பசுமையான அந்த பத்து வருடங்கள்!


பசுமையான அந்த பத்து வருடங்கள்!

1985 ஆம் ஆண்டு, முதன் முதலில் காரைக்குடியிலிருந்து திருச்சிராப்பள்ளி மாநகருக்கு எங்கள் ஜாகை மாற்றப்பெற்றது! அப்பா, முனிசிபல் பொறியாளராய் இருந்தவர், குடிநீர் வடிகால் வாரியத்துக்கு மாற்றம் பெற்றார்! அப்பாவுக்கு ஒரு பழக்கம். எங்கெல்லாம் அவருக்கு மாற்றல் கிடைக்கிறதோ அங்கெல்லாம் எங்களையும் உடன் கூட்டிக்கொண்டு சென்று விடுவார்! திருச்சி வரும் முன்னர், நான் காரைக்குடி, மார்த்தாண்டம், சென்னை அம்பத்தூர், தேவகோட்டை என்றெல்லாம் சுற்றியிருக்கிறேன்! அப்பாவுக்கு நன்றி! நான் ஒரு கலா ரசிகனாய் இருப்பதற்கு ஒருவேளை இது கூட அச்சாரமாய் இருந்திருக்கலாம்!

திருச்சியில், முதலில் நாங்கள் செக்கடித் தெருவில், பாப்பாக்கா வீட்டு மாடியில், நான்கு புறமும் சுவர், தலைக்கு மேல் மூங்கில் கீற்று கொட்டகை, தகர டின் தடுப்பு குளியல் மற்றும் கழிவறை, மழை வந்தால் ஆங்காங்கே சொட்டும் தண்ணீரை நிரப்ப அலுமினிய பாத்திரங்கள், வெயில் அடித்தால் தரை எங்கும் ஜொலிக்கும் சூரிய வெளிச்ச வைரங்கள் என ஒரு அட்டகாசமான சூழலில் தான் வாழத் துவங்கினோம்! அந்த வீட்டுக்கு வராத நண்பர்களும், உறவினர்களும் இல்லை; அந்த வீட்டில் நடக்காத வைபோவங்கள் இல்லை! சித்தியை பொண்ணு பார்த்தது முதல், பெரியப்பா மகள்களுக்கு பிரசவம் பாத்தது என, எங்கள் குடும்பத்தின் எல்லா பிரதிநிதிகளுக்கும் அந்த வீடு ஒரு வேடந்தாங்கலாய் இருந்ததாய் சொல்வேன்!

என் அப்பாவை பார்க்க எத்தனை பெரிய ஆபிசர்கள் வந்தாலும், அந்த வீட்டில் தான் தடபுடலாய் விருந்தோம்பல் நடக்கும்! மீன், கோழி, மட்டன் இல்லாது மெனு கிடையாது! மதியம் சாப்பாடு என்றால், அம்மா காலில் சக்கரம் கட்டிக்கொண்டு, எல்லா வகைகளும் செய்து முடிப்பார்கள். சூப்பில் துவங்கி, மாமிசம், குஸ்கா, தால்சா, வெங்காயப்பச்சடி, பீர்ணி என்று களை கட்டும்! அப்பாவுக்கு மாத வருமானம் அநேகமாய் நாலாயிரம் இருந்திருக்கலாம்! விருந்து சமயங்களில், அம்மாவின் தங்க செயினோ அல்லது வளையலோ அடகு கடை அடிக்கடி சென்று வந்து கொண்டிருக்கும்!

வீட்டில், அதிக பட்ச பொழுதுபோக்கு சாதனம், பாக்கெட் ரேடியோ ஒன்று மட்டுமே! விவிதபாரதியின் வர்த்தக ஒலிபரப்பு, பிரபலம்! கொடிக்கால்பாளையம் ஜான் ஹாஜா நஜுமுதீன் என்று ஒரு நேயர், தினசரி தன் விருப்ப பாடல்களை ஒலிபரப்ப சொல்லி கேட்டு மகிழ்வார்! ஞாயிற்றுக்கிழமைகளில் மதியம் ஒலிச்சித்திரம் வரும்! திருவிளையாடல், சரஸ்வதி சபதம், விதி போன்ற படங்களை நான் ரேடியோ மூலம் பார்த்தது அப்போதுதான்!

நான் அப்போது ஆறாம் வகுப்பு படித்து கொண்டிருந்தேன்! என் சக வயதில் பக்கத்து வீட்டில் ஜெயந்தி என்று ஒரு பெண்ணும், எதிர் வீட்டில் சாதனா என்று ஒரு மலையாள குட்டியும் இருந்தனர்! ஜெயந்தி, சாவித்ரி வித்யாசாலா, சாதனா ஹோலி கிராஸ், நான் சென்ஜோசப்! அடிக்கடி நோட்சுகள் மாற்றி கொள்வோம்! பாடம் தவிர மற்ற எல்லா கதைகளும் பேசுவோம்! ஜெயந்திக்கு என் மேல் ஒரு கண்! எனக்கோ சாதனா மேல்! அது ஒரு முக்கோண காதல் கதை!

நினைவுகள் தொடரும்...

Comments

  1. ஆறாம் வகுப்பிலேயே முக்கோணக் காதல் கதையா?
    தொடர்ந்து கலக்குங்கண்ணே! ;-)

    Unable to post comments in your post, from the main page. I opened that comment window in a new tab and posted it.

    ReplyDelete
  2. //திருச்சியில், முதலில் நாங்கள் செக்கடித் தெருவில், பாப்பாக்கா வீட்டு மாடியில், நான்கு புறமும் சுவர், தலைக்கு மேல் மூங்கில் கீற்று கொட்டகை, தகர டின் தடுப்பு குளியல் மற்றும் கழிவறை, மழை வந்தால் ஆங்காங்கே சொட்டும் தண்ணீரை நிரப்ப அலுமினிய பாத்திரங்கள், வெயில் அடித்தால் தரை எங்கும் ஜொலிக்கும் சூரிய வெளிச்ச வைரங்கள் என ஒரு அட்டகாசமான சூழலில் தான் வாழத் துவங்கினோம்! அந்த வீட்டுக்கு வராத நண்பர்களும், உறவினர்களும் இல்லை; அந்த வீட்டில் நடக்காத வைபோவங்கள் இல்லை! சித்தியை பொண்ணு பார்த்தது முதல், பெரியப்பா மகள்களுக்கு பிரசவம் பாத்தது என, எங்கள் குடும்பத்தின் எல்லா பிரதிநிதிகளுக்கும் அந்த வீடு ஒரு வேடந்தாங்கலாய் இருந்ததாய் சொல்வேன்! //அருமையான நினைவுகள். அதுவும் உங்கள் நடை இன்னும் அருமை. முயன்றால் நீங்கள் ஒரு சிறந்தாஎழுத்தாளராகவும் ஆகலாம். (கவணிக்க:எழுத்தாளராகவும் என்றுதான் சொல்லியிருக்கிறேன்)
    அப்புறம் அந்த முக்கோணம் என்ன ஆச்சி?

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பண்ணப் பழகடா பச்சை படுகொலை...!

வயசாயிடுச்சில்ல...!

கட்டுமரம்