தோழர் முரளி ...!


தோழர் முரளி ...!

மிஞ்சிப் போனால் என்ன ஒரு வருடம் இருக்குமா..?
எனக்கு அவரும்; அவருக்கு நானும் அறிமுகமாகி...!
ஏதோ பல வருடப் பழக்கம்போல் உணர்வு மேலிடத்தான் செய்கிறது,
ஒவ்வொரு முறை அவரிடத்து பேசும் போதும், பழகும் போதும்!

நண்பர்கள், நல விரும்பிகள் என எல்லோரையும் போல
சிநேகிதர்கள் பலர் என் வாழ்க்கையிலும் வந்து போனாலும்,
பெரியதாய் சொல்லிக் கொள்ளும் படியாக
ஒரு நட்பு வட்டாரம் எனக்கு இருப்பதாகத் தெரியவில்லை!
அதற்கு காரணமாக இந்தத் தலைமுறை சங்கடங்களை
குற்றம் சொல்வதா இல்லை சொல்லாமல் விடுவதா? புரியவில்லை !
பால்ய காலத்திலிருந்தே விரல் விட்டு
எண்ணி விடும் அளவுக்குத் தான் நண்பர்கள்  எனக்கு!
பள்ளி பிராயத்திலிருந்தே, நண்பன் ஜோ!
கல்லூரி காலத்திலிருந்து, நண்பன் பிராங்க்ளின்,
பணியிடத்தில், நண்பர் ராஜேஷ்!
இப்பொழுது வசிப்பிடத்தில் தோழர் முரளி!

எங்களது முதல் சந்திப்பு,
இன்னும் எனக்கு பசுமையாய் நினைவிருக்கிறது...!
அது ஒரு சிறு தூறல் பெய்து கொண்டிருந்த முன்பனிக் காலம்!
வசிக்கும் குடியிருப்பின் பொதுப் பணிகளில்
என்னை அதிகமாய் ஈடுபடுத்திக்கொண்டிருந்த காலம்!
கண்காணிப்பு குழுவுடன் தீவிர விவாதத்தில் நான்!
கண்களில் எச்சரிக்கையும், நடையில் அமைதியும், தோற்றத்தில் ஆளுமையும் என கலவையாய்
கைகளில் குடையுடன் அவர்!
ஓரிரு வார்த்தைகள் பேசியிருப்போம்!
எங்களுக்கும் பரஸ்பரம் புரிந்து கொள்ள
அந்த ஓரிரு வார்த்தைகள் போதுமானதாக எங்களுக்குள்
சங்கேதப் பரிமாற்றம்தனை  அரங்கேற்றியிருக்க வேண்டும்!
அதுவும் எங்களுக்கும் அறியாமலேயே ஏற்பட்டிருக்க வேண்டும்!

அதைத் தொடர்ந்து,அவரது துணைவியாரிடத்து
என் மகன் கணிதப்பாடம் சொல்லிகொள்ள சென்றதும்,
குழந்தைகள் தின விழாவில்,
அவர்கள் இருவரையும் தம்பதி சமேதம் தலைமை தாங்க நான் அழைத்ததும்,
குடியிருப்பு பொது விவாதங்களில் எங்கள் இருவரது கருத்துகளும்
ஒரே அலைவரிசையில் பயணிக்கத் தொடங்கியதும் என
இப்படி பல்வேறு ஞாபகங்கள்
இந்த ஒரு வருடத்தில் ஒவ்வொன்றாய் என்னுள்
பிரளயமாய் புறப்பட ஆயத்தமாகிறது!
எல்லாவற்றிற்கும் மகுடம் வைத்தது போல
அமைந்தது தான் அவரது அறுபதாம் பிறந்த நாள் விழாவும்
அந்த விழாவில் அவர் எழுதி வெளியிட்ட
இரு ஆங்கிலப் புத்தகங்களின் வெளியீடுகளும் !
விழாவைத் தொகுத்து வழங்க அவர் என்னை
அன்பாய் கேட்டுக் கொண்டதும்!
எங்களுக்குள் புலரத் துவங்கியிருந்த புரிதலுக்கு
மற்றுமொரு முத்தாய்ப்பான வாய்ப்பாக
அந்த நிகழ்வு யதார்த்தமாய் நடந்தேறியது!

தோழமை என்பது வயது பாராதது!
பின்புலம் ஆராயாதாதது !
இனம், மொழி, பேதமை அறியாதது!
அது எங்கோ, எதிலோ எப்புள்ளியிலோ துளிர்ப்பது!
அன்பை மட்டுமே பிரதிபலன் பாராமல் பரிமாறிக் கொள்ளச் செய்வது!
நட்பை மாத்திரம் சுயநலமின்றிக் போற்றி பாராட்டுவது!
அந்த உணர்விற்கு உருவகம் கொடுக்க இயலாது!
அனுபவிக்க மட்டுமே இயலும்!


தோழர் முரளி உடன் கூட,
புதிதாய் துவங்கியிருக்கும் நட்பெனும் எனது பயணம்
இனிவரும் காலங்களில் இன்னும்
பல்வேறு பரிணாம வளர்ச்சியடையும்
என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளவனாகனாக
இதோ, நாளைய விடியலின் பாதையில்  பயணிக்க முற்படுகிறேன்!


































Comments

  1. உங்கள் நட்பு மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. உங்கள் நட்பு மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பண்ணப் பழகடா பச்சை படுகொலை...!

வயசாயிடுச்சில்ல...!

கட்டுமரம்