அடுத்த நொடிப் பொழுதின் ஆச்சர்யங்கள்




எல்லாமும் மாறிப் போகும்
ஒரு நொடிப் பொழுதினில்...!
வாழ்க்கை எவ்வளவு அழகானாதோ
அதைவிடப் பன்மடங்கு 
கோரமானதும் கூட..!
தங்களது ஆதர்ச நாயகனையும்
அவர்கள் வென்று வந்த
வெற்றிக் கோப்பையினையும்
ஒரு முறையாவது தரிசித்துவிட 
கண்களில் ஏக்கத்துடனும்
நெஞ்சினில் ஆர்வத்துடனும்
பெங்களுர் சின்னசாமி மைதானத்தில்
பரிதவித்த அந்த 11 உயிர்களுக்குத் தெரியாது 
தாம் இன்னும் ஒரு சில மணித் துளிகளில் 
ஜன நெருக்கடியில் சிக்கி
சிதைந்து சின்னாபின்னமாகி
மாயப் போகின்றோம் என்று...!

தேனிலவுக்கு வந்த இடத்தில்
சிரபுஞ்சி சாரலில் அருவியின் அழகை
பார்த்து பரவசமடைந்து கொண்டிருந்த
அப்பாவி மாப்பிள்ளைக்குத் தெரியாது
நாம் இன்னும் சிறிது நேரத்தில்
அக்னி சாட்சியாய் தொட்டு தாலியிட்ட
மனைவியின் சதியால்
படுகொலை செய்யப்படுவோம் என்று..!

லண்டனில் மென்பொருள் பொறியராக
ஆறேழு வருடங்கள் பணி செய்து
வந்து கொண்டிருந்த தன்னுடன்
இந்தியாவில் மருத்துவராய் இருக்கும்
தன் மனைவியையும் பணியை
ராஜினாமா செய்துவிடச் செய்துவிட்டு
அழகிய மூன்று குழந்தைகளுடன்
நிரந்தரமாக அங்கேயே குடியேற
முடிவு செய்து கனவுகளுடன்
ஆனந்தமாய் விமான உட்புறத்தில் 
செல்ஃபி எடுத்துக்கொண்ட
அந்த அப்பாவி தகப்பனுக்குத் தெரியாது
விமானம் பறக்க ஆரம்பித்து
ஐந்து நிமிடங்களிலேயே
தாமும் தன் குடும்பமும் 
தன்னுடன் பயணிக்கும் 241 பேரும்
கனவிலும் கற்பனை செய்திடாததோர்
கோர விபத்தில் எரிந்து
மாண்டு போவோமென்று...!

மதிய உணவை நண்பர்களோடு 
அளவலாவிக் கொண்டு உண்டு கொண்டிருந்த 
ஆமதாபாத் ஜே பி மருத்தவக் கல்லூரி 
விடுதிவாழ் மாணவர்களுக்கு தெரியாது 
தங்கள் தலையில் இடியென 
விமானம் தரையிரங்குமென்று !

அலுவலகம் முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த 
அந்த இருசக்கர வாகன நபருக்குத் தெரியாது 
சென்னை ராமாபுரம் மெட்ரோ பாலத்து பணிகளின்  நடுவே 
ஒரு உத்திரம் அந்தரத்திலிருந்து பிய்த்துக்கொண்டு 
தன் தலை மீது சரியாக விழுந்து 
தன்னையும் தன் கனவுகளையும் 
சிதைத்துக் கொன்று விடும் என்று !

அரிது அரிது மானிடராய் 
பிறத்தல் அரிது..!
அதனினும் அரிது
கூன், குருடு, செவிடு, பேடு
இன்றி பிறத்தல் அரிது...!
என்று சொன்ன அவ்வைபிராட்டிக்குத் தெரியாது 
மானிடப் பிறவிக்கு
உயிர் மட்டுமல்ல அதிர்ஷ்டமும் வேண்டும் 
இந்த உலகில் ஜீவிக்க என்று!

காலச் சக்கரத்தின் சுழற்சியில்
கலியுகத்தின் முடிவு எப்போது எனத் தெரியாது 
யாவரும் ஓடிக் கொண்டிருக்க
காலனோ கால நேரம் 
பாராமல் உழைத்து 
மானிட ஜென்மங்களை
பாவ புண்ணியம் பாராது 
அவசர அவசரமாக
கொண்டு செல்கிறானோ என்னவோ..!

போதுமடா சாமி
இந்த மானிடப் பிறவி..!
கருணையும், வன்மமும்,
பாசமும், நேசமும்,
இன்பமும், துன்பமும்
காதலும், காமமும்
போட்டியும், பொறாமையும்
என சராசரி இல்லற வாழ்வு தரும்
முடிவிலா சங்கடங்களிலிருந்தெல்லாம் ஆட்படாது 
ஆசாபாசமில்லா பற்றற்ற துறவியாய் ஆகிவிடலாமெனும்
மனச் சஞ்சலத்துடனும், கணத்த இதயதுடனும் 
கண்ணீர் மல்க,
காலம்தவறி மரணித்தோர்
அனைவரது ஆன்மாக்களும் சாந்திபெற
நினைவஞசலியாய் இந்தக் கவிதையை
பதிவு செய்வதின் மூலம் 
சற்றே என்னை சமாதானம் செய்து கொள்கின்றேன்...!

அடுத்த நொடிப் பொழுது 
ஒளித்து வைத்திருக்கும் ஆச்சரியங்கள் தான் 
இன்னும் எத்தனை எத்தனை ...!

பா. மணிகண்டன்

Comments

Popular posts from this blog

தங்கத் தாரகை

திருப்பள்ளியெழுச்சி