ஸ்ருதி !



பூவை பறித்தால் தான் என்றில்லை,
பறிக்காமல் போனாலும் வாடித் தான் போகும்!

பூச்சூடும் பாவை உன் முகம் மட்டும்
உயிர் பறிக்கப்பட்டும் வாடாமல் இருப்பதென்ன?

எதை மறைத்தாய் எதை புதைத்தாய் ஆள் மனதில் புரியவில்லை!
உனைப் புதைக்க இன்று கூடியுள்ளோம் காரணம் தெரியவில்லை!

பருவப் பெண் நீ சாகும் பருவமா இது!
உருவக் குறைச் சொல்ல உன்னிடத்தில் இருப்பது தான் ஏது!

தெய்வக் குழந்தையடி உன்னை பறி கொடுத்து
தெய்வக் குற்றம் ஆனதென்னை?

கள்ளம் கபடம் இல்லா உன் சிரிப்பை காலன்
கொள்ளை கொண்டு போனதென்ன?

யார் செய்த பிழைக்கோ நீ வந்து பிறந்தாய்!
ஊர் செய்த பிழைக்கு உன் உயிரையும் துறந்தாய்!

நாகரிகக் கோமாளிகள் வாழும் இவ்வுலகில்
நாகரிகம் சற்றே மறந்திருந்தாய்!

கண்ணில் ஆயிரம் கனாக்களுடன் எங்களைச் சுற்றி சுற்றி வந்தாய்!
வண்ணத்துப்பூச்சி போல் சிறகடித்து எங்கோ பறந்து சென்றாய்!

மண்ணுக்கு மரம் பாரமா இல்லை நிழல் தான் பாரமா !
யாருக்கு நீ பாரம் என எங்களைத் தவிக்க விட்டாய் பாரம்மா !

காலங்கள் கனியும் உன் கோலங்கள் மாறும் என்று காத்து இருந்தோம்!
கோலங்கள் அழியத்தான் வேண்டும் என்று விதி மதித்து
சொல்லாமல் சொல்லிச் சென்றாயோ?

மனிதம் மறந்து  புனிதம் அடைந்தாய்!
மானுடத்தின் இறுதி வரை, ஸ்ருதி நீ வாழ்வாய்!
இறைவியாயிருந்து இனி உன் குடும்ப நலன் காப்பாய்!
வாழ்க உன் நாமம்!




















Comments

Popular posts from this blog

பண்ணப் பழகடா பச்சை படுகொலை...!

வயசாயிடுச்சில்ல...!

கட்டுமரம்