கரீ(ரோ)னா வைரஸ்...!



எதேச்சையாகத் தான் நடந்தது அது!
"பீனிக்ஸ் மால்" பார்க்கிங் 
வளாகத்தில் காரைப் பார்க் செய்து விட்டு கதவைத் திறக்கும் போது, அருகில் பூனையாய் ஒரு கருப்பு ஆடி மெல்ல ஊர்ந்து வந்து சேர்ந்தது.  அதிலிருந்து அந்தப் பெண் இறங்கி தன் தீர்க்காமான நெற்றியில் படர்ந்த கேசத்தை சரி செய்ய முயல, அவள் கைகளில் இருந்து வாலட் கீழே விழுந்து, காரின் அடிப்பகுதியில் சென்று விட, அதை எடுக்க முயன்றுத் தோற்று, மேலே எழும்பியவள், நான் பார்ப்பதைப் பார்த்ததும், "இஃப் யூ டோன்ட் மைண்ட்" என்றதும், காத்திருந்தவனாய் "ஸ்யூர்" என்று, குனிந்து எடுக்க முயல, அருகில் நின்று கொண்டிருந்தவளின் முடிவிலியான முழங்காலை முழுமையாகப் பார்க்க நேரிட, புழுக்கத்தில் வியர்வை சட்டையை நனைத்து விட்டிருந்தது.  வாலட்டை எடுக்கும்போது அதிலிருந்து அவளது விசிட்டிங் கார்டு ஒன்று வெளியேற, அதனை லாவகமாய் மறைத்து, வாலட்டை மட்டும் எடுத்துக் கொடுத்ததும், " வெரி கைண்ட் ஆஃப் யூ" எனச் சர்க்கரையாய் ஒரு புன்முறுவல் செய்து, கை கொடுத்து விட்டு, "யூ ஆர் ஸ்வெட்டிங்" அன்று குறும்பாய்ச் சொல்லிச் சென்றாள்.  அவள் அவ்விடம் விட்டு நகர்ந்திருந்தாலும், இன்னும் அவள் அணிந்திருந்த GUCCI புளூ செண்ட்டின் நறுமணம் மட்டும் என்னை எதோ செய்தது.  விசிட்டிங் கார்டைப் பார்த்தேன்.  "கரீனா" பாஷன் டிசைனர், வுஹன், சைனா என்று இருந்தது.  இன்னும் கொஞ்சம் நேரம் பேசிக் கொண்டிருந்திருக்கலாமோ? என என்னையே கடிந்து கொண்டேன். 

அவளது கை ப(தொ)ட்ட என் வலது கையில் அவளின் ஸ்பரிசம் இன்னமும் என்னுடன் ஒட்டிக் கொண்டு, என்னைப் பாடாய்ப்படுத்தியது.  அவளது ஒல்லியான தேகமும், நெடு நெடுவென உயரமும், வலது கன்னத்தில் மெல்லியதாய் தென்பட்ட வடுவும், பெரிய உதட்டில் பரவலாய் வெளிர் ரோஜா  நிறப் பூச்சும், இறுக்கமான மேல் சட்டையில் அவளது வயதும் என கரீனா என்னை மொத்தமாய் வியாபித்திருந்தாள். 

மூன்று நாட்கள் சளி இருமல் என உடல் சரியில்லாததால், ஆஃபீஸ்க்கு விடுமுறை சொல்லி விட்டு, வீட்டில் நியூஸ் பார்த்துக் கொண்டிருந்தேன். சைனாவில் வேகமாகப் பரவி வரும் ஒரு தொற்று வைரஸ் பற்றி, ஆங்கிலச் சானலில் விவாத்தித்துக் கொண்டிருந்தனர். டாக்டர் ஒருவர், அதன் அறிகுறிகள் பற்றி விளக்கிக் கொண்டிருந்தார்.  மாலை, அருகாமை கிளினிக் சென்று டாக்டரைப் பார்த்து வந்தேன்.  "எதற்கும் ஒரு பிளட் டெஸ்ட் எடுத்து விடலாம், ஜஸ்ட் எ பிரிக்காஷன்" என்று எழுதிக் கொடுத்தார். பிளட் மாதிரியைக் கொடுத்து விட்டு, வீட்டிற்குத் திரும்பினேன்.  அயர்ந்து தூங்கி விட்டேன்.  எழுந்த போது, அம்மா அருகில் சோகமாய் அமர்ந்து இருந்தது, மங்கலாகத் தெரிந்தது.  

இரவு வீட்டு வாசலில் ஒரு ஆம்புலன்ஸ் வந்து நிற்கும் சத்தம் கேட்டதும், அதிர்ந்து எழ முயன்று முடியாமல் போனது. என்னை ஒரு துணியில் தலையையும் சேர்த்து கட்டி, ஸ்டெரெச்சரில் எடுத்துக் கொண்டு ஆம்புலன்ஸ் கிளம்பியது.  

வழியில், என் தலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த என் பெயர் போட்டிருந்த ஃபைலின் கவர் காற்றில் பறந்து கொண்டிருக்க, "வைரஸ் - பாசிட்டிவ்" எனக் கொட்டை எழுத்துக்களில் இருந்தது போலத் தெரிந்தது.  மாஸ்க் அணிந்திருந்த ஒரு நர்ஸ் ஃபோனில், "யெஸ் டாக்டர், பர்ஃட் விக்டிம் பாஃர் கரோனா வைரஸ்" என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

எனக்கு ஒருமுறை கரீனா முகம் வந்து போனது.  நான் உயிருடன் இல்லை எனத் தெரிகிறது.

மணிகண்டன். பா


Comments

Popular posts from this blog

பண்ணப் பழகடா பச்சை படுகொலை...!

வயசாயிடுச்சில்ல...!

ஏலே மக்கா...!