கட்டுமரம்

 



1991 ஆம் ஆண்டு...!

பன்னிரெண்டாம் வகுப்பின் இறுதித் தேர்வில்

நான் வாங்கிய மதிப்பெண்கள் மதிப்புடையதாயிருப்பினும்

அண்ணன் பாரதி படித்த ஆர் சியில் சேருமளவுக்கு

அதற்குத் தகுதியில்லை என அப்பா எனக்கு 

மாற்று வாய்ப்பை அமைத்துத் தராது போயினும்,

கிடைத்ததே போதும் எனக் கருதி என்னை

திருச்சி புனித வளனார் கல்லூரியில்

இளங்கலை இயற்பியலில் சேர்த்துக் கொண்டு,

மூன்று வருடங்கள் தவமாய் படித்து 

தனிச்சிறப்புடன் முதல் வகுப்பில் தேர்வான எனக்கு,

அந்த மதிப்பெண்கள் மட்டும்

என் சொந்தக் கல்லூரியிலேயே

எம் சி படிப்பதற்கு உதவாது,

அதற்கு பணமோ அல்லது சிபாரிசோ தேவை என்றும்

அது என் அப்பாவால் கொண்டுவர

முடியாது என்றும் தெரியாது...!

 

1994 ஆம் ஆண்டு...!

கூடப் படித்தவர்கள் எல்லாரும் சாமர்த்தியமாய்

தங்கள் வாழ்க்கைப் பாதையை

அமைத்துக் கொண்டு பயணிக்கத் துவங்கிய பொழுது

திக்குத் தெரியாமல் எந்தப் பக்கம் போவது என்று

நிலைதடுமாறி என் செய்வது என்று அறியாமல் 

பொறியியல் படிப்பினும் கடினமானதும்,

கல்லூரிகளில் படிப்பிக்க இயலாததுமான

எம் படிப்பு படிப்பதற்காக 

மாற்றுப்பாதையில்

பயணிக்க ஆயத்தமாகினேன்...!

இன்னொரு பக்கம்

கட்டிடப் பொறியாளர் ஒருவரின் கீழ்

வேலையும் பார்த்து வரலானேன்..!

 

1995 ஆம் ஆண்டு...!

அண்ணன் வற்புறுத்தலால்

சென்னை வந்து சேர்ந்து படிப்பைத் தொடர

எம் படிப்பின்

பகுதிச் சான்றிதழ் கிடைக்கப்பெற்று முடிக்க

வருடங்கள் இரண்டு ஓடியிருக்க,

வாழ்வில் பரிமளிக்க அது மட்டும் பயன்படாது

எனக் கருதி அண்ணன்

என்னை இண்டீரியர் துறையில்

படிக்கச் சேர்த்து விட

ஒரு வருட டிப்ளமா படிப்பை

மிகச்சிறந்த முறையில் படித்து,

அகில இந்திய அளவில் 

இரண்டாம் இடம்பெற்று தேர்வாகி,

அத்துறை வல்லுநர் ஒருவரிடம்

இரு மாதங்கள் பணிபுரிந்து வரும் சமயத்தில்

பேரிடியாய் வந்து சேர்ந்த

அண்ணண் அண்ணியின் விபத்துச் செய்தி

எங்கள் கனவுகளை எல்லாம் 

புரட்டிப் போட்டு சின்னாபின்னமாக்கிட,

மருத்துவமனையில் 

தன் மனைவியின் மரணச் செய்தி

கூட அறியாது சிகிச்சை பெற்று வந்த

அண்ணன் பாரதியை மூன்று மாதங்கள்

கண்ணை இமை காப்பது போல காத்து வந்தாலும்

காலனின் கணக்கு முடிந்திட்ட காரணத்தால்

1999 ஆம் ஆண்டின் முதல் நாளில்

பாரதி எங்களை விட்டு பிரிந்து,

குறிப்பாக என்னை அனாதையாய்

தவிக்க விட்டுச் சென்றான்...!

 

1999 முதல் 2005 வரை

சென்னையில் 3 வருடம்

பெங்களூரில் 3 வருடம்

என ஒரு எம் என் சி கம்பெனியில் பணி!

சக பணியாளராக நண்பர் ராஜேஷ் அறிமுகம்..!

 

2002ல் மனோவை சந்தித்து,

காதலாகி கசிந்துருகி பின்பு

2003ல் திருமணம் புரிய

2004ல் அகிலன் ஜனனம்...!

 

2005ல் புது கம்பெனி மாற்றம்.

வேலைக்குச் சேர்ந்து ஒரு வருடத்தில்

நண்பருக்கும் அங்கேயே வேலை வாய்ப்பை 

ஏற்படுத்திக் கொடுத்து

2011 வரை நாளுக்கு 12 மணிநேரம்

உழைத்து முதலாளிகளின் நற்பெயர் பெற்று பின்பு

2012 துவக்கத்தில் நண்பர் ராஜேஷீடன் கூட்டாக

புதிதாய் சொந்தமாக கம்பெனி துவக்கம்.

 

2012 துவக்கம் முதல் 2020 இறுதி வரை

கிட்டத்தட்ட 9 வருடங்கள்

மிகச் சிறந்த பல்துறை வேலைகளை

என் சொந்த முயற்சிகள் காரணமாக கிடைக்கப் பெற்று

வடிவமைத்தல் தொடங்கி செயல்படுத்துதல் வரை

தனியொருவனாய் செய்து,

பல கோடி பொருளீட்டி

வியாபார ஒப்பந்தம் காரணமாக

ஈட்டிய இலாபத்தில் சரிபாதியை

நண்பருக்கு பகிர்ந்து விட்டு

மிஞ்சிய பாதியைத் தான்

நாம் எடுத்துக் கொள்கின்றோம்

என்ற புரிதல் இருப்பினும்

அதனைப் பெரிதாகப் பொருட்படுத்தாமல்,

வந்த வருமானத்தில் 

மனைவிக்கு விரும்பிய 

தங்க ஆபரணங்கள் சேர்த்து

வங்கியில் பாதிக்கும் மேல் வைப்புத் தொகையினை

வைத்தது போக மீதித் தொகையில்

வாழ்க்கை வாழ்வதற்கே என்ற கோட்பாட்டில்

விரும்பியனவெல்லாம் அனுபவித்திடத் துணிந்து

மகிழுந்து முதல் சொந்த வீடுகள் வரை....

எண்ணில்லா இன்பச் சுற்றுலாக்கள் 

குமரி முதல் ஆக்ரா வரை...

உள்நாடு முதல் வெளிநாடு வரை...

சாலையோர தள்ளுவண்டி முதல்

ஐந்து நட்சத்திர விடுதிகள் வரை ....

என எல்லாம் சரியாகப்

போய்க் கொண்டிருக்க....

அழையாது வந்த விருந்தினராய்

2021 துவக்கத்தில்

வந்து சேர்ந்தது கொரானா 

எனும் கொடும் உயிர்கொல்லி நோய்...!

 

 செய்து கொண்டிருந்த வேலைகள் நின்று போயின...

வரவிருந்த புதிய வேலைகள் தள்ளி வைக்கப்பட்டன...

கொரானா கட்டுப்பாடுகள் உச்சத்தை த் தொடத் தொட,

அடையாரில் பிரதான பகுதியில்

இருந்த அலுவலகத்திற்கு

வாடகை ஆறு மாத பாக்கி வைத்து

அதனை முன் தொகையில்

கழிக்கச் சொல்லி இனிமேலும்

இந்த சுமையை சுமக்க வேண்டாம் எனக் கருதி

அலுவலகத்தை காட்டுப்பாக்கம் வீட்டின் அருகாமையில்

குறைவான வாடகைக்கு மாற்றிக் கொண்டு

ஆட்குறைப்பு, ஊழியக் குறைப்பு

என எல்லாம் செய்து

மாதாந்திர செலவினங்களை வெகுவாக குறைத்து

நிமிர்ந்து பார்க்கையில்

ஒன்றரை ஆண்டுகள் ஓடிப் போயிருந்தன...

சராசரி வருட இலக்கின் கால் பங்கினை மட்டுமே 

 கடந்த 2 வருடங்களில் கிடைக்கப் பெற்றோம்...!

இதற்கிடையே கொரானாவின்

தாக்குதலுக்கு குடும்பம்

முழுமையாக ஆட்கொள்ளப்பட,

பண விரயம் தாண்டி

மனவலியுடன் செய்வது அறியாது

நின்று கொண்டிருந்தோம்...!

 

2021 ஆண்டின் இறுதியில்

தொழிலில் பெரிய முன்னேற்றம்

ஏதும் இல்லாத காரணத்தால்

மாதாந்திர செலவினங்களை

சமாளிக்க மாற்றுச் சிந்தனையாய்

தொழில் சார்ந்த சில்லரை 

வணிக கட்டமைப்பு ஒன்றை

அமைக்க முடிவு செய்து

வீட்டின் அருகாமையிலேயே

2000 சதுர அடி

வணிக வளாக இடம் பார்த்து

உள் அலங்காரம் எல்லாம்

பெரும் பொருட்செலவில்

வெகு ரசனையுடன் பார்த்துப் பார்த்து இழைத்து முடித்து, 

அதற்கு "எக்ஸ்பீரியன்ஸ் சென்டர்" எனப் பெயரிட்டு,

அதன் திறப்பு விழாவினை

2022 ஜனவரி 17 ஆம் தேதி

என்று நாள் குறித்து ஆயத்தமாகையில்

மூன்று நாட்களுக்கு முன்பு

ஜனவரி 14 பொங்கல் தினத்தன்று

அப்பாவின் உடல்நிலை  குன்றியதைத் தொடர்ந்து

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட,

எல்லாமும் ஒரு நிமிடம் ஸ்தம்பித்ததாகத் தோன்றிற்று....!

 

புதிய அலுவலகத்திறற்கு

பூஜை மட்டுமாவது செய்து முடித்து விட முடிவு செய்து,

மருத்துவமனையிலிருந்து

என்னால் வர இயலாத சூழ்நிலையில்

நண்பரிடத்து அப்பணியை ஒப்படைத்து விட்டிருந்தாலும்,

அதனைத் தொடர்ந்து அடுத்த நாற்பது நாட்கள் 

தந்தையுடன் சேர்ந்து மொத்த குடும்பமும்

மரணப் போராட்டத்தில்

ஈடுபட வேண்டிய காரணத்தால்

வியாபார திறப்பு விழா நிகழ்வினை ஒரேயடியாக

புதிய கணக்கு ஆண்டில்

துவங்குதலே சாலச் சிறந்தது

என முடிவெடுத்ததன் விளைவு

2022 ஜனவரி 17ஆம் தேதியிலிருந்து மார்ச் 22 வரை

இரண்டரை மாத காலம்,

புதிதாய் அலங்கரிக்கப்பட்ட

எனது கனவு அலுவலகம்

பூட்டி வைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது..!

ஒரே ஆறுதல்அப்பா பிழைத்துக் கொண்டார்....!

 

இடையில் நண்பருடன்

வர்த்தகப் பங்கீடு தொடர்பாக 

கருத்து வேறுபாடு ஏற்பட்டு 

எங்களுக்குள் இருந்த 23 வருட

நட்பு முறிவடைந்த துரதிருஷ்டமும்

அரங்கேறி அவர் வெளியேற,

ஒட்டு மொத்த நிர்வாகத்தை

தனி ஒருவனாக நடத்த விழைந்து

அதற்கான மிகப் பெரிய விலைகொடுத்து

கையை விட்டுப் போகவிருந்த

தொழிலை மீட்டெடுத்து,

வியாபாரத்தின் பழைய பெயரை தியாகம் செய்து

புதிய பெயரில் பயணிக்க அனைத்தையும் மாற்றி

அதற்காக கூடுதல் செலவினங்கள் செய்யத் துணிந்து 

கடந்த ஏப்ரலில் இருந்து

இந்த பத்து மாதங்களில்,

புதிய வேலைகளுக்காக     

எத்தனையோ  மதிப்பீடுகளை கொடுத்திருந்தும்,

வாடிக்கையாளர்கள் அளித்த

சின்னஞ்சிறு வேலைகள்

மட்டுமே கிடைக்கப்பெற்று,

அதில் கிடைத்த சொற்ப

வருமானத்துடன்  கையிலிருந்த

மிச்ச பணம் அனைத்தையும் 

சேர்த்து தொழிலை எப்படியாவது 

நடத்தி விட வேண்டிய வைராக்கியத்தில்,

புதிய வியாபாரத்தை 

மக்களிடையே கொண்டு செல்ல

நான் மேற்கொண்ட உத்திகள்

எதுவும் எடுபடாமல் போக,

எந்த காரணத்திற்காக இந்த

புதிய மாற்றுப் பாதையினை தேர்ந்தெடுத்தேனோ

அந்தப் பாதை முழுதும் கற்களும் முட்களுமே

இருக்குமேயானால் நான் என்ன செய்வேன்...???

 

கையில் இருந்த பொருளெல்லாம்

இந்த மூன்று வருடங்களில்

மொத்தமாக கரைந்து போக,

அடுத்த கட்ட நகர்வாய் 

வீட்டுப் பத்திரத்தையும் அடமானம் வைத்து

பொருள் திரட்டிட முடிவு செய்து,

அவ்வாறே நடந்தேறியது...!


இதற்கெல்லாம் ஒருபடி மேலாக,

ஆசையாசையாய் நான் செதுக்கிய

"எக்ஸ்பீரியன்ஸ் சென்டரும்"

வாடகைச் சுமை காரணமாக,

தற்சமயம் என் கையை விட்டு இதோ போகப் போகிறது...!

பிள்ளையை பறிகொடுத்த 

தாயின் மனநிலையில்,

நெஞ்சில் கவலைத்தீ பற்றி எரிய,

அலுவலகத்தை புதிய இடத்திற்கு மாற்ற முற்பட்டு

மீண்டும் பயணிக்கத் துவங்குகிறேன்....!


 1991 மேல்நிலைப்பள்ளி இறுதி ஆண்டு தொடங்கி,

இதோ புது வருடம் 2023 ஜனவரி மாதம்

பிறந்து இருக்கிறதுஇன்று வரை,

இந்த 32 வருடங்கள்

நான் சந்தித்த சோதனைகளும், ஏமாற்றங்களும் 

ஒன்றாஇரண்டா..?? கணக்கிலடங்கா...!

 

இவையெல்லாம் ஏன் இவ்வாறு நடக்கிறது

எனக்கு மட்டும் ஏன் நடக்கிறது எனும் கேள்விக்கு

பதில்கள் ஏராளம், தாராளம்..!

நேரம் சரியில்லை,

கிரகம் சரியில்லை!

விரைய சனி, சூன்யம்

முன் ஜென்ம பாவம், கர்ம பலன்...

இப்படி பலப் பல...!

 

மனித வாழ்க்கை என்பது 

அலைகடலில் செய்யும் 

படகு சவாரி போன்றது..!

சில காலம் பயணம் ரம்மியமாயிருக்கும்...

சில காலம் கடல் சீற்றத்தினால் தத்தளிக்கும்...!

புயல் மழையில் சின்னாபின்னமாகும்...

படகில் ஓட்டை விழும்; கவிழும்...!

ஆனாலும் கரை சேரும் வரை கட்டுமரம் மிதக்கும்,

இந்தக் கட்டுமரம் இறுதி வரை மிதக்கும்!

உயிர் அற்ற மரமாய்த் தான் கரை சேரும்...!


பா. மணிகண்டன்

 

 

Comments

Post a Comment

Popular posts from this blog

பண்ணப் பழகடா பச்சை படுகொலை...!

வயசாயிடுச்சில்ல...!