Monday, October 24, 2016

தோழர் முரளி ...!


தோழர் முரளி ...!

மிஞ்சிப் போனால் என்ன ஒரு வருடம் இருக்குமா..?
எனக்கு அவரும்; அவருக்கு நானும் அறிமுகமாகி...!
ஏதோ பல வருடப் பழக்கம்போல் உணர்வு மேலிடத்தான் செய்கிறது,
ஒவ்வொரு முறை அவரிடத்து பேசும் போதும், பழகும் போதும்!

நண்பர்கள், நல விரும்பிகள் என எல்லோரையும் போல
சிநேகிதர்கள் பலர் என் வாழ்க்கையிலும் வந்து போனாலும்,
பெரியதாய் சொல்லிக் கொள்ளும் படியாக
ஒரு நட்பு வட்டாரம் எனக்கு இருப்பதாகத் தெரியவில்லை!
அதற்கு காரணமாக இந்தத் தலைமுறை சங்கடங்களை
குற்றம் சொல்வதா இல்லை சொல்லாமல் விடுவதா? புரியவில்லை !
பால்ய காலத்திலிருந்தே விரல் விட்டு
எண்ணி விடும் அளவுக்குத் தான் நண்பர்கள்  எனக்கு!
பள்ளி பிராயத்திலிருந்தே, நண்பன் ஜோ!
கல்லூரி காலத்திலிருந்து, நண்பன் பிராங்க்ளின்,
பணியிடத்தில், நண்பர் ராஜேஷ்!
இப்பொழுது வசிப்பிடத்தில் தோழர் முரளி!

எங்களது முதல் சந்திப்பு,
இன்னும் எனக்கு பசுமையாய் நினைவிருக்கிறது...!
அது ஒரு சிறு தூறல் பெய்து கொண்டிருந்த முன்பனிக் காலம்!
வசிக்கும் குடியிருப்பின் பொதுப் பணிகளில்
என்னை அதிகமாய் ஈடுபடுத்திக்கொண்டிருந்த காலம்!
கண்காணிப்பு குழுவுடன் தீவிர விவாதத்தில் நான்!
கண்களில் எச்சரிக்கையும், நடையில் அமைதியும், தோற்றத்தில் ஆளுமையும் என கலவையாய்
கைகளில் குடையுடன் அவர்!
ஓரிரு வார்த்தைகள் பேசியிருப்போம்!
எங்களுக்கும் பரஸ்பரம் புரிந்து கொள்ள
அந்த ஓரிரு வார்த்தைகள் போதுமானதாக எங்களுக்குள்
சங்கேதப் பரிமாற்றம்தனை  அரங்கேற்றியிருக்க வேண்டும்!
அதுவும் எங்களுக்கும் அறியாமலேயே ஏற்பட்டிருக்க வேண்டும்!

அதைத் தொடர்ந்து,அவரது துணைவியாரிடத்து
என் மகன் கணிதப்பாடம் சொல்லிகொள்ள சென்றதும்,
குழந்தைகள் தின விழாவில்,
அவர்கள் இருவரையும் தம்பதி சமேதம் தலைமை தாங்க நான் அழைத்ததும்,
குடியிருப்பு பொது விவாதங்களில் எங்கள் இருவரது கருத்துகளும்
ஒரே அலைவரிசையில் பயணிக்கத் தொடங்கியதும் என
இப்படி பல்வேறு ஞாபகங்கள்
இந்த ஒரு வருடத்தில் ஒவ்வொன்றாய் என்னுள்
பிரளயமாய் புறப்பட ஆயத்தமாகிறது!
எல்லாவற்றிற்கும் மகுடம் வைத்தது போல
அமைந்தது தான் அவரது அறுபதாம் பிறந்த நாள் விழாவும்
அந்த விழாவில் அவர் எழுதி வெளியிட்ட
இரு ஆங்கிலப் புத்தகங்களின் வெளியீடுகளும் !
விழாவைத் தொகுத்து வழங்க அவர் என்னை
அன்பாய் கேட்டுக் கொண்டதும்!
எங்களுக்குள் புலரத் துவங்கியிருந்த புரிதலுக்கு
மற்றுமொரு முத்தாய்ப்பான வாய்ப்பாக
அந்த நிகழ்வு யதார்த்தமாய் நடந்தேறியது!

தோழமை என்பது வயது பாராதது!
பின்புலம் ஆராயாதாதது !
இனம், மொழி, பேதமை அறியாதது!
அது எங்கோ, எதிலோ எப்புள்ளியிலோ துளிர்ப்பது!
அன்பை மட்டுமே பிரதிபலன் பாராமல் பரிமாறிக் கொள்ளச் செய்வது!
நட்பை மாத்திரம் சுயநலமின்றிக் போற்றி பாராட்டுவது!
அந்த உணர்விற்கு உருவகம் கொடுக்க இயலாது!
அனுபவிக்க மட்டுமே இயலும்!


தோழர் முரளி உடன் கூட,
புதிதாய் துவங்கியிருக்கும் நட்பெனும் எனது பயணம்
இனிவரும் காலங்களில் இன்னும்
பல்வேறு பரிணாம வளர்ச்சியடையும்
என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளவனாகனாக
இதோ, நாளைய விடியலின் பாதையில்  பயணிக்க முற்படுகிறேன்!


Friday, July 29, 2016

கபாலிவெகுஜன, இணைய, பத்திரிக்கை மற்றும் வாய்ச்சொல்
விமர்சனங்களை புறந்தள்ளிவிட்டு
திறந்த மனதோடு கபாலி படம் பார்க்க நேற்றுச் சென்றிருந்தேன்!
கனத்த மனதோடு திரும்பி வந்தேன்!

இப்படி ரஜினியைப் பார்த்து தான்
எவ்வளவு நாளாயிற்று!
சிறையில் புத்தகம் படிப்பதில் துவங்கி
இறுதியில் நிறைவாய் தன் குடும்பத்தினருடன்
மனதிற்குப் பிடித்தமான வாழ்க்கையைத் வாழத் துவங்கும் வரை
எவ்வளவு இயல்பாய், நேர்மையாய், யதார்த்தமாய்
அந்த கதாபாத்திரம் பயணிக்கிறது!!
"தன் அன்பு மனைவியைத் தேடுதல்"
எனும் ஒற்றை நோக்கத்திலிருந்து துளியும் பிறழாமல்
கண்ணில் தேடலையும் நெஞ்சில் வலியையும்
நடை உடை பாவனையில் மிடுக்கையும் தவற விடாது
அடுத்தடுத்த காட்சிகளில்
தன்னுடன் இருப்பவர்கள் முதல்
தன்னை திரையில் பார்க்க வந்திருக்கும் ரசிகர்கள் வரை
அனைவரையும் தன்னோடு அரவணைத்துச் செல்ல
வைத்திருக்கும் படியான ஒரு ஈர்ப்பினை
படத்தின் ஜீவநாடியாய் உலவ விட்டிருப்பத்தில்
இயக்குனர் பா ரஞ்சித் தன்னை அடுத்த கட்டத்திற்கு
எடுத்துச் சென்றிருப்பதில் வெற்றியும் கண்டிருக்கிறார்
என்றால் அது மிகையில்லை!

இது ரஜினி படமா இல்லை ரஞ்சித்தின் படமா என்றால்
என்னைப் பொறுத்த வரையில் இது ஒரு நல்ல படம்!
ரஜினியை அவரது வயதொத்த கதாபாத்திரமாய்
வாழச் செய்திருக்கும் ஒரு அரிய படம்!
எவ்வித எதிர்பார்ப்புகளுடன் இல்லாது சென்று வந்தால்
இது ஒரு மிகச் சிறந்த வெற்றிப் படம்!
Thursday, July 21, 2016

ஏலே மக்கா...!

"ஆச்சிக்கு வயது 97 நடக்கிறது!
இப்பொழுதெல்லாம் அவர்களுக்கு முன்பு போல முடிவதில்லை!
கண்கள் ஒத்துத்துழைத்தாலும் காதுகள்...?
அடிக்கடி "சிவ சிவா"வைத் தவிர
வாயும் அதிகம் வார்த்தைகளை உதிர்ப்பதில்லை!
அவர்களால் முடிந்தால் அழைத்து செல்லுங்கள்!"
மாமா சென்ற திங்கள் சொன்னது இன்னமும்
என் காதுகளில் ஒலிக்கத் தான் செய்கிறது!

இருந்தாலும் பிடிவாதமாய் வீட்டிற்கு கூட்டிக் கொண்டு வந்தேன்!
அப்போது தெரியாது இதுவே ஆச்சியின் இறுதி வருகை என்று..!
என் வீட்டில் அவர்கள் கடைசியாக இருந்து சென்ற
அந்த இரெண்டு நாட்களில்
அவர்கள் நின்றதும், நடந்ததும், பேசிய ஓரிரு சொற்களும்
பசுமையாய் ஞாபகத்தில் இன்னும் இருக்கிறது!
தலையில் பொடுகோ அல்லது பேனோ
அவர்களை அதிகம் படுத்தி இருக்க வேண்டும்,
"கோலம் இங்கே கொஞ்சம் தலையைப் பாரு"
அரை ஜீவனாய் தன் மகள் பெயர் சொல்லி அவர்கள் ஒலிக்க,
நெற்றிச் சுருக்கங்களை இறுக்கமாய்
பற்றிக் கொண்டிருக்கும் விபூதி,
விடாமல் தலையை சொறிவதால்
சற்றே கொஞ்சம் மங்கித் தெரிந்தது!

ஆச்சி ஒரு வைராக்கிய பெண்மணி!
தெற்கில் குமரி மாவட்டத்தில் பிறந்ததனாலோ என்னவோ
குமரி அன்னையின் பெயர் "பகவதி"
என்பது அவர்களுக்கு நாமகரணம் செய்யப் பட்டிருக்க வேண்டும்!
வீ கே புரம் மற்றும் பாபநாசம் ஊர்களில்
அவர்கள் அந்த காலங்களில்
தன்னைக் கரம் பிடித்த இல்லறத் துணையோடு
மானசீகமாய் காதல் வாழ்க்கை வாழ்ந்திருக்க வேண்டும்!
அந்த உன்னதக் காதலுக்கு
தெய்வசாட்சியாய் மொத்தம் பத்துப் பிள்ளைகள்!
கணவன் அருகாமைத் தொழிற்சாலைக்கு சென்று
கொணர்ந்து வரும் சொற்ப வருமானத்தை வைத்துக் கொண்டு
வீட்டில் குழந்தைகளை குறிப்பாக பெண்பிள்ளைகளை
தோளிலும் மாரிலும் மாறி மாறி
தூக்கி வளர்த்து அவர்களை கரை சேர்ப்பது என்றால் ..?

ஆசைக் கணவனை பல வருடங்களுருக்கு முன்பே இழந்த போதிலும்
மக்கள்மாரை அரவணைத்து வாழத் தெரிந்து,
தான் என்றும் மற்றவர்களுக்கு சுமையாய் ஆகிவிடக் கூடாதபடி
இயன்றவரை தன்னால் ஆன உதவிகளை
நித்தமும் செய்து கொண்டு
சோர்வு என்பதை என்றும் கண்டறியா குணவதி!
அளவான உணவுப் பழக்கமுறை,
அளவில்லா தெய்வ நம்பிக்கை,
இருக்கும் இடம்தெரியா சாந்தம்,
வீட்டிற்கு யார் வந்து புறப்பட்டாலும்
வாசலையும் தாண்டி வந்து வழியனுப்பும் பாங்கு,
இன்னும் இப்படி எத்தனையோ நற்குணங்கள்
ஒன்றா இரெண்டா சொல்லிக்கொன்டே போகலாம்!
கண்டிப்பாக அவர்கள் ஒரு வைராக்கிய பெண்மணிதான்!

இறப்பதற்கு மூன்று மணிநேரம்
முன்பு வரை முழுமையாய் இயங்கி வந்த அந்த ஜீவன்
ஒரு நூற்றாண்டை இன்னும் மூன்றே வருடங்களில்
கண்டு கொண்டிருக்க வேண்டிய அந்த ஆத்மா
போதும் என விடைபெற்றுக் கொண்டு
இதோ மூன்று வாரம் ஆகிவிட்டது!

மூன்று தினங்களுக்கு முன்பு
ஆச்சி கடைசியாய் வாழ்ந்த வீடாம்
எனது மனைவியின் தாய் வீட்டிற்கு செல்ல நேர்ந்தது!
வழக்கத்துக்கு மாறாக ஒரு அமானுஷ்ய அமைதி
பரவலாய் அங்கு இருப்பதை மறுப்பதற்கில்லை!
கலகலப்பாய் இருப்பவர்கள் மட்டுமல்ல
அமைதியாய் இருந்தவர்கள் இல்லாமல் போனால் கூட
வீட்டில் ஒரு குறையாய்த் தான் தெரிந்தது!
எப்பொழுது வீட்டிற்கு சென்றாலும்
அவர்களது அறையிலிருந்து கொண்டு
மெதுவாய் பரிவோடு  எட்டிப் பார்த்து
"மனோ வரலியாப்போ " என பாசமாய் வாஞ்சையாய்
கேட்கும் அந்த மாசற்றத் தாயைத்தேடி தோற்றுப் போனேன்!
இனி அவர்கள் வர மாட்டார்கள்
என்பதை ஜீரணித்துக் கொள்ள முடியாமல் தொண்டை அடைத்தது!
"மக்கா மக்கா"வென ஒலித்துக் கொண்டிருந்த
அந்த அறை முழுவதையும் ஒரு வெறுமை எனைப் பார்த்து
"ஏலே மக்கா, இனி ஆச்சியைப் பார்ப்பது எப்போது மக்கா? "
என கேட்பது போலிருந்தது!

எப்படியும் வாழலாம் என வாழும் உலகத்தில்
இப்படித்தான் வாழ வேண்டும் என
ஒரு நூற்றாண்டு வாழ்க்கையை
எவ்வித ஆர்ப்பாட்டமும் இன்றி
வாழ்ந்து கடந்து போன அவர்கள்
நம்மிடையே இன்று  இல்லாது போனாலும்
அவர்கள் நமக்கு இட்டுச் சென்ற செய்திகள் கணக்கிலடங்கா !
ஆச்சி எனும் மூன்றெழுத்து
என்றும் நம்மில் நிதர்சனமாய் தங்க,
எல்லாம் வல்ல அவர்கள் போற்றித் தொழுத
அந்த சிவன் அருள்புரியட்டும்!Saturday, February 13, 2016

காதலர் தினம்!அன்று காதலர் தினம்!
இன்னும் பசுமையாக இருக்கிறது!
என் "அவளை" நான் இரெண்டாம் முறையாகப் பார்த்த நாள்,
2003, பிப்ரவரி 14 ஆம் நாள் காலை,
பெங்களூர் புகைவண்டி நிலையத்தில்...!
ஒரு முயல் குட்டியாக வெளியே மெல்லத் தெரிந்தாள்!
கண்களில் அவ்வளவு காதலையும் பயத்தையும் தேக்கி வைத்துக் கொண்டு,
என் தங்கையின் முதுகின் பின்னால்
தன்னை சின்னதாய் மறைத்துக் கொள்ள
முயற்ச்சித்துத் தோற்றுப் போய்க் கொண்டிருந்தாள்!

எனக்கு அவளைப் "பார்த்ததும் பிடித்துப் போனது" நடந்து
சரியாக ஒரு ஆறு மாதங்கள் ஆகி விட்டிருந்தது!
அதற்குப் பிறகு இப்பொழுதுதான் மீண்டும் பார்க்கிறோம்!
இந்த இடைப்பட்ட காலத்தில்
நாங்கள் அலைபேசிகளிலும் தொலைபேசிகளிலும் தான்
எங்களைப் கேட்டுக் கொண்டிருந்தோம்!
காதல் செய்வது எவ்வளவு வலிக்கச் செய்யும்
என்பதை அறிந்தே புரிந்து கொண்டிருந்தோம்!
காதல் பைத்தியம் பிடிக்கச் செய்யும் என்பதைத்
தெரிந்தே ஒருவர்பால் ஒருவர் பித்து கொண்டிருந்தோம்!
காதல், பசியை மறந்துப் போகச் செய்யும் என்பதனை
உணர்ந்தே ருசியையும் மறுக்கக் கற்றுக் கொண்டிருந்தோம்!
தங்கையின் திருமணம் நடைபெறாது
என் திருமணம் நடைபெறாது என்பதை
சுகமான சுமையாகச் சுமந்து கொண்டிருந்தோம்!
என் தங்கையின் தோழியின் தங்கை அவள்!
எனக்கும் தங்கையாகியிருக்க வேண்டியவள்!
விதியின் விருப்பம் வேறாகிப் போவதற்கு எங்கள்
மதியை மதிக்காது பழக்கிக் கொண்டோம்!

இப்படியெல்லாம் கூட எதார்த்தத்தில்
நடைபெறுமா என்பது சந்தேகமே!
நாளை என் வாழ்க்கைத் தோழியாக வர வேண்டியவள்
இன்று என் தங்கையின் திருமணத் தோழியாக வந்து இறங்குகிறாள்!
அவள் "எனக்காகப் பிறந்தவள்" என்பதை
சமூகம் ஒத்துக் கொள்ள  மேற்கொள்ளப்பட்ட
கலாசாரக் கோளாறுகளில் ஒன்றான
ஜாதகம் பார்த்தலில் சோதிடப் பொருத்தங்கள்
இரு வீட்டையும் திருப்திப் படுத்தியிருந்தது
எங்களுக்கு ஒருவகையில் வசதியாகப் போனதால்
நாங்கள் காதலிக்க சிறப்பு அனுமதிப் பெற்றிருந்தோம்!
அந்தத் திமிரில் அமைந்தது தான்
அவள் அன்றைய தினம் என் தங்கைக்குத்
திருமணத் தோழியாக வரவைக்கப் பட்டிருந்தது கூட!

பயணக் களைப்பின் அயர்ச்சி
அவளை இன்னும் அழகாகக் காட்டியது எனக்கு!
அவர்கள் இருவரையும் அழைத்து வர
நானும் அப்பாவும் வந்திருந்தோம்!
அவளை மட்டும் என்னுடன்
இருசக்கர வாகனத்தில் அழைத்துச் செல்ல விரும்பி
கண்களில் அவளைக் கேட்டுப் பார்த்தேன்!
அவள் நாணத்தில் தவித்துப் போவதை
நான் அவளறியாது ரசித்துக் கொண்டிருந்தேன்!
தங்கையை தந்தை இட்டுச் செல்ல
நானோ என் "அவளை"த்  தனியாக
என் வண்டியில் கூட்டிச் செல்ல ஆசிர்வதிக்கப்பட்டேன்!
அந்த சிறப்பு அனுமதியில்
அப்பாவிற்குப் பெரிதாக உடன்பாடில்லை என நன்கறிந்து இருந்தேன்!

எங்களது முதல் பயணம், ஒரு காதலர் தினத்தில் அரங்கேறுகிறது!
தங்கை, தாய் அல்லாது மற்றொரு பெண்ணை
முதன் முதலாக அவ்வளவு அருகாமையில்
வைத்தக் கொண்டுப் போனது நெஞ்சில்
இன்னும் பசுமரத்தாணி போல் பதிந்துப் போயிருக்கிறது!
எங்களுக்குள் நெருக்கமாய் ஒரு சிறு இடைவெளியை
ஏற்படுத்தி அதில் வெட்கச் சுவாசத்தை
விருப்பமாய் நிரப்பிக் கொண்டு
என் பின்னே என் முயல் குட்டி
பவ்யமாய், பாந்தமாய், சாந்தமாய்
என்னைக் கொல்லாமல் கொல்லும் காந்தமாய்
அமர்ந்து வந்து கொண்டிருக்கிறாள்!

காதலர் தினம்!
பெங்களூர் குளிர்!
பனிப் புகை மண்டலம்!
அருகில் என் பிரியமானத் தோழி!
"இதற்குத் தானே ஆசைபட்டாய் பாலகுமாரா" என் நான்!
எங்கள் ஸ்பரிசங்களின் தொடுதல் என்பது
அவ்வப்போது விபத்தாய் சாலைகளின்
மேடு பள்ளங்களின் புண்ணியத்தால் நடைபெற்றுக் கொண்டிருக்க
எனக்கோ வழக்கமாக வந்து போயிக் கொண்டிருந்த
வழிகள் மறந்துப் போயிக் கொண்டிருந்தது!
இறுதியில் வீடு வந்து சேர்வதற்குள்
அவ்வளவுப் பனியிலும் வியர்த்து இருந்தோம்!
அந்தக் கன்னியின் "கன்னி"த் தொடுகை,
எங்களுக்குள் அன்றைய தினம்
ஒரு இரசாயணப் புரிதலை விதைத்து விட்டுச்
சென்றதாகவே இருவரும் புரியாமல் புரிந்துகொண்டோம்!

அன்று விதைக்கப்பட்ட விதையின்
முளையாய், செடியாய், கொடியாய், மரமாய்,
பூவாய், காயாய் மற்றும் கனியாய்
இன்னும் பலவாய் நாங்கள்
மீண்டும் மீண்டும் இந்த பதின்மூன்று வருடங்களில்
காதலை அறுவடை செய்து மீண்டும் மீண்டும்
விதைத்துக் கொண்டே வந்துள்ளோம்!
இனி வரும் காலங்களிலும் இது தொடரும்!

இனிது இனிது காதல் இனிது!
இதைப் புரிந்துக் கொண்டால்
இனிது இனிது வாழ்க்கை இனிது!
உங்களுடன் உங்களுக்காகவே வாழ்ந்து வருகிற
காதல் மனைவியை விடாது காதல் செய்து பழகுங்கள்!
தினம் தினம் காதலர் தினங்களைக்
கொண்டாடி மகிழுங்கள்!

இனிய காதலர் தின வாழ்த்துக்கள்!மறுநாள் காதலர் தினம் என்பது நினைவுக்கு வரவில்லை!

Wednesday, February 3, 2016

என்ன தவம் செய்தேன் நான்!
அரிது அரிது மானிடனாய் பிறத்தல் அரிது !
அதனினும் அரிது என் பெற்றோர்களுக்கு 
மகனாய் பிறக்கும் வரத்தைப் பெற்றல் அரிது!

எதிலிருந்து துவங்குவது என்றுத் தெரியவில்லை!
முக்கியமான எதையும் விட்டுவிடக் கூடும் 
பாவம் செய்யும் துணிச்சலும் எனக்கு இல்லை!
பதிவுகள் பலவும் பலகாலம் நான் எழுதி வந்தாலும் 
இப்பதிவு எழுதும் அவசியம் 
இப்பொழுது வந்தாகி விட்டதா எனவும் விளங்கவில்லை!
இருப்பினும் இனியும் எழுதாது தாமத்திதால் 
என் பிறப்பின் நோக்கம் நிறைவேறும் என்று எனக்குத் தோணவில்லை!
ஆதலால் துளியும் தள்ளிபோடாது எழுதக் கடவுவது 
என எனக்கே ஒரு கட்டுப்பாடை வரைந்துக் கொண்டுத் துவங்குகிறேன்!

வருடம் 1970!
அந்த இளைஞனுக்கு வயது இருபத்தியொன்பது!
அந்த யுவதிக்கோ இருபத்தியொன்று இருந்திருக்கலாம்!
சொந்தமே ஆனாலும் காதல் செய்வது எனக் கருதி 
முறைப் பெண்ணிற்கு "கள்ளோ காவியமோ " பரிசளிக்கின்றான்!
காதலியின் கன்னத்தில் வெட்கச் சிவப்பு மறையும் முன் 
திருமணம் குறித்து இரு மனங்களும் 
மௌனங்களால் பரிபாலனைச் செய்துகொள்ள 
அவனது தமக்கையின் கணவனின் தலைமையில் 
ஒரு இந்துத் திருமணம் கிறுத்துவ பாதிரியாரின் ஆசிர்வாதத்தோடு 
இனிதே முடிவுறுகிறது திண்டுக்கல்லில்!

கூட்டுக் குடும்பத்தில் துவங்கிய 
அவர்களது பயணம் மெல்ல மெல்ல தனிக்குடித்தனமானாலும் 
அவ்விளைஞனின் வேலை பொருட்டு 
மாற்றல்கள் ஏராளம் வரத் தொடர 
அவ்வுயதியின் இல்லற வாழ்க்கை 
தமிழ்நாட்டின் அநேகப் பட்டணங்களைச் 
சுற்றிச் சுற்றி வந்தாலும் 
அந்தக் காதல் பரிசுத்தமானதால் 
நான்குக் குழந்தைகள் ஒன்றன் பின் ஒன்றாக 
அவர்களிடம் தவழத்தான் செய்தன!

முதல் குழந்தைக்கு கவிஞன்  பாரதியின் பிறந்தநாளினை ஒட்டி 
பிறந்ததனால் சோம சுந்தர பாரதி என நாமாகரணம் சூடப்படுகிறது!
இர்ண்டாவதாக பிருந்தா எனும் அழகிய பெண் குழந்தை!
முதல் வருடம் கடந்ததும் காலனின் கணக்கு வேறாக இருக்க 
பிருந்தா நீங்காத் துயரம் தந்து விட்டு போய்விடுகிறாள்!
அதனைத் தொடர்ந்து மணிகண்டனும், மகாலக்ஷ்மியும் 
என அந்தக் குடும்பம் ஒருவழியாக ஐவர் எனப் 
பயணிக்கத் துவங்குகிறது!

குருவிக் கூடென குஞ்சுகளைக் கவ்விக் கொண்டு 
தலைவனும் தலைவியும் கைகளில் 
ரெண்டுத் தகரப் பெட்டிகளுடனும் 
மனதில் பரந்த வாஞ்சைகளுடனும் 
ஊர் ஊராகச் சுற்றி வருகின்றனர்!
குடிசை வீடும் தகரக் கொட்டகைகளுமே நிரந்தரமாகிப் போனாலும் 
அக்குடும்பத்தில் எல்லையிலா ஆனந்தம் மட்டும் 
என்றென்றும் நிதர்சனமாய் தங்கி விடுகிறது!

நகராட்சிப் பொறியாளர் எனும் பதவியில் 
நேர்மைத் தவறா கொள்கைகள் பால் கொண்டிருந்தப் பிடிப்பால்
"தன் கடன் பணி செய்து கிடப்பதே" என 
அவனோ  கடமையில் மூழ்கி கிடக்க,
அவனது மனைவியோ 
தன் கணவன் மற்றும் குழந்தைகள் தான் உலகம் என்று 
அவர்களையேச் சுற்றி சுற்றி வர,
அவ்விருவரும் தங்கள் வாழ்வாதாரத்தின் பகட்டைப்  பற்றியெல்லாம் 
கவலைப்பட்டதாகவேத் தெரியவில்லை!

குழந்தைகள் படிப்பு ஒன்று மட்டுமே 
அவ்விருவருக்கும் பிரதானமாக இருந்து வந்திருக்க வேண்டும்!
அதன் பரிசாக குழந்தைகள் மூவரும் 
குறிப்பாக பாரதியோ தன் தந்தையின் எல்லாக் கனவுகளையும் 
ஒட்டு மொத்தமாக நிறைவேற்றி வர,
அதற்காக அவர்கள் செய்த தியாகங்கள் 
பட்டியலுக்கு அப்பாற்ப்பட்டது!
சொந்தமாய் ஒரு தொலைகாட்சிப் பெட்டியும்
இதர பல அத்தியாவசிய வீட்டு உபயோகப் பொருள்கள் 
வாங்குவதற்கு அவர்களுக்கு இருபத்தி நான்கு வருடங்கள் 
தேவைப்பட்டிருக்கிறது என்றால் 
அந்தத் தியாகத்தின் வலி புரியும்!
இப்படியிருக்க சொந்தமாய் வீட்டிற்கு எங்கு போவது?

மூத்த மைந்தன் முதன் முதலாய் 
பணி நிமித்தமாய் வெளி மாநிலம் செல்லவேண்டிய சூழலில் 
அந்தக் குடும்பத்தில் முதல் பிரிவு புயலாய் வீசத் துவங்கிற்று !
குருவிக் கூட்டிலிருந்து முதன் முதலாய் சேய்குருவி 
பறந்துச் செல்ல, சந்தோசப் படவேண்டிய குடும்பம் 
துக்கம் தொண்டையை அடைக்க 
வருடம் இரெண்டை இரு யுகங்களாய் கடந்துச்  சென்றது!

1995 ஆம் ஆண்டு!
இரெண்டாம் மகன் மணிகண்டன் 
திருச்சியில் கல்லூரிப் படிப்பை முடித்துக் கொண்டு சென்னை வர
"எல் அண்ட் டி" யில் பணிபுரியும் மூத்த மகன் 
தாயையும் தமையனையும் கூட வைத்துக் கொண்டு 
சென்னையில் போரூரில் ஸ்ரீராம் நகரில் 
"அபிராமி குடியிருப்பில்" வாழ,
ஊரிலோ கடைக்குட்டி லக்ஷ்மி 
பொறியியல் படிப்புக்காக ஈரோடு கல்லூரியில் சேர்ந்திட,
குடும்பத் தலைவன் திருச்சியில் 
குடிநீர் வடிகால் பணியில் தொடர்ந்திட என 
அக்குடும்பம் மூன்று திசைகளில் பயணிக்கிறது!

1997 ஆம் ஆண்டு!
மூத்த மகனுக்குத் திருமணம் !
அதனைத் தொடர்ந்து அடுத்த பதினைந்து மாதங்களில் 
நடந்தேறிய சம்பவங்கள் 
கல் இருதயம் கொண்டோரையும் 
அறுத்துப் போடும் படியாகக் கடந்துச் செல்கிறது!
நெருப்பையும் சுட்டெரிக்கும் சக்தி கொண்ட
நேர்மையையும் தன்மானத்தையும் தன்னகத்தே கொண்டிருந்த 
அக்குடும்பம் அக்னிகடவுளின்  கோரத் தாண்டவ 
ஆட்டத்தில் உருக்குலைந்து போக 
அதற்கு விலையாக அவர்கள் பலி கொடுத்தது 
தன் மூத்த மைந்தனையும் மருமகளையும்!
படிப்பதற்கே ரணமாயிருக்கும் பொழுது 
அதனை அனுபவித்தவர்களின் வேதனையினை 
வெறும் வார்த்தைகளால் விவரிக்க இயலுமோ?

"இப்படியெல்லாம் ஏன் நடக்கிறது?" என்றெல்லாம் 
எண்ணிப் பார்த்து கால விரயம் செய்யக்கூட நேரம் இல்லாது  
அந்த இருவரும் எஞ்சிய இரு குழந்தைகளைக் 
கரை சேர்க்க வேண்டிய கட்டாயத்தில் 
மீண்டும் ஓடத் துவங்க
காலச் சக்கரம் மறுபடியும் ஒரு சுற்று 
வர ஆயத்தமாகிறது!

மகள் கல்லூரி முடிக்கிறாள்!
அண்ணனின் ஆசைப் படி 
நல்லதொரு மென்பொருள் நிறுவனத்தில் 
தன்னை பணியமர்த்திக் கொள்கிறாள்!
நிறுவனம் அவளை "கனடா" அனுப்புகிறது!
பெங்களூரில் சொந்தமாய் வீடு வாங்க முடிகிறது!
மீதமுள்ள ஒரே ஒரு மகன் 
அண்ணன் சேர்த்து விட்ட படிப்பில் 
அகில இந்திய தேர்வில் இரெண்டாம் இடம் வருகிறான்!
சென்னையில் அதே நிறுவனத்தில் பணிபுரியும் வாய்ப்பைப் பெறுகிறான்!
மகன்  "இருந்து இறந்த" வீட்டையும் 
அவர்கள் வாங்கும் சூழல் வருகிறது!
குடிசைகளில் வாழ்ந்து வந்த அக்குடும்பம் 
வெளியே வந்து வானத்தை அன்னாந்து பார்க்க 
காலம் கட்டாயப் படுத்துகிறது!
கண்களில் நீர் பனிக்க "இதுவும் கடந்து போகும்" என 
ஒன்றுக்கு இரண்டு வீடுகளைச் சொந்தமாக்கிக் கொள்ளும் 
நிலையையும் தாங்கி கொள்கிறது!

மகளும் மகனும் புதிய சொந்தங்களை 
திருமணங்கள் வாயிலாகக் கொணர 
அக்குடும்பத்தில் பேரப் பிள்ளைகள் 
அகிலனும் அறிவும் பிறக்கிறார்கள்!
சென்னையிலும் பெங்களூருவிலும் 
சொந்த வீடுகள் ஒன்றுக்கு இரண்டு இருந்தாலும் 
இதை தவிர்த்து குளித்தலையிலும் 
மேலும் ஒரு வீட்டை கொண்டிருந்தாலும் 
எல்லோரையும் போல தனித்திருக்க 
மனம் ஒப்பாத நிலையில் 
அவ்விருவரும் மகன் மற்றும் மகள் வீடுகளில் 
மாறி மாறி நாடோடிகள் போல 
வாழ முற்படுகிறார்கள்!
சொக்கத் தங்கமாம் மருமகனின் பெரிய மனது 
அவர்களிருவரையும் பிரதானமாக மகள் வீட்டில் 
இருக்கும் படிச் செய்கிறது!

இளைய மகன் தட்டுத் தடுமாறி 
கொஞ்சம் கொஞ்சமாகக் காலூன்றி நிற்க முற்பட,
காலம் அவனுக்கும் சொந்தமாக 
இரண்டு வீடுகளை வாங்கித் தருகிறது!
மனதுக்குள் பூரித்துப் போனாலும் 
அதனை முழுமையாக வெளிகொணராமல் 
சொந்தமாகத் தொழில் நடத்தும் மகன் 
எங்கே வரும் காலத்தில் இடறி விடுவானோ 
எனும் ஐயம் மேலூன்றி நிற்க 
தங்களுக்கு என்று எதையும் வைத்துக் கொள்ளாமல் 
தமக்கென்று இருந்த சொந்த வீடுகளில் ஒன்றை 
விற்க முற்படும் துணிவு 
என் பெற்றோர்களைத் தவிர 
இந்த உலகத்தில் வேறு யாருக்காவது வருமா?
நான் அறைகூவல் இடுகிறேன்!

மூத்த மகனின் இழப்பு அவ்விருவரையும் 
நிரந்தர சொல்லெனாத் துயரத்தில் ஆட்படுத்தியிருந்தாலும் 
அதனை தங்களிடத்திலேயே புதைத்துக் கொண்டு 
வாழ்ந்து கொண்டிருக்கும் என் பெற்றோர்கள்,
சுயநலத்திற்கே சுயநலம் வந்தாலும் வரலாம் ஆனாலும் 
தங்கள் சுயநலம் பாராது தம் மக்கட்த் துயரைப் போக்க 
வெறும் உயிரை மட்டும் வைத்துக் கொண்டிருக்கும் நிலைதனைப் 
பார்க்கும் போது எண்ணிப் பார்க்கிறேன்!
அரிது அரிது மானிடனாய் பிறத்தல் அரிது !
அதனினும் அரிது என் பெற்றோர்களுக்கு 
மகனாய் பிறக்கும் வரத்தைப் பெற்றல் அரிது!


அவர்களுக்கு என்ன கைம்மாறு நான் செய்யப் போகிறேன்!
பகவத் கீதை கேட்கிறது:
"எதைக் கொண்டு வந்தோம், எதைக் கொண்டு செல்ல?" என்று !
ரத்தமும் சதையும் பிண்டமுமாக என்னை
இந்த உலகத்தில் கொண்டு வந்து சேர்த்த 
அந்த தியாக உள்ளங்களுக்கு என்னத் தரப் போகிறேன்?
அவர்களுக்காக "என்னையேத் தருதல்" ஒன்றைத் தவிர 
வேறெதனையும் தந்தாலும் ஈடாகுமா?

என்னைப் போன்றோர்கள் 
"ஏதோ பிறந்தோம், ஏதோ வளர்ந்தோம், ஏதோ வாழ்ந்தோம்"
என்றே எண்ணி எண்ணிமானுடச் சுகங்களையும் 
உயிரற்ற ஜடங்கள்பால் கொண்ட சுகங்களையும் 
அனுபவிப்பதுதான் பிறப்பின் நோக்கம் 
என்று அறியாமை இருளில் மூழ்கி இருப்பது போல் நானும் இல்லாது
என் குடும்பத்தை என்னை விட அவர்களால் நன்றாக பார்த்துக் கொள்ள
என் பெற்றோர்களால் மட்டுமே முடியும் 
என்பதனை முழுமையாக அறியப் பெற்றவனாய்,
என் ஆயுளையும் அவர்களுக்குச் சேர்த்துக் கொடுக்க வேண்டி 
இந்த கணம் மரித்துப் போகும் வரம் கிடைக்க 
ஏங்கியவனாய் அவர்களைப் பார்த்துக் கேட்கிறேன்!

"அம்மா, அப்பா, தங்களுக்கு மகனாகப் பெற 
என்ன தவம் செய்தேன் நான்?"


ஆஞா...!

கணபதியாப்பிள்ளை என் அம்மா வழி தாத்தாவின் பெயர்! நாங்கள் செல்லமாக "ஆஞா" என்றே அழைப்போம்! 80 களிலிருந்து அவரது இறுதி மூச்சு...