புறவழிச்சாலை

தேநீர்க்கடை

மழை அப்பொழுது தான் விட்டிருக்க வேண்டும்.  சாலையெங்கும் நீர்த் தெப்பங்களாயிருந்தது. அருகாமை பெரிய கட்டிடங்கள், தேங்கியிருந்த தண்ணீரில் தலைகீழாய் தெரிந்தன.  வானம் இன்னும் மேகத் திரள்களாய்த் தெரிந்தது. மழை மீண்டும் வரலாம்.  வராமலும் போகலாம்.  விடியற்காலையாதலால், அதிக நடமாட்டமில்லை.  அந்த சாலையின் இடது திருப்பத்தில் ஒரு தேனீர்க்கடை இயங்குவதுத் தெரிகிறது.  மெல்லியதாய் கந்தர் சஷ்டி கவசம் ஒலிக்கின்றது.   அருகில் செல்லச் செல்ல ஒலியின் அளவு கூடிற்று.

ஒரு போலீஸ்காரர் ஸ்டூலில் இருந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்தார். "அண்ணா, ஒரு டீ, சுகர் கம்மியா" அந்தப் பெண் கேட்டதும், கடைக்காரர் ஆச்சர்யமாய் பார்த்தார்.  டீ ஆற்றிக் கொண்டு அவளை அரைகுறையாய் நோட்டம் விட்டார்.  மாநிறம், சராசரிக்கு சற்று உயரம்.  சுடிதார்  அணிந்திருந்தாள்.  தலை வகிடின் ஆரம்பத்தில் குங்குமம் கலைந்திருந்தது. நெற்றியில் போட்டு இல்லை. கைகளில் ஒரு சிறிய பை. அதில் செல்போன் செருகியிருந்தாள். பெரிதாக நகைகள் ஏதுமில்லை. வயது நடுத்தரமாக இருக்கலாம். கண்கள் சிவந்திருந்தது. முகத்தில் கவலை தெரிந்தது. 

"இந்தாம்மா, டீ எடுத்துக்க"

ஏதோ யோசனையிலிருந்தவள், திரும்பி வாங்கிக் கொண்டாள். டீயிலிருந்து வெளியேறிய நீராவியும், அதன் வாசமும், அதனை உறிஞ்சும் போது, அவளிடம் தெரிந்தது. குனிந்து, அலைபேசியை பார்த்தபடி மீண்டும் குடித்தாள், காலியானதும் கசக்கி குப்பைத் தொட்டியில் போட, அதுத் தவறி அருகில் தரையில் விழுந்தது. அதனை எடுக்க அவள் குனிந்ததும், சுடிதாரின் கழுத்து உட்புறமிருந்து ஏதோ ஒன்று விழுந்தது. குப்பைகள் பாதி தொட்டிக்கும் மேலிருந்ததால், அது விழுந்த சப்தம் கேட்கவில்லை.  தவிர, அவளும் அதை கவனித்ததாய் தெரியவில்லை. வெளியில் விழுந்த டீ கப்பை எடுத்து, மீண்டும் குப்பைத் தொட்டியில் இட்டாள்.

"பரவாயில்லை, அதை விட்டுடுமா" என்றார் கடைக்காரர். "இல்லைண்ணா" சொல்லிவிட்டு அங்கிருந்து விரைந்தாள், மறைந்தாள்.

காவல் நிலையம் 

வெகு நேரமாக தோலை பேசி அடித்துக் கொண்டிருந்தது.  ரைட்டர்  எழுதுவதில் மும்முரமாக இருந்தார்.  வாசலில் இரண்டு காவலர்கள் அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர்.  வெளியிலிருந்து ஜீப் ஒன்று உள்ளே நுழைந்தது.  எஸ் ஐ வசந்தன், " யாராவது அந்த போனை எடுங்கய்யா" என்று கத்தியபடி உள்ளே வந்து, தானே அதை எடுக்க, மறுமுனையில், ஒரு சிறு பையனின் குரல் கேட்டது.  "சொல்லு தம்பி" என்றார்.  "அழாதப்பா, தெளிவா சொல்லு, எப்ப? எத்தனை மணிக்கு?", சரி, நான் வர்றேன், நீ தைரியமாயிரு" என்று சொல்லிவிட்டு, கான்ஸ்டபிள் என் கூட வாங்க, " பூந்தமல்லி பைபாஸ்ல ஒரு மர்டர் நடந்திருக்கு" என்றார்.

மேம்பாலம் 

பருந்துப் பார்வையில், வண்டலூர் - பூந்தமல்லி புறவழிச்சாலையின் நீளம், மயான அமைதியாய்த் தெரிந்தது.  வசந்தன், டிரைவரிடம் விரைவாகப் போகச் சொன்னார்.  தூரத்தில், சாலையோரத்தில், தனியே ஒரு பெண் போய்க் கொண்டிருந்தது தெரிந்தது.  "ட்ரைவர், ஸ்லோ பண்ணு", என்றரர்.  வண்டி, அவளைத் தாண்டி ஓரமாய் சென்று நின்றது.  அந்தப் பெண், அவர்களை கடக்க முயல, " ஓ, இந்தம்மாவா, காலையில டீக்கடையில பாத்ததா ஞாபகம்" என்றார் கான்ஸ்டபிள்.  அவள் பதட்டமானாள்.  ஆனால், வெளியே காட்டிக் கொள்ளாதது போல பாசாங்கு செய்தாள்.  " எங்கம்மா போற, தனியா?  வசந்தன் கேட்டார்.  "அம்மாவுக்கு உடம்பு சரியில்ல, பார்க்கப் போறேன் சார்" என்றாள்.  அதுக்கு ஏன்மா பைபாஸ்ல போற?  அவரது கேள்வி, அவளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது.  மேலும் அவளிடம் பேச்சு கொடுக்க, அவள் முன்னுக்குப் பின் முரணாக பேசவே, "ஏறுமா வண்டியில" என்றார்.  அதற்குள், புறவழிச்சாலையில் ஒரு மேம்பாலம் வரவும், அந்தப் பெண், சற்றும் தாமதிக்காமல் விருட்டென்று பாலத்தின் சுவரில் ஏறி குதிக்கவும், கீழே சென்று கொண்டிருந்த லாரி ஒன்று, அவளின் மீது ஏறி இறங்கவும் என, எல்லாமும் கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்தேற, அவள் இரத்த வெள்ளத்தில் மிதந்தாள்.

அவளது கைப்பையில் இருந்த செல்போன் ஒலித்துக் கொண்டிருக்க, சர்வீஸ் சாலையில்  வசந்தன் ஜீப் கீழிறங்கி வர, அதற்குள் அங்கே பெருங்கூட்டம் கூடியிருந்தது.  " தள்ளுயா, தள்ளுயா" கூட்டத்தை கான்ஸடபிள் சரி செய்ய, "உயிர் போயி அஞ்சு நிமிஷமாயிடுச்சு சார்" என்றான் கூடடத்திலிருந்த ஒருவன்.  வசந்தன், அவள து செல்போனை எடுத்து, மிஸ்டு கால் எண்ணுக்கு ட்ரை செய்ய, அவருடன் ஸ்டேசனில் பேசிய சிறுவனின் குரல் கேட்டது.  "அம்மா,  எங்கம்மா இருக்க?  அப்பா எந்திரிக்க மாட்டேங்கிறார்மா, கழுத்தெல்லாம் இரத்தமா இருக்குமா" என்றான். 

செவிலியர் விடுதி 

பத்து வருடங்களுக்கு முன், கீழ்ப்பாக்கம் அரசினர் செவிலியர் விடுதி, அந்தச் சாலையில், விடுதியின் பின்புற கேட் முழுவதுமாக மூடி, ஒருவர் மட்டும் சென்று வரக் கூடிய வகையில், ஒரு சிறிய கதவுடன் இருக்கும்.  வேணி, அவளது தோழிகளுடன், அந்த கேட் வழி வந்து, "செக்யூரிட்டி அண்ணா, ஒரு அரை மணி நேரம்ணா, வார்டன் கிட்ட சொல்லிடாதீங்க" என்று சொல்லியபடி வெளியே வந்து, அந்த சாலையின் எதிரில் இருக்கும் டீக்கடைக்கு வந்து செல்வாள்.  அவள், வரவுக்காக, காத்திருப்பான் கதிர்.  " ஏன் இன்னைக்கு இவ்வளவு நேரம்" கோபித்துக் கொண்டான்.  " டேய், உனக்கு என்னத் திமிரா?  நான் எல்லாத்தையும் பார்த்து, கவனிக்க வேண்டியவங்களுக்கு எல்லாமும் கவனிச்சிட்டு, வரதுக்குள்ள, உயிரே போகுது.  நீ, என்னடான்னா, ஏன் லேட்டுன்னு கேக்குற" என சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவள் கண்களில் கண்ணீர் கொட்டத் தொடங்கியது.  

"சரி சரி அழாத வேணி" சமாதானம் செய்தான்.  தோழிகள், சற்றுத் தொலைவில், டீயும், சம்சாவும் சாப்பிட்டுக் கொண்டிருக்க, கடையின் பின்புறம், இருவரும் சென்று, சற்றுத் தனிமையில், பேசிக் கொள்வர்.  கதிர், அவளை அணைத்து, நெற்றியில்.. உதட்டில் முத்தமிடுவான்.  டீக்கடைக்காரர், பின்புறம் வெங்காய மூட்டை எடுக்க வரும் போது, இவர்களை பார்த்ததும், இருவரும் சரி செய்து கொள்வார்கள்,  தம்பி கதிர், இந்த புள்ளயா ஏமாற்றிடாதப்பா, கடந்த ஒரு வருஷமா நீ இஙக வந்து போறதும், அந்தப் புள்ள மனசை கெடுத்ததும் எனக்குத் தெரியாமலில்லை, பார்த்துக்க அவ்வாளவுதான்" என்பார்.  

செல்வி 

அந்த வருடத்துடன் படிப்பு முடிய, கதிரும் வேணியும், அங்கே சந்திப்பது நின்று போயிற்று.  அவளுக்கு செங்கல்பட்டு அரசினர் மருத்துவமனையில் வேலை கிடைக்க, அங்கே போய்விட்ட்டாள்.  கதிர், சென்னை புறநகர்ப் பகுதியான முடிச்சூரில் ஒரு தனியார் ஆட்டோமொபைல் கம்பெனியில் எலக்ட்ரிக் மெயின்டனனஸ் சூப்பர்வைசராக வேலைப் பார்த்து வந்தான்.  அடுத்த வருடமே, இருவரும் வீட்டு எதிர்ப்புகளை மீறி, ரிஜிஸ்ட்டர் மேரேஜ் செய்து கொள்ள, வேணி வீட்டில் அவளை முற்றுலும் கை கழுவி விட்டு, வருடம் ஒன்று ஓடிப் போய்விட்டது.

தற்போது வேணி முழுகாமலிருக்கிறாள்.  இருவரும், படப்பையில் ஒரு தொகுப்பு குடியிருப்பில், கீழ்த் தளத்தில், ஒரு பெட்ரூம் வீட்டில் வசித்து வந்தனர்.  வேணிக்கு ஆண் குழந்தை பிறக்கிறது.  பிள்ளை வளர்கிறான்.  இருவரும், வேலைக்குச் சென்று வர, குழந்தை பெரும்பாலும் பக்கத்து வீட்டிலேயே வளர்ந்தான்.  செல்வி, பக்கத்து வீட்டுப் பெண்.  தாம்பரத்தில் கல்லூரி இறுதியாண்டு படித்து வருகிறாள்.  வேணி, மருத்துவமனையிலிருந்து, திரும்ப தாமதம் ஆகும் போதெல்லாம், குழந்தையை நன்கு கவனித்துக் கொள்வாள்.  கதிர் அண்ணா, வேணி அண்ணி என்று பாசமாய் இருப்பாள்.  குழந்தை அர்விந்த், செல்வி ஆண்டி என்று உயிரை விடுவான்.  வேணி, செல்வி இருக்கும் தைரியத்தில், சில நாட்கள் ஓவர் டைம் பார்த்தும் வருவாள்.  

வருடங்கள் ஓடிற்று.  அர்விந்த் 4ஆவது படிக்கிறான்.  செல்வி கல்யாணமா ஆகி வேலூர் சென்று விட்டாள்.  கதிர் இந்த வருடம் கம்பெனி வேலை விஷயமாக, அடிக்கடி வெளியூர் சென்று வந்து கொண்டிருந்தான்.  இரவு லேட்டாக திரும்பிக் கொண்டிருந்தான்.  

இரட்டை கொலை 

அன்று, வேணி மருத்துவமனைக்கு வேலைக்கு சென்றவள், உடல் நிலை சரியில்லை என்று, விடுப்பு எடுத்துக் கொண்டு, மதியமே புறப்பட்டு விட்டாள்.  கதிர், காலையில், அவளுக்கு முன்னரே அன்று வேலைக்குச் சென்று விட்டதால், சாவியை செல்வி வீட்டில் கொடுத்துச் சென்றதை, வாங்க வேணி உள்ளே செல்ல முற்பட, கதிரும் செல்வியும் அங்கே ஒன்றாக சந்தோசமாக அந்தரங்கத்தில்  இருப்பதை காணத் திடுக்கிட்டு, அவர்கள் இருவரின் கண்ணிலும் படாமல், மீண்டும் கிளம்பி மருத்துவமனைக்கே சென்று விடுகிறாள்.  

திருமணமாகிப் போன செல்விக்கும், தன் காதல் கணவனுக்குமான கள்ளத் தொடர்பு கண்டு, நெஞ்சடைத்தவளாய், ஆத்திரமும் அழுகையும் பொங்கி வர, வெடித்து அழுதாள்.  சற்று நேர யோசனக்குப் பிறகு, கோபம் தணிந்ததும், ஆப்ரேஷன் தியேட்டர் சென்று, குளோரோபார்ம் மருந்தும், பிரசவக் கத்தி ஒன்றையும் எடுத்து, கைப்பையில் வைத்துக்கொண்டு, மீண்டும் வீட்டிற்கு வருகிறாள்.  

செல்வி வீட்டுக்கு வெளியில் நின்று, அழைப்பு மணியடித்ததும், செல்வியை புதிதாய் பார்த்தவளாய், " எப்பம்மா வந்த? வீட்டுக்காரர் வந்திருக்காரா? என்றாள்.  இல்லை அண்ணி, அவர் வெளியூர் போயிருக்காரு.  அண்ணன் வந்தாரம்மா? என வேணி கேட்க, செல்வியின் கண்கள் பொய் பேசுவதை கண்டு கொண்டாலும், காட்டிக் கொள்ளாமல், சாவி வாங்கி கொண்டாள்.  வீட்டில் யாருமில்லையாமா? எனறாள்.  எல்லோரும் திருவண்ணாமலைக்கு ஒரு சாவுக்கு சென்று இருப்பதாகவும், நாளை காலை தான் வருவார்கள் என்றும் சொல்ல, வேணிக்கு நிம்மதியாக இருந்தது.  இரவு, அர்விந்தை தூங்க வைத்து விட்டு, செல்வி வீடு சென்று, சமயலறையில் இருந்தவளிடம், பேச்சுக்கு கொடுத்துக் கொண்டே, கையில் தயாராக வைத்திருந்த மயக்க மருந்தை, செல்வி மூக்கிலருகில் கொண்டு செல்ல, நிமிடத்தில் செல்வி மூர்ச்சையுற, பிரசவக் கத்தியினால், லாவகமாக அவளது குரல்வளையில் சரக்கென்று வெட்ட, இரத்தம் பீறிட்டு கொப்புளித்தாலும், மூச்சு நிற்கும் வரை அமைதி காத்து, அடங்கியதும், பிணத்தை கட்டிலில் கிடத்தி, போர்வை போர்த்தி விட்டு, கீழே சிந்தியிருந்த இரத்தத்தை சுத்தம் செய்து விட்டு, வீடு திரும்பினாள்.

நேரம் இரவு பதினோரு மணி.  அர்விந்த் அயர்ந்து தூங்கி கொண்டிருக்கிறான்.  கதிர் 12 மணி போல வீட்டிற்கு  வர, விழித்துக் கொண்டிருந்த மனைவியைப் பார்த்து, ஏன் இன்னும் தூங்கலையா ? என்றான்.  "இல்லை கதிர், இன்னைக்கு ஒரு கேஸ் .... ஆஸ்பிடல்ல.. புதுசா கல்யாணம் ஆனப் பொண்ணு, வேறு யாரோடவோ கள்ளத் தொடர்பு வச்சிருந்தா போல, அந்த ஆளும் கல்யாணம் ஆனவன் போல.  ஆத்திரம் வந்து அவன் பொண்டாட்டி, இந்தப் பெண்ணை, குரல் வளையில கத்தி வச்சி வெட்டிடுச்சு. இரத்தம் புல்லா போயிட்டதால, பாவம் காப்பாத்த முடியல" என்று சொல்லி, அவனது முகம் மாறக் கண்டு, சரி நான் தூங்குறேன், நீ சாப்பிட்டியா என்றாள்.  அவன் "உம் " என்று சொல்லி விட்டு, பக்கத்து வீட்டு செல்வி இன்னைக்கு வரதா அவ அப்பா காலையில சொன்னாரே, வந்திருக்கா என்று, ஒன்றும் தெரியாதவன் போல கேட்டான்.  செல்வியினுடனான அவனது கள்ளத் தொடர்பு பற்றி, வேணிக்கு எதுவும் தெரியாது என்ற திருப்தி ஒரு புறமும், குற்ற உணர்ச்சி இன்னொரு புறமும் அவனை வருத்தியது. தூங்குவது போல பாவனை செய்து கொண்டிருந்த வேணி, இரவு 2 மணியைத் தாண்டியதும், எழுந்து பார்க்கையில், கதிர் ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருக்க, செல்வியை கொலை செய்தது போல, காதல் கணவனையும், தன் ஆத்திரம் தீர கொன்று முடித்திருந்தாலும், இறந்து கிடைக்கும் காதல் கணவனை, பார்க்க மனசில்லாமல், வேகமாய் வீட்டை விட்டு வெளியேறி,  அந்த அதிகாலை இருட்டில் நடக்கத் தொடங்கினாள்.  மழைத் தூறல் போட ஆரம்பித்தது.

நகராட்சி குப்பை வண்டி அந்த டீக்கடைக்கு வந்தது. துப்புரவு பணியாளர்  டீக்கடை குப்பைத் தொட்டியை எடுத்து வண்டியில் தட்டினார்.  இரத்தக் கறையோடு, ஒரு பிரசவ கத்தி ஒன்று வெளியே வந்து விழுந்தது.  டிவியில், காலை நியூஸ்ஸில், படப்பை அருகே, இன்று அதிகாலை ஒரு இரட்டை கொலை நடந்தது பற்றியும், மேம்பாலத்தின் அடியில் பெண் ஒருவர் குதித்து தற்கொலை செய்து கொண்டது பற்றியும் செய்தி ஓடிக் கொண்டிருந்தது.

Comments

Popular posts from this blog

பண்ணப் பழகடா பச்சை படுகொலை...!

வயசாயிடுச்சில்ல...!

ஏலே மக்கா...!