Saturday, August 22, 2009

மறக்க இயலா விநாயகர் சதுர்த்தி!
இந்த இடுகையை நான் இன்றைய அதிகாலை மணி மூன்று முப்பதுக்கு எழுதத் துவங்குகிறேன். அயர்ந்து தூங்கும் என் மனைவியும் மகனும் இந்த விநாயகர் சதுர்த்திக்கு என்னுடன் சென்னையில் இருக்கின்றனர். வருடம் தவறாமல் இந்த பண்டிகை வந்து போனாலும், சற்றேறக்குறைய இருபது வருடங்களுக்கு முன்னால் நாங்கள் எல்லோரும் திருச்சியில் வசித்து வந்த பொழுது வந்த ஒரு விநாயகர் சதுர்த்தியை என்னால் மறக்க இயலாது.

எங்களுக்கு மலைக்கோட்டைக்கு மிக அருகில், தாயுமானவர் சுவாமி கோவிலின் வெளிப் பிரகாரத்தில் அப்போது வீடு இருந்தது. நான் பத்தாம் வகுப்பு படித்து வந்தேன். மறு நாள், பண்டிகை என்றால், முதல் நாள் அதன் தாக்கம் எங்கெங்கும் களைகட்டி இருக்கும்!

காவிரி ஆற்றுப் படுகையிலிருந்து, களிமண் எடுத்து வரப்பட்டு வீதியோரங்களில், சிறிதும் பெரிதுமாக, எல்லா அளவுகளிலும், பிள்ளையார் உருவாகி கொண்டு இருப்பார்! அவருக்கு, யார் அவரை உருவாக்குகிறார்கள் என்றெல்லாம் கவலை கிடையாது. ஒரு பிடி களிமண், யானை முகம், காலில் ஒரு மூஞ்சுறு, கைகளில் மோதகம், எருக்கம்பூ மாலை, அருகம்புல் போதும், பிள்ளையார் ரெடி!

வருடம் முழுமையும் டவுன் ஸ்டேசனுக்கு பின்புறம், சீந்துவாரற்று மண்டி கிடக்கும் எருக்கம்பூவிற்கு, அன்றைய தினம், அப்படி ஒரு மவுசு வரும்! குட்டி பையன்களும், சிறுமிகளும் திடீர் வியாபாரிகளாகி விடுவர்! " அக்கா, அக்கா பூ வாங்கிக்கக்கா, அண்ணே, அண்ணே பிள்ளையார் வாங்கிக்கிங்க அண்ணே" என்று, வீதிகளில், மழலைப்பட்டாளம் அலைமோதும்! குளிக்காமல் கூட, நெற்றியினில், பட்டை பட்டையை விபூதி பூசிக்கொண்டு, திரிவார்கள்!

அப்படிப்பட்ட குழந்தைகளில், ஒரு குழந்தை அழுக்குச் சட்டையும், மூக்கில் சளியும், கிழிந்த டிரௌசரும், போட்டுக்கொண்டு பிள்ளையார் விற்று கொண்டு இருந்தது. அந்த குழந்தைக்கு தான் எதற்காக பிள்ளையார் விற்கிறோம் என்றெல்லாம் கவலை இருந்ததாக தெரியவில்லை. பிள்ளையாருக்குத் தான் கவலை இருந்ததா? அதுவும் இருந்த மாதிரி தெரியவில்லை. இருந்திருந்தால், ஏன் குழந்தைகளை அவர் அப்படி ஒரு நிலைமைக்கு எடுத்துச் செல்லப் போகிறார்?

அந்தக் குழந்தையின் தாயார், தூரத்தில் இருந்து அதை அழைத்தது, மற்றவர்கள் காதில் விழுந்ததோ இல்லையோ, எனக்கு கன்னத்தில் அறைந்தது மாதிரி இருந்தது!

"தம்பி, முஸ்தபா, பிள்ளையார் விற்றது போதும், கொஞ்சம் சாப்பிட்டு விட்டு போயா" என்பதுதான் அது!

வயிறு பசித்தால், யார் வேண்டுமானாலும் பிள்ளையார் விற்கலாம்! பிள்ளையார் வாங்குவதன் மூலம், ஒருவருடைய பசியாறும் என்றால், பிள்ளையார் சதுர்த்தி நியாயமானதே!

இன்று நான் காலையில் குளித்து விட்டு பிள்ளையார் வாங்க செல்கிறேன்! கடை வீதியில், எனக்காக காத்திருக்கும் முஸ்தபாக்களை சந்திக்க செல்கிறேன்!

பசிக்கு மதம் தெரியாது! மனிதனுக்குத்தான் மதமெல்லாம்! மதம் எனும் மதம் மனிதனை ஆட்டிப்படைக்காதவரை, பசியைப் போக்கும் இனம் எதுவோ, அதுவே உண்மையான மதம்! அந்த மதம், நடத்தும் எல்லா வைபோகங்களும், எனக்கு சதுர்த்திகளே!

என்னால், எனது இளம்ப்ரயாத்தில் நடந்த இந்த விநாயகர் சதுர்த்தியை என்றும் மறக்க இயலாது!

Thursday, August 20, 2009

அம்பாசமு(ரி)த்திரம்!
சொர்க்கம் எங்கே என்று தேடி செல்வது,
அம்பாசமுத்திரம் செல்லாதவர்கள் செய்யும் வேலை!
நெல்லை மாவட்டத்தில் ஊர்ப்பெண்டுகள்
"அம்பை" என்று செல்லமாக சொல்லக்கேட்கையில்,
வரும் சுகமே ஒரு அலாதி!

வானுயர்ந்த சோலைகளும், தாமிரபரணி ஆற்றின் சலசலப்பும்,
ஆங்கிலேயர்களின் அழகிய இரும்புப் பாலங்களும்,
இயற்கையின் எழில் கொஞ்சும் இயல்புடன்,
எங்கு திரும்பினாலும் பச்சை பசேலென,
கம்பளம் விரித்தாற்போல் வயல்வெளிகளும்,
மரங்களின் அடர்த்தியும், சொரிமுத்தையன் கோவிலும்,
வீ கே புரமும், அகஸ்தியர் அருவியும், பாபநாசம் சிவன் சன்னதியும்,
இன்னும் சிலவும், விட்டுபோனப் பலவும்,
மனதில் அழியாமல் ஒட்டிகொண்டுவிடக்கூடிய விஷயங்கள்!

நகரத்து அவசரங்கள் புளித்து போகும் போது,
நாகரிகத் தேடல்கள் முடிவிலிகளாய் மாறும் போது,
நம் சந்ததிகள் சுபிக்ஷம் பெற,
கடவுளின் அநுக்ரஹம் கிடைக்காமல் போனாலும் பரவாயில்லை!
அம்பாசமுத்திரம் சென்று வாருங்கள்!
அது ஒரு இயற்கையின் அக்ஷயபாத்திரம்!

Monday, August 10, 2009

நீங்குமோ காரை மாநகரின் நினைவுகள்!


அப்போது எனக்கு ஆறு அல்லது ஏழு வயது இருக்கும். நாங்கள் எல்லாம் காரைக்குடியில் வசித்து வந்தோம். அப்பா நகராட்சிப் பொறியாளராக வேலை பார்த்து வந்தார். நகரத்தார் வாழும் ஊரென்பதால் திரும்பிய பக்கமெல்லாம் செட்டியார் வீடுகள், அரண்மனைகள் போல் கம்பீரமாய் வீதி எங்குமிருக்கும்.

எங்கள் வீடும் அப்படிப்பட்ட இரு அரண்மனைகளுக்கு இடையே, ஒரு மினி பங்களா போல இருந்ததாக ஞாபகம். கொப்புடையம்மன் கோவில், குஞ்சு கிருஷ்ணன் பிள்ளை வீடு, நடராஜா தியேட்டர், மேலவூரணி, LFRC school என சொல்லிக் கொண்டே போகலாம். அப்பா ஒரு பச்சைக் கலர் லாம்ப்ரடா ஸ்கூட்டர் வைத்திருந்தார். எங்கள் நாலு பேரையும் எப்போவாவது ஒரு முறை அதில் உக்கார வைத்துக் கொண்டு, சினிமாவுக்கு கூட்டிப் போவார். அப்படியொரு முறை நாங்கள் எல்லோரும் அதில் பயணித்தபோது, அம்மா சேலை சக்கரத்தில் மாட்டி கீழே விழுந்து கைகளில் சிராய்ப்பு, ரத்தம் வழிய வழிய, என்னுடைய சினிமா கனவு தகர்ந்து போனது. நான் இரவு முழுதும் அழுது கொண்டிருந்தது இன்னும் நினைவில் பசுமையாய்...

எங்கள் அடுத்த வீட்டில் எப்போதும் ஒரு கொலுசுச் சத்தமும், கலகலவென சிரிப்பொலியும், மல்லிகை வாசமுமென கவிதையாய் ஒரு சூழல் நிலவும். எங்கள் வீட்டின் கொல்லைப்புறமும், அவர்கள் வீட்டின் பின்வாசலும் ஒரு சந்தின் மூலம் ஒன்று சேரும். சந்தின் கடைசியில் ஒரு சிறு கிணறும் உண்டு. ஆனால் அதில் தண்ணீரைப் பார்த்ததாய் ஞாபகமில்லை.

அந்த வீட்டில், லக்ஷ்மி அக்கா, லக்ஷ்மி அக்காவென்று ஒரு அக்கா பட்டுத் தாவணியும், தங்க வளையல்களும், தங்கக் கொலுசுமென நிறைவாய் எப்போதும் புன்னைகையோடு கைகளில் குமுதம், விகடன் சகிதம் வளைய வருவார்கள். அம்மாவுடன், வாசற்படியில் அமர்ந்து ஊர்க்கதை பேசுவார்கள். 'மணிகண்டு', 'மணிகண்டு' என்று வாசமாய் அழைப்பார்கள்.

அவர்கள் குமுதம் படிப்பதைப் பார்ப்பதே ஒரு அழகு. "அந்த மாதிரியான" விசயங்களை படிக்கும் போது, குமுதம் அவர்கள் நெஞ்சருகில், சொற்ப தூரத்தில் இருக்கும். அவர்கள் வெட்கப்படும் போது, வெளிப்படும் சிரிப்பு வேறு வகையில் இருக்கும்!

மதிய வேளைகளில், எல்லோரும் அயர்ந்து தூங்கும் போது, அக்கா என்னை மடியில் கிடத்தி, என் தலையை கோதிக்கொண்டே, குமுதம் படிப்பார்கள்! நான் அப்படியே தூங்கிப் போய்விடுவேன். எழுந்திருக்கும் போது, அம்மாவும், அக்காவும் சேர்ந்து பூக்கட்டிக்கொண்டிருப்பர்கள். அக்காவின் கைகளில் இருக்கும் மல்லிகை வாசமும், அவர்களது அருகாமை சுவாசமும் இன்னும் எனக்குள் எங்கோ ஓரிடத்தில் தங்கியிருக்கவே செய்கிறது!

அதற்கப்புறம் என் வாழ்க்கையில் எத்தனையோ பெண்களை சந்தித்திருந்தாலும், என்னை ஏதோ ஒரு வகையில் பாதித்த லக்ஷ்மி அக்கா, என் முதல் காதலாய், என்னுள் இன்னும் சிம்மாசனம் போட்டு அமர்ந்து இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களுக்கு என்னைவிட வயது பதின்மூன்று கூடுதலாய் இருந்தாலும், அன்றைய இளம் வயதில், கன்னி ஒருத்தியின் சிநேகம், என்னில் கவிதையாய் இன்னும் வருடி கொடுப்பதிலுள்ள சுகம், எத்தனை வருடங்கள் ஆனாலும் இன்னும் நீங்கா நினைவுகளாயிருக்கும்.

நீங்குமோ காரை மாநகரின் நினைவுகள்???

விலகுமோ முதல் காதல் அனுபவங்கள்!

Sunday, August 9, 2009

அக்னி குஞ்சொன்று கண்டேன்!


அக்னி குஞ்சொன்று கண்டேன்!
இன்று அதிகாலை
என் வீட்டின் முகவறையில்
தங்க ஜ்வாலையாக
அக்னி குஞ்சொன்று பிரவேசிக்கக் கண்டேன்!
கண்டதும் பேரானந்தம் கொண்டேன்!
கைகளினில் அள்ளி மேனி முழுமையும் பூசிக்கொண்டேன்!
முப்பாட்டன் பாரதியே என்னைத் தழுவியதாய் எண்ணி,
உடல் சிலிர்த்து போனேன்!
சமூக கோபங்கள் ரணங்களாய் எரித்தாலும்,
அவன் தழுவியதில் அவையாவும்
சாம்பலாய் பறக்கக் கண்டேன்!
ஆம், பாரதி ஒரு அமரன்!
அவன் கண்டெடுத்த அக்னி குஞ்சொன்றை
பார்க்கப் பெற்றதனால்,
நானும் அவனுடன் சேர்ந்து அமரனாகிப் போனேன்!

ஆஞா...!

கணபதியாப்பிள்ளை என் அம்மா வழி தாத்தாவின் பெயர்! நாங்கள் செல்லமாக "ஆஞா" என்றே அழைப்போம்! 80 களிலிருந்து அவரது இறுதி மூச்சு...