பண்ணப் பழகடா பச்சை படுகொலை...!

 


சமீபத்தில் புதுச்சேரியில் 

அரங்கேறிய நிகழ்வு,

தலைநகரின் 'நிர்பயா' சம்பவம்

விளைவித்த அதிர்வலைகளுக்குச்

சற்றும் குறைந்ததல்ல...!

பிஞ்சுகளையும் புசிக்கத் தயங்கா

காமுகர்களின் அரக்க குணம்

போதை வஸ்துவின் புழக்கத்தால்

தூண்டப்பட்ட ஒன்று

எனக் காரணம் அறியப்பட்டாலும்,

பலியான அந்த குழந்தைக்கு

இழைக்கப்பட்ட அநீதிக்கு

பிராயச்சித்தம் எப்படித் தேடுவது?

என்ன பாவம் செய்தது 

அந்தப் பெண் குழந்தை??

அதனைப் பாதுகாக்கத் தவறியது

யார் குற்றம்?

அதனைப் பெற்றோரா?

இல்லை வேடிக்கைப் பார்த்துக்

கொண்டிருந்த இந்தச் சுயநல சமூகமா?

சட்டம் ஒழுங்கை கண்காணிக்கத் 

தவறிய காவல் துறையா?

இல்லை அந்தக் காவலர்களை

தங்களின் தேர்தல் பிரச்சாரங்களுக்கு

பாதுகாப்பு செய்திடப் பணித்த

அரசியல்வாதிகளா?

இல்லை இவற்றினையெல்லாம்

அரங்கேற்றி வேடிக்கை பார்க்கும்

அந்த மகா சக்தியா?

இல்லை அப்படி ஒன்று தான் உளதா?

கேவலமான இந்த அவலங்களைப்

வெறும் செய்தியாக 

கேட்டுக் கடந்து போகாமல்,

பாட்டன் பாரதிதாசன்

சொன்னது போல...

"பண்ணப் பழகடா

பச்சை படுகொலை"

எனும் அடிப்படையில்,

இதன் ஆணிவேர் எதுவோ, யாரோ....

அதனை பாரபட்சம் காட்டாது

வேரோடு உடனடியாக 

களைந்தெறியும் திடம்

நம்மில் யாருக்கு என்று வருகிறதோ...

அன்றுதான் இந்தச் சமூகத்தில்

பெண் இனம் உண்மையில் தளிர்க்கும்...!

அந்தக் குழந்தையின் துர்மரணத்தால் சிதைந்து சின்னாபின்னமாயிருக்கும் குடும்பத்தார்க்கு இந்தக் கவிதை ஓர் சிறு சமர்ப்பணம்...!


பா. மணிகண்டன்


கனத்த இதயங்களுடன்,

மணிகண்டன். பா.





Comments

Popular posts from this blog

வயசாயிடுச்சில்ல...!

கட்டுமரம்