்க வேண்டும்"
எனப் பிரியப் படுவதாகச் சொன்னார்கள்!
எந்த மறுப்புமின்றி, அப்பாவின் ஆசைப் படி,
எங்கள் அண்ணியை மணமுடிக்க சம்மதித்தான்!

அவனது திருமணம் ஒரு அழகிய தமிழ் முறை திருமணம்!
மூன்று மதப் பெரியவர்களால் ஆசிர்வதிக்கப்பட்டு
மாமாவின் தலைமையில் 1997 ஆம் ஆண்டு நடை பெற்றது!

அண்ணி லக்ஷ்மி தேவி,
அவனுக்கேற்ற சரியானத் தேர்வாகவே இருந்தார்கள்!
"எங்கள் இல்லத்துக்கு ஒளியேற்ற
வந்த மகாராணியே, எங்களை வழி நடத்து"
என அவர்கள் போரூர் அபிராமி வீட்டிற்கு
வந்த பொழுது நாங்கள் அவர்களை வரவேற்றோம்!

அன்பும் ஆனந்தமும் பரவிக் கிடந்த அந்த வீட்டில்,
அண்ணி தாய்மையுற்று இருந்த வேளையில்,
 ஏழு மாதங்கள் கடந்த நிலையில்,
அண்ணிக்கு பிரசவ வேதனை வந்து
குறை மாத சிசுவை ஈன்று எடுத்தார்கள்! ஆனால்,
கடவுளின் விருப்பம் வேறாய் இருந்தது!
அந்த குழந்தை, அப்பாவால் முன்பே "சண்முகராஜன்"
என நாமகரணம் சூட்டப்பட்ட குழந்தை,
பிறந்த இரெண்டே நாட்களில்
எங்களைப் பிரிந்துச் சென்றது!
அந்த இழப்பு ஆறா ரணத்தை 
பாரதியின் மனதிலும் அண்ணியின் மனதிலும் ஏற்படுத்தியது!

அந்த சம்பவமும்,
அதைத் தொடர்ந்து அடுத்த எட்டு மாதங்களில்
கடந்து போன சம்பவங்களையும்
விவரிக்கும் கல் மனசு எனக்கில்லை!


அப்பாவைப் பொருத்தவரை,
"பாரதிக்கு இனியெல்லாம் அண்ணியே"
என்ற எண்ணம் மேலோங்கி இருந்தாலும்,
பாரதிக்கோ, அவனது திருமணம்
எங்களிடமிருந்து அவனை பிரித்து போன
ஒரு துயரமாகவே அவன் எண்ணியிருக்கக்கூடும் !
எத்தனை தான் அண்ணியிடத்து அவன்
பிரியமாக இருந்து வந்தாலும்
அவன் மனதில் எங்கோ ஒரு இடத்தில்
எங்களுக்கு எல்லாம் அவன் துரோகம் செய்துவிட்டதாகவே
நினைத்து கொண்டே இருந்து இருக்கிறான்!

காலனின் கோர தாண்டவம்
உக்கிரமாக எங்கள் வீட்டில் நடந்தேறியது!
சிறு ஊடலின் காரணமாய்
அண்ணி விபரீத முடிவைத் தேடிக்கொள்ள,
சற்றும் அதனை எதிர்பாராத அவனும்
அந்த முடிவினில் தன்னையும் ஈடுபடுத்திக்கொள்ள
அது ஒரு கருப்பு தினமாகிப் போனது !

விபத்தின் தீவிரம் காரணமாக,
அண்ணி எங்களையும், அவனையும்
இரு நாட்களில் பிரிந்து போனார்கள்!
அதிக விழுக்காடு வேதனையில்
தன்னிலை மறந்த நிலையில்
பாரதி வெறும் உயிரை மட்டும் வைத்துக் கொண்டு
அடுத்த மூன்று மாதங்கள்
போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில்
போராடி வாழ்ந்து வந்தான்!

1999 ஆம் வருடப் பிறப்பு
எங்களுக்கு இன்னும் சில மணி நேரங்களில்
ஒரு பேர் அதிர்வை தரப் போகிறது
என்பதறியாது நாங்கள்
அன்றைய தினமும் அவனக்கு வேண்டிய
பணிவிடைகளைச் செய்து கொண்டிருக்க,
மதியம் 2.30 மணியளவில்,
அவனது அருகாமையில் நான் மட்டும் உடனிருக்க
என் கண் முன்னேயே அவனது
உயிர் பிரிந்து போனது!
நாங்கள் அனைவரும் இடிந்து போனோம்!

அன்றிலிருந்து இன்று வரை ஏதோ ஒரு சக்தி
எங்களை உயிர்த் தாங்கியிருக்க செய்கிறதென்றால்;
எங்களுக்கு மருதுவையும், மனோவையும்,
பிள்ளைகள் அறிவையும், அகிலனையும்
கொண்டு வந்து சேர்த்திருக்கிறதென்றால்;
சந்தோசமும் வளமுமான வாழ்க்கையினை
நித்தமும் கொடுத்துக் கொண்டிருக்கிறதென்றால்;
அது அவனின் ஆசிர்வாதமேயின்றி வேறொன்றுமில்லை!

அவன் இறுதியாய் வாழ்ந்த வீட்டில்
அவன் சுவாசித்து நிரப்பிய புண்ணிய மனையில்
அவன் இன்னும் எப்போதும் என்னுடனே இருந்து
என்னை நடத்திச் செல்லவிருக்கிறான்
என்ற திருப்தியோடு மனசார உளமார
மீண்டும் "அபிராமியில்" குடியேற இருக்கிறேன்!

உன் ஸ்பரிசம் இன்னும் என்னில் ஒட்டிக்கொண்டுதானடா இருக்கிறது!
அப்பாவிற்கு ஒரு வாசமுண்டு;
உனக்கும் ஒரு வாசமுண்டு!
அந்த வாசங்களுக்கு ஈடு இணை ஏதுமுண்டோ?
நம் பாசங்களின் ஆத்மார்த்தமாய்
நமக்குள் என்றும் தங்கிவிட்ட அந்த வாசங்களைப்
நாசிகளில் மட்டுமல்லாது உணர்வுகளாலும் முகர விழைகிறேன்!

இறப்பற்காகவே பிறக்கிறோம் என்றாலும்
பிறந்து விட்டோம் என்பதனால்
கடமைகள் எத்துனைதான் அழைத்தாலும்
எஞ்சியுள்ள காலங்கள்  முழுமையும்
என்றென்றும் உன் நினைவுகளில் இருந்து விட்டு போகிறேன்!

"பாரதி" மீண்டும் வா!
உன்னைக் காண ஆவலாய் இருக்கிறேன்!
வா! வந்து, மகன் அகிலனுக்கு பாடம் சொல்லிகொடு!
என் கையைப் பிடித்துக் கூட்டிச் செல்!
முடிவிலிகளாய் நம் தருணங்கள் தொடரட்டும்!
"அபிராமி" என்னை மீட்கட்டும்!


இப்படிக்கு
வாஞ்சையுடன் மணிப்பயல்!
 

Tuesday, August 6, 2013

கடவுளின் சொந்த நாடு !
சமீபத்தில் கேரளா சென்று வந்தேன்!
ஒரு வேலை நிமித்தமாக, எர்னாகுளம் வரை !

நண்பர் ராஜேஷ் அவரது "புதுசேரி இல்லத்தில்" தங்கிக் கொண்டு,
கேரளாவின் முக்கிய சில பகுதிகளை கண்டு வந்தேன்!

குருவாயூர் கோவில், மமியூர் கோவில்,
அதிரம்பள்ளி நீர்வீழ்ச்சி, வாழச்சால் நீர்வீழ்ச்சி ,
குமரகம் ஏரி,
கொச்சி துறைமுகம், "லு லு" மால்,
சாவக்காடு கடற்புறம் என்று சுற்றி வந்தேன்!

கேரளா!
பிரபஞ்சத்தின் பிராணவாயு உற்பத்தியாகும் பிரதேசம் எனலாம்!
எங்கெங்கு காணினும் இயற்கை,
சிறுமியாய் , குமரியாய், அழகியாய் , ராட்சஸியாய்,
அழகிகளின் அவதாரங்களாக என்னை படுத்தி எடுத்தது என்பதே உண்மை!

போய் வாருங்கள்!
புத்துணர்வு நிச்சயம்!
ஆஞா...!

கணபதியாப்பிள்ளை என் அம்மா வழி தாத்தாவின் பெயர்! நாங்கள் செல்லமாக "ஆஞா" என்றே அழைப்போம்! 80 களிலிருந்து அவரது இறுதி மூச்சு...