அந்த ஏழு நாட்கள்...!




முதல் நாள்:

அதிகாலை 3 மணிக்கெல்லாம் புறப்பட்டு விடலாம் அம்பைக்கு
என முன்கூட்டியே திட்டமிருந்ததால்
வழக்கத்துக்கு மாறாகத் தூக்கம் வர மறுத்தது!
ஒரு மணிக்கெல்லாம் விழித்துக் கொண்டு
புறப்பட ஆயத்தமானேன்!
மனோ, என் சத்தங்களின் இடையூற்றில்
லேசாக அரைத் தூக்கக் கலக்கத்தோடு
நடுநிசியில் பிசாசு போல் நடமாடும்
என்னை அசிங்கமாய்ப் பார்த்தாள்!
கலைந்தக் கூந்தலும் வெற்று நெற்றியுமாய்
அழகான இராட்சஷியாய் தெரிந்தாள்!

சபரி எஸ்டேட் சென்று
மாமாவையும் கலாவையும் உடன் அழைத்துக் கொண்டு
சென்னையிலிருந்து அம்பை நோக்கி
வெர்னா காரில் ஒரு வழியாக கிளம்பினோம்!
வழியில் பெரம்பலூர் தாண்டி
ஆர்யா உணவு விடுதியில்
அமோகமாய் காலைச் சாப்பாடு!
இலவச கேசரியும், ஏழு வகை "தொட்டுக்க" வகையறாக்களும்
இன்னமும் நாவில் சுவைத் தெரிகிறது !
மதியம் 12:30 மணியளவில்
அம்பாசமுத்திரம் ஊர் வாயிலைத் தொட்டதும்
ஏதோ ஒரு பரவசமும் கூடவே வந்து ஒட்டிக் கொண்டது!

மதிய உணவை சந்திரா வீட்டில் முடித்துக் கொண்டு
அகிலனையும், சபரீசையும் அழைத்துக் கொண்டு
குமார் வீட்டுக் கொல்லைப் புறத்தில்
கொட்டிக் கிடக்கும் இயற்கையின்
கொள்ளை அழகைக் காணச் சென்றேன்!
பச்சைக் கம்பளமாம் வயல் வெளிகளைக் கடந்து
கரை புரண்டோடும் தாமிரபரணியின் சலசலப்பை
ஒட்டுக் கேட்க ஒற்றை ரயில் பாலம் கடந்து சென்றேன்!
சற்றுத் தொலைவில் ரயிலொன்றின் சைரன் சப்தம்
கேட்டதும் சற்றே உற்சாகம் அடைந்தேன்!
என் உற்சாகம் வீண் போகவில்லை!
விரைவு ரயில் ஒன்று வெகு அருகில்
என்னைக் கடந்து போகும் நொடிப் பொழுதுகளை
கைபேசி காமிராவில் தக்கவைத்துக் கொண்டேன்!
"தடக் தடக்" சப்தம் இன்னும்
என்னில் ஒலித்துக் கொண்டிருக்கத்தான் செய்கிறது!
மாலை குமார் படித்த பள்ளி வளாக மைதானம் சென்று
ஆசை தீர வியர்வை புரள கிரிக்கெட் விளையாடி வந்தோம்!

இரண்டாம் நாள்:

அதிகாலை முதல் வேலையாக அருகிலிருக்கும்
அகஸ்தியர் அருவி நோக்கிப் பயணித்தோம்!
மேற்குத் தொடர்ச்சி மலைகளின் பெய்த மழையின் உக்கிரம்
அருவியில் வெள்ளைக் கம்பிக் கற்றைகளாய் கொட்டியது!
பரிபூரண ஆனந்தக் குளியல்!
கழுத்தும், பிடரியும், தோளும், முதுகும் நீர்வசமாகி விட
வெள்ளை தேவதைகளின் கொஞ்சல் அறைகளை
சந்தோசமாய் வாங்கிக் கொண்டோம்!
கிளம்ப மனசில்லாமல் கிளம்பினோம்!
குளித்ததும் எடுத்த நல்ல பசியை
வீ கே புரம் ரெட்டை பெஞ்ச் குட்டி ஓட்டல்
அன்புடன் கவனித்துக் கொண்டது!

வீடு திரும்பினோம்!
மறுநாள் சபரிமலை யாத்திரைப் பற்றி விவாதித்தோம்!
குமாரும் மாமாவும் இருமுடி சாமான்கள் வாங்கச் செல்ல,
நானும் குழந்தைகளும் அருகிலிருக்கும்
கோவில் பிரகாரத்தில் "கிரிக்கெட்" விளையாடச் சென்றோம்!
மாலை குருசாமியைச் சந்தித்து உரையாடினோம்!

மூன்றாம் நாள்:

புனித யாத்திரை செல்லவிருப்பதால்
வாகனச் சுத்தத்தின் அவசியம் கருதி
அதிகாலையிலே சங்கரன் கோவிலைத் தொட்டு ஓடும்
ஆற்றங்கரைச் சென்று கழுவி,
நாங்களும் திவ்ய சிநானம் செய்து வந்தோம்!

நெய்த் தேங்காய் தயார் செய்து,
அருகிலிருக்கும் விநாயகர் கோவிலில் வைத்து
இருமுடிகளைக் கட்டிக் கொண்டு
மலைக்கு நண்பகல் புறப்பட்டுச் சென்றோம்!

செல்லும் வழியில் எல்லை காவல் தெய்வங்களுக்கெல்லாம்
தேங்காய் உடைத்து வழிபட்டு,
இடையில் புளியரை தக்சிணாமூர்த்தி கோவில்
சுவாமி தரிசனம் பார்த்து விட்டு
மாலை 5:15 மணியளவில் பம்பை வந்தடைந்தோம்!
ஆற்றின் கரையருகில் வெர்னாவிற்கு இடம் கிடைத்தது!
பம்பையில் வழக்கத்துக்கு மாறாக
வெகு குறைவாகவே சுவாமிமார்கள் கூட்டம்!
புனித பம்பையில் நீராடி விட்டு
6:30 மணியளவில் மலையேறத் துவங்கினோம்!
குமார் பம்பையினிலேயே தங்க ஆயத்தமானார்!

இரண்டு மணி நேரம் மலையில்
வெறும் காலுடன் பயணம்!
அய்யன் ஐயப்பனின் நாமம் சொல்லிக் கொண்டே
நீலி மலை, அப்பாச்சி மேடு,
சரங்குத்தி கடந்து 8:30 மணியளவில்
சந்நிதானம் வந்தடைந்தோம்!
மிகச் சிலரே பதினெட்டாம் படியினில்
ஏறிக் கொண்டிருக்கும் காட்சி கண்டதும்
எல்லையிலா ஆனந்தம் கொண்டு
படிக் காய் உடைத்து ஒவ்வொரு படியாய் முத்தமிட்டு
மேல் தளத்தில் சுற்றி வந்து
ஐயனை அதி விரைவில் நெருங்கிச் செல்ல
ஹரி ஹர சுதன் ஆனந்த சித்தன்
அய்யன் ஐயப்பன் ராஜ அலங்காரத்தில்
ஜீவ சாட்சியாய் உயிரோட்டமாய் காட்சி தந்தான்!
கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுக்க
அவனை வழி பட்டு ஜென்மப் பயனடைந்தோம்!
பிற்பாடு மஞ்சள் மாதாவையும் தொழுது விட்டு,
விடுதி ஒன்றில் அறை எடுத்துத் தங்கினோம்!
இருமுடிகளைப் பிரித்து
அபிசேக நெய்யை ஒன்று சேர்த்து வைத்தோம்!
பயணக் களைப்பில் அயர்ந்துத் தூங்கிப் போனோம்!

நான்காம் நாள்:

விடிகாலை எழுந்து தயாராகி
நெய் அபிசேகம் முடித்து
மீண்டும் மஞ்சள் மாதா வலம் வந்து
பன்னீர் தெளித்து சுற்றி வந்ததும்
ஒரு கூட்டம் தனியாய் முண்டியடித்துக் கொள்ள
பரிச்சயமான முகம் ஒன்று அருகில் கடந்து சென்றது!
அது, கேரள நடிகர் மோகன்லால்!

அகில பாரத அய்யப்ப சேவா சங்க அன்னதானம் முடித்து
மணி 7:30க் கீழே இறங்கத் துவங்கினோம்!
90 நிமிடங்களில் பம்பை வந்தடைந்தோம்!
அய்யப்பனுக்கு நன்றிகூறி விட்டு உடன் புறப்பட்டோம்!
வரும் வழியில், ஆரியங்காவு கோவில் சென்றோம்!
பலாப் பழம் விளையும் இடத்தில்
ஒரு முழுப் பழம் வாங்கி வந்தோம்!
மதிய உணவிற்கே வீடு வந்து சேர்ந்தோம்!
விரத துளசி மாலை கழட்டி
15 நாள் வளர் தாடி மழித்து
மீண்டும் ஆசாமியாகிப் போனேன்!
அகிலனோ , "அப்பா உங்களுக்கு தாடியே பொருத்தமாய் இருக்கிறது" என்றான்!

முந்தைய நாள் சாப்பிட்ட பஜ்ஜி மற்றும் பரோட்டா ஒத்துக் கொள்ளாமல்
வயிறு வலி என அகிலன்  சொன்னதும்
டாக்டர் ஆனந்த ஜோதியிடம் அழைத்துச் சென்று
ஊசி போட்டு வந்தேன்!
ரதீசுக்கும் உடல் சரியில்லை என்றதும்
மறு நாள் துவக்கவிருந்த
மூன்று நாள் சுற்றுப் பயணத்தை ரத்து செய்தோம்!

ஐந்தாம் நாள்:

மாமா, கலா மற்றும் மனோவுடன் மட்டும்
நாகர்கோவில், மார்த்தாண்டம் செல்ல முடிவெடுத்து
வெர்னாவில் கிளம்பிச் சென்றோம்!
மதிய உணவு மார்த்தாண்டம் ஹோட்டல் சித்ரா!
தென்னிந்திய உணவு விடுதியில் வடக்கத்து தாளி உண்டோம்!

மார்த்தாண்டம்....!
என் இளம் பிராயத்தின் 8 மற்றும் 9 ஆம் அகவைகளில்
நாங்கள் வசித்த அழகிய சின்னஞ் சிற்றூர்!
அப்பா நகராட்சி பொறியாளர்!
நான் அரசு மேல் நிலைப் பள்ளியில் 4 ஆவது மற்றும் 5 ஆம் வகுப்புகள்
படித்து வந்தேன்!  பள்ளியின் மைதானத்தின்
சுற்றுப் புறச் சுவரிலிருந்து எட்டிப் பார்த்தால்
எங்கள் வீடு தெரியும்!
அது ஒரு டாக்டரின் வீடு!
வீடுகளில் 13 அறைகள் இருந்ததாய் ஞாபகம்!
ஊரின் துவக்கத்தில் பெரிய கற்களால் கட்டப்பட்ட
CSI சர்ச் ஒன்று உண்டு!
30 வருடங்களுக்குப் பிறகு அதை மீண்டும்
பார்க்கிறேன் எனும் வியப்பு மேலிட
என்னையே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்!
அதன் கம்பீரம் சற்றும் குலையாமல் அப்படியே இருந்தது!

அதைத் தொடர்ந்து நாங்கள் வசித்த வீட்டின் முகப்பை
நினைவு கொணர்ந்து கண்டு பிடித்தேன்!
நல்ல வேளை   அது இன்னும் இடி படாமல் அப்படியே இருந்தது!
தற் சமயம் YWCA வாடகைக்கு இருக்கிறது!
வாசல் வந்து, கதவைத் தட்டி
வார்டனிடம் விவரம் சொல்ல முற்பட்டு
அந்த பெண்மணியின் பிடிவாதத்தில் தோற்றுப் போனேன்!
உள்  செல்ல அனுமதி மறுக்கப் பெற்றாலும்
மனைவி மனோவிற்கு அதன் உட்புற அமைப்பைப் பற்றி
விளக்கி விட்டு, பிரிய மனசில்லாமல், அங்கிருந்து புறப்பட்டேன்!

வெட்டுவென்னி சாஸ்தா கோவில் சென்றோம்!
கோவில் அற்புதமாய் புதுப்பிக்கப் பட்டிருந்தது!
குழந்தைகள் நலன் கருதி
வெடி வழிபாடு செய்தோம்!

இறுதியாய் சப்பாத்து (sub-path ) சென்று பார்த்தேன்!
வழக்கம் போல் ஆற்றில் தண்ணீர்
ஆர்பரித்துச் செல்ல,
சப்பாத்தில் மக்கள், கால்களின் இடுக்குகளில் நீர் அலசிச்
செல்லும்படியாய் நடந்து சென்றனர்!

அந்த ஊரின் ஒவ்வொரு தெருவும் என்னுடன்
கூடவே பேசிக் கொண்டு வந்ததாய் உணர்ந்தேன்!
மனசில் ஓராயிரம் எண்ண
ஓட்டங்களுடன் கிளம்பி வந்தேன்!
மாலையில் நாகர்கோவிலில் இருக்கும்
மனோவின் மூத்த மாமா வீடு சென்று
சமீபத்தில் பூப்பெய்திருக்கும் சிறுமி ஹரிணியைப் பார்த்து
நலப் பரிவர்த்தனை செய்து கொண்டோம்!
அந்த அழகிய சிறுமகள்
மெல்லிய வெட்கத்துடன் முகம் புதைத்து
தங்கையுடன் "carom board " விளையாடிக் கொண்டிருந்தாள்!
ஒரு புதிய அத்தியாயம் அதன் விழிகளில் பிரகாசித்தது!
வாழ்த்து சொல்லி இரவு அம்பை வந்தடைந்தோம்!
வரும் வழி முழுக்க "கலை"யோ,
என் வாழ்வில் மனோ வந்த கதையை சுவையாய் சொல்லி வந்தாள்!
12 வருடங்கள் முன்னோக்கிச் சென்று வந்தேன்!
மனோவின் வெட்கம் காரின் உட்புற கண்ணாடியில் தெரிந்தது!

ஆறாம் நாள்:

முன் கூடியே ஏற்பாடு செய்திருந்த வேனில்
அனைவரும் ஒருங்கே கிளம்பி
பத்மநாபபுரம் அரண்மனை, மாத்தூர் தொட்டி பாலம்
மற்றும் திருப்பரப்பு அருவி என
குமரி மாவட்டத்தின் முக்கிய மூன்று தலங்களுக்குச் சென்றோம்!
கன்னியாகுமரி கடலின் மேல் சூழ்ந்திருந்த
வெப்பச் சலனம் பெரு மழையை
பயணம் முழுமையும் எங்களுக்காக வழங்கிக் கொண்டிருந்தது!
முதலாவதாக சென்றது,
மனோவின் பெற்றோர் திருமணம் நடைபெற்ற
குமார கோவில்! அழகிய கற்கோவில்!
பின், அரண்மனை சென்றோம்!
கேரள நாட்டு மார்த்தாண்ட வர்மனின் கலாரசனை
அந்த பிரதேசம் முழுமையும் ஆக்ரமித்திருந்தது!
"மணிச்சித்திரதாழ்" மற்றும் "வருஷம் 16"
திரைப்படக் காட்சிகள் வந்து சென்றன!
அதனைத் தொடர்ந்து
பரளி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள
தெற்காசிய கண்டத்திலேயே மிகவும் உயரமானதுமான
மாத்தூர் தொட்டிப்பாலம் சென்றோம்!
ஒரு முனையில் தொடங்கி மறு முனையில் இறங்கி
மறுபடியும் ஆற்றைக் கடந்து
மீண்டும் படிகள் ஏறி பாலம் அடைவது ஒரு அனுபவமாய் இருந்தது!
பாலமும் அதன் சுற்றுச் சூழலும் மிரட்டின என்பதே உண்மை!
கடைசியாக திருபரப்பு அருவி வந்து சேர்ந்தோம்!
வெள்ளம் ஆர்ப்பாட்டமாய் பாய்ந்தோடி பயமுறுத்தியது!
வயிற்றில் லேசாகப் புளியைக் கரைத்தது!

வரும் வழியில் கௌரிஷங்கர் ஓட்டல்  நுழைந்து
மோசமான அணுகுமுறை கண்டு வெகுண்டு சினம்கொண்டு
வெளியேறி பிற்பாடு நாகர்கோவில் பார்வதிபுரம்
ஓட்டலில் பசியாற்றிக் கொண்டோம்!

ஏழாம் நாள்:

முதல் நாள் பயணக் களைப்பில் அயர்ந்து தூங்கி
மெதுவாய் முழித்து பின்
ஆற்றுக்குச் சென்று வெகு நேரம் குளித்து வந்தோம்!

குழந்தைகளுடன் நான் மட்டும் சென்று
பள்ளி மைதானத்தில் கிரிக்கெட் விளையாடி வந்தேன்!
மதியத்துக்கு சற்றே சுவை குறைவோடு செய்யப்பட்டிருந்த
கோழி பிரியாணியும் வருவலும் காத்திருந்தது!
 உண்டு களித்து பின்
மாலை என் பங்கிற்கு பாசந்தி சுவீட் செய்தேன்!
மட்டிப் பழமும், அன்னாசிப் பழமும்
என எல்லா வகைப் பழங்களையும் ஒரு பிடிபிடித்தோம்!
அடுத்த நாள் சென்னை புறப்பட வேண்டியிருக்கிறதே என்றிருந்தது!
ஏக்கத்துடன் தூங்கிப் போனோம்!

நினைவுகள் பொய்யற்றவை !  கலப்படம் அறியாதவை!
அரிதாரம் பூசாதவை !  சாகாவரம் பெற்றவை !
அம்பையிலிருந்த இந்த ஏழு நாட்கள்
பற்றிய நினைவுகள் என்றென்றும் என்னுடன்
தங்கிப் போய் விடவும்;
என்னுடைய எல்லா பதிவுகளும்
என் காலத்தையும் தாண்டி என்றென்றும் நிலத்து நிற்கவும்
எல்லாம் வல்ல அந்தப் பரம்பொருளை பிரார்த்திக்கிறேன்!




- பா மணிகண்டன்











































Comments

Popular posts from this blog

பண்ணப் பழகடா பச்சை படுகொலை...!

வயசாயிடுச்சில்ல...!

கட்டுமரம்