தூவானம்...!



சென்ற சனி அல்லது ஞாயிறு..!
சரியாக ஞாபகமில்லை, இப்போது அது முக்கியமில்லை!
அவளைப் பார்த்தேன்! அவ்வளவுதான்!
அது மட்டும் தான் எனக்கு முக்கியம்!
என்னோட ஷாலு மாதிரியே முகம் அவளுக்கு!
மறக்க முடியாத முகம்! என்னிலிருந்து அழிக்க முடியாத முகம்!

என் ஷாலுவுக்கு அப்போது 17 அல்லது 18 வயதிருந்திருக்கலாம்!
எனக்கு 20 - 22 என்று ஞாபகம்!
REC யில் எலக்ட்ரானிக்ஸ் 2ஆம் ஆண்டு படித்து வந்தேன்!
நாங்கள் திருச்சியில் மலைக்கோட்டைக்கு கீழே
சந்தி வீரப்பன் கோவில் வீதியில் இருந்தோம்.
சாலையிலிருந்து வீடு செல்ல ஒரு குறுகிய சந்தில் தான் செல்லவேண்டும்.
வெளியில் வீதிக்கு வந்துப் பார்த்தால் சாலையின் மறு பக்கத்தில்
பச்சை நிறத்தில் பெரிய பெரிய கம்பி போட்ட வீடு!
வெளியில் திண்ணை, உள்புறம் வெளியிலிருந்து
பார்த்தாலே தெரியும் முற்றம்!
ஷாலு, தாய், தந்தை, அக்கா, பாட்டி தாத்தா சகிதம்
என ஒரு கூட்டு குடும்பத்தில் வாழ்கிறவள்!
என் தங்கை அபியின் சினேகிதி!
இருவரும் சீதாலக்ஷ்மி கல்லூரியில் BA ஆங்கிலம் ஒன்றாய் படிப்பவர்கள்!
அடிக்கடி வீடு வந்து செல்வாள்!
அய்யர் வீட்டுப் பெண்! திவ்யமாய் இருப்பாள்.
பளீரென்று சிரிப்பாள், சிரிக்கும் போது
வலது கடைவாயில் ஒரு தெற்றுப்பல் தெரியும்,
அதை அவசரமாக மறைக்க முயன்றுத் தோற்றுப் போவாள்!
அவள் வரும் போதெல்லாம் நான் அவளை கவனிக்காமல்
கவனிப்பதை கவனிப்பாள், காட்டிக் கொள்ள மாட்டாள்.
அவளைப் பற்றி நான் என்னவெல்லாம் நினைக்கிறேன்
எனக் கேட்பது போல ஒரு பார்வை வீசி விட்டுப் போவாள்!
பெரிய அழகெல்லாம் இல்லை, ஆனால் அழகாக இல்லாமல் இல்லை!
நெற்றியில் மையமாய் ஒரு கருப்பு கோவிப் போட்டு எப்போதும் இருக்கும்!
புருவத்தில் சிறு வயதில் அடிபட்டிருக்கலாம், ஒரு மெல்லிய வடு இருக்கும்!
அடிக்கடி நெற்றியில் விழும் முடியை கோதிக் கொள்வாள்!
வலது மணிக்கட்டில் உள்புறம் ஷாலு என்று பச்சைக் குத்தியிருக்கும்!

வார இறுதி நாட்களில் தான் பெரும்பாலும் வருவாள்!
அப்படி ஒரு நாள் வந்த போது அவள் மொத்தக் குடும்பமும்
பழனி சென்றுவிட்டதாகவும், வீட்டில் அக்கா மட்டும் இருப்பதாகவும்
எனக்கு கேட்க்கும்படி சத்தமாக சொன்னாள்!
"என்ன ஷாலு நீ போகலியா?"என்றேன்.
நான் போக முடியாது, என்றாள்.  "ஏன்?", இது நான்.
"ஐயோ அண்ணா, அவ போகக் கூடாது" தலையில் தட்டிக் கொண்டே அபி.
எனக்குப் புரிவதற்குள் ஷாலு அங்கிருந்து மறைந்திருந்தாள்.

மதியம் 3 மணியிருக்கும், எனக்கு இருப்பு கொள்ளவில்லை!
வீட்டில் தனியாக இருப்பதாக சத்தமாக சொல்லிச் சென்றாளே,
ஒரு வேளை என்னை அழைக்கிறாளா?
ஆயிரம் கேள்விகளுடன் ஆர்வமிகுதியால் வீதி சென்றேன்.
வெளியில் மழை வர எத்தனித்தது!
வானம் கரு கும்மென்று இருந்தது!
திண்ணையில் எனக்காகவே காத்திருந்தவள் மாதிரி 
குளித்து விட்டுத் தலையை துவட்டிக் கொண்டு
எங்கள் சந்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்!
நான் தென்பட்டதும், என்ன இன்ஜினியர் என்றாள்!
பார்வையில் வாவென்று அழைத்தது போன்றிருந்தது.
ஏதோ ஒரு சக்தியால் உந்தப்பட்டவனாய் சென்றேன்!
என்ன வாலு என்றேன், ஹலோ நான் வாலு இல்ல ஷாலு என்றாள்!
உங்க வீட்டுக்கு வந்துட்டு போம்போதெல்லாம்
நீ என்னைப் பார்த்து சைட் அடிக்கிறது எனக்குத் தெரியாதா, என்றாள்.
அடிப்பாவி என்றேன்! புருவத்தில என்ன வடு ஷாலு?
டேய், என்னடா அப்படியே தொடப் பாக்கிறியா?
ஏன், தொடக் கூடாதா?,
வேண்டாம்னு சொன்னேனா?
சொல்லியவள் சட்டென்று எழுந்து உள்புறம் சென்றாள்.
நானும் பின் தொடர்ந்தேன்! காணவில்லை அவளை!
வலது புறம் இருட்டாக ஒரு சிறு அறை,
உள்ளிருந்து என் கைப்பற்றி இழுத்தாள்!
அறை முழுதும் வெறும் பழைய பாத்திரங்கள்!
சுவற்றில் ஒரு பக்கத்தில் சின்னதாய் ஒரு ஜன்னல்!
எங்குப் பார்த்தாலும் ஒட்டடை.
ஏய், என்னடி பண்ற நீ?
என்னை ஜன்னலின் அருகே நிறுத்தி அழுத்தி
தீர்க்கமாய் கண்கள் மூடி முத்தமிட்டாள்.
கன்னியின் கன்னி முத்தம்!
சொல்லனாதொரு வாசனையின் மொத்தக் கலவையாக என்னை
போட்டுத் தாக்க, நான் நிலை குலைந்துப் போக,
தன்னை விடுவித்துக் கொண்டவள் ஜன்னலில் வெளியே
ஏதோ ஒன்றைப் பார்த்து பயந்து வீலென்று அலறினாள்!
அங்கே, வீட்டின் நடு முற்றத்தில் அவளது அக்கா
தூக்கில் பிணமாய்த் தொங்கிக் கொண்டிருந்தாள்!


அந்த சம்பவத்தைத் தொடர்ந்து
அந்தக் குடும்பத்தில் நடந்தேறியவை பற்றி
ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாய் பேச,
பின்னாளில் அந்த பக்கம் செல்வோரெல்லாம்
இதோ இந்த பச்சை கம்பி போட்ட வீட்டுல தான்
ஒரு பொண்ணு தூக்கு மாட்டிக் கிடுச்சி,
என்னவோ காதல் விவகாரமாம், என்று சொல்லக் கேட்டிருந்தோம்!
அதனாலேயே என்னவோ, ஷாலுவின் குடும்பம்
அங்கிருந்து வேறு ஊருக்கு புலம் பெயர்ந்ததாய் அறிந்தோம்!
எங்கே சென்றார்கள் என்று யாருக்கும் பெரிதாய்
தெரிந்திருக்கவில்லை.
அதை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை,
என்னைத் தவிர! பின்ன? என் முதல் காதல் அனுபவம் இவ்வளவு பயங்கரமாகவா இருக்க வேண்டும்?

வருடம் 20 ஆகி விட்டது,
எனக்கு இப்போது வயது 42 ஆகிறது!
சிங்கப்பூரில் வேலை.  எனக்கு ஒரு குடும்பம் இருக்கிறது!
மனைவி அர்ச்சனா, மகன் தேஜஸ் 8th கிரேடு படிக்கிறான்!
விடுமுறைக்கு சொந்த ஊர் செல்ல முன்னரே திடடமிட்டு
நாளை முதல் பிளைட்டில் திருச்சி செல்ல இருக்கிறோம்.
டிவியில் செய்திகள் பார்த்துக் கொண்டிருந்தேன்!
என் மனைவி, சீக்கிரம் படுங்க, என்றாள்.
ஒவ்வொரு முறை ஊர் செல்லும் போதும்,
எனக்கு ஷாலு ஞாபகம் வந்து விடும்!
நான் ரொம்ப சந்தோசமாகத் தெரிவேன்!
மனைவியோ, 'சொந்த ஊர்னா மட்டும் எங்க இருந்து தான்
இப்படி சந்தோஷம் வருமோ தெரியல', என்பாள்.
அலாரம் அடித்ததும், விருட்டென்று எல்லாப் பணிகளையும்
முடித்து விட்டு ஏர்போர்ட் விரைந்தோம்!
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்! பணிப்பெண்கள் அழகாய் செயற்கைப் புன்னகைகளை உதிர்த்துக் கொண்டிருந்தார்கள்!
நான்கு மணி நேரம் பிரயாணம்.
திருச்சி இறங்கிய போது
மழை பெய்திருந்த சுவடுகள் தெரிந்தன.
ஏர்போர்ட் மொத்தமாய் நனைந்திருந்தது!
அப்பாவிற்கு போன் செய்துவிட்டு,
டாக்சி பிடித்து வீடு வந்து சேர்ந்தோம்!
கால மாற்றம் திருச்சியை மொத்தமாக மாற்றியிருந்தது!
ஆனால், எங்கள் தெரு மட்டும் அப்படியே இருந்தது!
ஷாலு வீட்டைக் கடக்கையில்
திண்ணையில் அன்றைய தினம் அமர்ந்திருந்த மாதிரியே இருந்தது!
உள்ளே பிணம் தொங்குகிறதா என்றுப் பார்த்துக் கொண்டேன்!
அப்படி ஒன்றும் இல்லை, நல்ல வேளை!

தங்கை, குழந்தைகளை அழைத்துக் கொண்டு
சென்னையிலிருந்து வந்திருந்தாள்!
ஷாலு பற்றி விசாரித்தேன்!
எங்க போனாங்கன்னுகிற விவரம் யாருக்கும் தெரியலடா, என்றாள்.
அது எப்படிடி?  ஒருத்தருக்கு கூடவா தெரியாது?
என்னை என்ன பண்ண சொல்ற இப்ப நீ, கடிந்து கொண்டாள்.
ஷாலுவை மறுபடியும் எங்காவது
பார்த்து விட மாட்டோமோ என்று ஏங்கினேன்!

மாலை எனது பழைய நண்பன் முரளியைப் பார்க்க
தில்லைநகர் செல்ல வெளியில் வந்தேன்!
வானம் இருண்டுக் கொண்டு வந்தது!
குடை எடுத்துட்டுப் போங்க! அர்ச்சனா தூரத்தில் கத்தினாள்!
கருப்பண்ண சுவாமி கோவில் கடந்து செல்லும் போது
அஜந்தா கடை தாண்டி ஒரு இடத்தில் ஒரு கூட்டமாஇருந்தது!
என்ன என்று ஆவலில் எட்டிப் பார்த்தேன்!
ஒரு பெண்ணை பின்புறமாய் கைகளைக்
கட்டிப் போட்டு வைத்திருந்தார்கள்!
அந்தப் பெண் உடம்பில் சுமார் ஒரு டஜன் துணி உடுத்தியிருந்தாள்.
அழுக்கு முழுக்கைச் சட்டை அணிந்திருந்தாள்.
கடைப்பொருள் எதையோ திருடி விட்டதாக சொன்னார்கள்!
தலை முடி பரட்டை முகத்தில் பாதியை மறைத்திருந்தது!
சற்று மன சுவாதீனமாகத் தெரிந்தாள்.
சரி விடுங்கப்பா, அதுவே பைத்தியம், அதைப் போயி
கட்டி வைத்துக்கிட்டுனு ஒரு பெரியவர் சொல்ல,
கூடியிருந்த கூடடம் மெல்ல கலையத் தொடங்கியது!
விளக்கு கம்பத்தில் கட்டியிருந்த கயிற்றை
நானும் இன்னொரு நண்பரும்
அவிழ்த்து விட்டுக் கொண்டிருக்கையில்
எனக்கு ஒரு யோசனைத் தோன்ற,
முரளியை போனில் அழைத்தேன்!
உங்க வீட்டுப் பக்கத்துல ஒரு மன நல காப்பகம் இருந்ததே இல்லடா,
அது இன்னும் இருக்கா? என்றேன்.
ஏன் கேட்கிற, நல்லா இருக்கே, என்றான்.
தகவலைச் சொல்லி விட்டு, அவனை அங்கிருந்து வண்டி ஒன்றை
எடுத்து வரச் சொன்னேன்!
வந்ததும் அந்த அம்மாவை வண்டியில் ஏற்றி விட்டு
ஒரு நல்ல காரியம் பண்ண திருப்தியில் வீடு வந்து சேர்ந்தேன்!

விடுமுறை முடிந்து இன்று மீண்டும் ஊர் கிளம்ப வேண்டும்!
அப்பா, அம்மாவிடம் விடை பெற்று விட்டு
ஏர்போர்ட் புறப்பட்டோம்! மழைத் தூறிக் கொண்டிருந்தது!
தில்லை நகர் திரும்பும் போது
மனசில் திடீரென ஒரு யோசனை வந்தது!
அர்ச்சனா, உன்கிட்ட அன்னைக்கு சொன்னேல்ல,
ஒரு அம்மாவை மீட்டு காப்பகத்தில் விட்டேன்னு!
அவுங்க இப்ப எப்படி இருக்காங்கன்னு பார்த்திட்டு போயிடலாமா?
மகன் தேஜஸ், அம்மா சரின்னு சொல்லுமா, சரின்னு சொல்லுமா,
என்று அனத்த, டிரைவரை, காப்பகம் செல்லுமாறு பணித்தேன்!

விவரம் சொன்னதும்,
ஒரு ஒடிசலான பெண்மணியை அழைத்துக் கொண்டு வந்தார்கள்!
தலைக்கு மொட்டைப் போட்டிருந்தது!
பக்கத்தில் வந்ததும் மகன் தேஜஸ்,
ஆண்டி, ஆண்டி நீங்களும் எங்க கூட வரீங்களா
என்று கை கொடுத்தான்!
அந்த அம்மாவின் கையைப் பிடித்து
மகன் கையில் திணித்தார்கள்!
வலது கையின் உள்புறம் 'ஷாலு' என்று எழுதியிருந்தது!

பா. மணிகண்டன்


























































































Comments

Popular posts from this blog

பண்ணப் பழகடா பச்சை படுகொலை...!

வயசாயிடுச்சில்ல...!

ஏலே மக்கா...!