Friday, July 29, 2016

கபாலிவெகுஜன, இணைய, பத்திரிக்கை மற்றும் வாய்ச்சொல்
விமர்சனங்களை புறந்தள்ளிவிட்டு
திறந்த மனதோடு கபாலி படம் பார்க்க நேற்றுச் சென்றிருந்தேன்!
கனத்த மனதோடு திரும்பி வந்தேன்!

இப்படி ரஜினியைப் பார்த்து தான்
எவ்வளவு நாளாயிற்று!
சிறையில் புத்தகம் படிப்பதில் துவங்கி
இறுதியில் நிறைவாய் தன் குடும்பத்தினருடன்
மனதிற்குப் பிடித்தமான வாழ்க்கையைத் வாழத் துவங்கும் வரை
எவ்வளவு இயல்பாய், நேர்மையாய், யதார்த்தமாய்
அந்த கதாபாத்திரம் பயணிக்கிறது!!
"தன் அன்பு மனைவியைத் தேடுதல்"
எனும் ஒற்றை நோக்கத்திலிருந்து துளியும் பிறழாமல்
கண்ணில் தேடலையும் நெஞ்சில் வலியையும்
நடை உடை பாவனையில் மிடுக்கையும் தவற விடாது
அடுத்தடுத்த காட்சிகளில்
தன்னுடன் இருப்பவர்கள் முதல்
தன்னை திரையில் பார்க்க வந்திருக்கும் ரசிகர்கள் வரை
அனைவரையும் தன்னோடு அரவணைத்துச் செல்ல
வைத்திருக்கும் படியான ஒரு ஈர்ப்பினை
படத்தின் ஜீவநாடியாய் உலவ விட்டிருப்பத்தில்
இயக்குனர் பா ரஞ்சித் தன்னை அடுத்த கட்டத்திற்கு
எடுத்துச் சென்றிருப்பதில் வெற்றியும் கண்டிருக்கிறார்
என்றால் அது மிகையில்லை!

இது ரஜினி படமா இல்லை ரஞ்சித்தின் படமா என்றால்
என்னைப் பொறுத்த வரையில் இது ஒரு நல்ல படம்!
ரஜினியை அவரது வயதொத்த கதாபாத்திரமாய்
வாழச் செய்திருக்கும் ஒரு அரிய படம்!
எவ்வித எதிர்பார்ப்புகளுடன் இல்லாது சென்று வந்தால்
இது ஒரு மிகச் சிறந்த வெற்றிப் படம்!
Thursday, July 21, 2016

ஏலே மக்கா...!

"ஆச்சிக்கு வயது 97 நடக்கிறது!
இப்பொழுதெல்லாம் அவர்களுக்கு முன்பு போல முடிவதில்லை!
கண்கள் ஒத்துத்துழைத்தாலும் காதுகள்...?
அடிக்கடி "சிவ சிவா"வைத் தவிர
வாயும் அதிகம் வார்த்தைகளை உதிர்ப்பதில்லை!
அவர்களால் முடிந்தால் அழைத்து செல்லுங்கள்!"
மாமா சென்ற திங்கள் சொன்னது இன்னமும்
என் காதுகளில் ஒலிக்கத் தான் செய்கிறது!

இருந்தாலும் பிடிவாதமாய் வீட்டிற்கு கூட்டிக் கொண்டு வந்தேன்!
அப்போது தெரியாது இதுவே ஆச்சியின் இறுதி வருகை என்று..!
என் வீட்டில் அவர்கள் கடைசியாக இருந்து சென்ற
அந்த இரெண்டு நாட்களில்
அவர்கள் நின்றதும், நடந்ததும், பேசிய ஓரிரு சொற்களும்
பசுமையாய் ஞாபகத்தில் இன்னும் இருக்கிறது!
தலையில் பொடுகோ அல்லது பேனோ
அவர்களை அதிகம் படுத்தி இருக்க வேண்டும்,
"கோலம் இங்கே கொஞ்சம் தலையைப் பாரு"
அரை ஜீவனாய் தன் மகள் பெயர் சொல்லி அவர்கள் ஒலிக்க,
நெற்றிச் சுருக்கங்களை இறுக்கமாய்
பற்றிக் கொண்டிருக்கும் விபூதி,
விடாமல் தலையை சொறிவதால்
சற்றே கொஞ்சம் மங்கித் தெரிந்தது!

ஆச்சி ஒரு வைராக்கிய பெண்மணி!
தெற்கில் குமரி மாவட்டத்தில் பிறந்ததனாலோ என்னவோ
குமரி அன்னையின் பெயர் "பகவதி"
என்பது அவர்களுக்கு நாமகரணம் செய்யப் பட்டிருக்க வேண்டும்!
வீ கே புரம் மற்றும் பாபநாசம் ஊர்களில்
அவர்கள் அந்த காலங்களில்
தன்னைக் கரம் பிடித்த இல்லறத் துணையோடு
மானசீகமாய் காதல் வாழ்க்கை வாழ்ந்திருக்க வேண்டும்!
அந்த உன்னதக் காதலுக்கு
தெய்வசாட்சியாய் மொத்தம் பத்துப் பிள்ளைகள்!
கணவன் அருகாமைத் தொழிற்சாலைக்கு சென்று
கொணர்ந்து வரும் சொற்ப வருமானத்தை வைத்துக் கொண்டு
வீட்டில் குழந்தைகளை குறிப்பாக பெண்பிள்ளைகளை
தோளிலும் மாரிலும் மாறி மாறி
தூக்கி வளர்த்து அவர்களை கரை சேர்ப்பது என்றால் ..?

ஆசைக் கணவனை பல வருடங்களுருக்கு முன்பே இழந்த போதிலும்
மக்கள்மாரை அரவணைத்து வாழத் தெரிந்து,
தான் என்றும் மற்றவர்களுக்கு சுமையாய் ஆகிவிடக் கூடாதபடி
இயன்றவரை தன்னால் ஆன உதவிகளை
நித்தமும் செய்து கொண்டு
சோர்வு என்பதை என்றும் கண்டறியா குணவதி!
அளவான உணவுப் பழக்கமுறை,
அளவில்லா தெய்வ நம்பிக்கை,
இருக்கும் இடம்தெரியா சாந்தம்,
வீட்டிற்கு யார் வந்து புறப்பட்டாலும்
வாசலையும் தாண்டி வந்து வழியனுப்பும் பாங்கு,
இன்னும் இப்படி எத்தனையோ நற்குணங்கள்
ஒன்றா இரெண்டா சொல்லிக்கொன்டே போகலாம்!
கண்டிப்பாக அவர்கள் ஒரு வைராக்கிய பெண்மணிதான்!

இறப்பதற்கு மூன்று மணிநேரம்
முன்பு வரை முழுமையாய் இயங்கி வந்த அந்த ஜீவன்
ஒரு நூற்றாண்டை இன்னும் மூன்றே வருடங்களில்
கண்டு கொண்டிருக்க வேண்டிய அந்த ஆத்மா
போதும் என விடைபெற்றுக் கொண்டு
இதோ மூன்று வாரம் ஆகிவிட்டது!

மூன்று தினங்களுக்கு முன்பு
ஆச்சி கடைசியாய் வாழ்ந்த வீடாம்
எனது மனைவியின் தாய் வீட்டிற்கு செல்ல நேர்ந்தது!
வழக்கத்துக்கு மாறாக ஒரு அமானுஷ்ய அமைதி
பரவலாய் அங்கு இருப்பதை மறுப்பதற்கில்லை!
கலகலப்பாய் இருப்பவர்கள் மட்டுமல்ல
அமைதியாய் இருந்தவர்கள் இல்லாமல் போனால் கூட
வீட்டில் ஒரு குறையாய்த் தான் தெரிந்தது!
எப்பொழுது வீட்டிற்கு சென்றாலும்
அவர்களது அறையிலிருந்து கொண்டு
மெதுவாய் பரிவோடு  எட்டிப் பார்த்து
"மனோ வரலியாப்போ " என பாசமாய் வாஞ்சையாய்
கேட்கும் அந்த மாசற்றத் தாயைத்தேடி தோற்றுப் போனேன்!
இனி அவர்கள் வர மாட்டார்கள்
என்பதை ஜீரணித்துக் கொள்ள முடியாமல் தொண்டை அடைத்தது!
"மக்கா மக்கா"வென ஒலித்துக் கொண்டிருந்த
அந்த அறை முழுவதையும் ஒரு வெறுமை எனைப் பார்த்து
"ஏலே மக்கா, இனி ஆச்சியைப் பார்ப்பது எப்போது மக்கா? "
என கேட்பது போலிருந்தது!

எப்படியும் வாழலாம் என வாழும் உலகத்தில்
இப்படித்தான் வாழ வேண்டும் என
ஒரு நூற்றாண்டு வாழ்க்கையை
எவ்வித ஆர்ப்பாட்டமும் இன்றி
வாழ்ந்து கடந்து போன அவர்கள்
நம்மிடையே இன்று  இல்லாது போனாலும்
அவர்கள் நமக்கு இட்டுச் சென்ற செய்திகள் கணக்கிலடங்கா !
ஆச்சி எனும் மூன்றெழுத்து
என்றும் நம்மில் நிதர்சனமாய் தங்க,
எல்லாம் வல்ல அவர்கள் போற்றித் தொழுத
அந்த சிவன் அருள்புரியட்டும்!ஆஞா...!

கணபதியாப்பிள்ளை என் அம்மா வழி தாத்தாவின் பெயர்! நாங்கள் செல்லமாக "ஆஞா" என்றே அழைப்போம்! 80 களிலிருந்து அவரது இறுதி மூச்சு...