Monday, August 10, 2009

நீங்குமோ காரை மாநகரின் நினைவுகள்!


அப்போது எனக்கு ஆறு அல்லது ஏழு வயது இருக்கும். நாங்கள் எல்லாம் காரைக்குடியில் வசித்து வந்தோம். அப்பா நகராட்சிப் பொறியாளராக வேலை பார்த்து வந்தார். நகரத்தார் வாழும் ஊரென்பதால் திரும்பிய பக்கமெல்லாம் செட்டியார் வீடுகள், அரண்மனைகள் போல் கம்பீரமாய் வீதி எங்குமிருக்கும்.

எங்கள் வீடும் அப்படிப்பட்ட இரு அரண்மனைகளுக்கு இடையே, ஒரு மினி பங்களா போல இருந்ததாக ஞாபகம். கொப்புடையம்மன் கோவில், குஞ்சு கிருஷ்ணன் பிள்ளை வீடு, நடராஜா தியேட்டர், மேலவூரணி, LFRC school என சொல்லிக் கொண்டே போகலாம். அப்பா ஒரு பச்சைக் கலர் லாம்ப்ரடா ஸ்கூட்டர் வைத்திருந்தார். எங்கள் நாலு பேரையும் எப்போவாவது ஒரு முறை அதில் உக்கார வைத்துக் கொண்டு, சினிமாவுக்கு கூட்டிப் போவார். அப்படியொரு முறை நாங்கள் எல்லோரும் அதில் பயணித்தபோது, அம்மா சேலை சக்கரத்தில் மாட்டி கீழே விழுந்து கைகளில் சிராய்ப்பு, ரத்தம் வழிய வழிய, என்னுடைய சினிமா கனவு தகர்ந்து போனது. நான் இரவு முழுதும் அழுது கொண்டிருந்தது இன்னும் நினைவில் பசுமையாய்...

எங்கள் அடுத்த வீட்டில் எப்போதும் ஒரு கொலுசுச் சத்தமும், கலகலவென சிரிப்பொலியும், மல்லிகை வாசமுமென கவிதையாய் ஒரு சூழல் நிலவும். எங்கள் வீட்டின் கொல்லைப்புறமும், அவர்கள் வீட்டின் பின்வாசலும் ஒரு சந்தின் மூலம் ஒன்று சேரும். சந்தின் கடைசியில் ஒரு சிறு கிணறும் உண்டு. ஆனால் அதில் தண்ணீரைப் பார்த்ததாய் ஞாபகமில்லை.

அந்த வீட்டில், லக்ஷ்மி அக்கா, லக்ஷ்மி அக்காவென்று ஒரு அக்கா பட்டுத் தாவணியும், தங்க வளையல்களும், தங்கக் கொலுசுமென நிறைவாய் எப்போதும் புன்னைகையோடு கைகளில் குமுதம், விகடன் சகிதம் வளைய வருவார்கள். அம்மாவுடன், வாசற்படியில் அமர்ந்து ஊர்க்கதை பேசுவார்கள். 'மணிகண்டு', 'மணிகண்டு' என்று வாசமாய் அழைப்பார்கள்.

அவர்கள் குமுதம் படிப்பதைப் பார்ப்பதே ஒரு அழகு. "அந்த மாதிரியான" விசயங்களை படிக்கும் போது, குமுதம் அவர்கள் நெஞ்சருகில், சொற்ப தூரத்தில் இருக்கும். அவர்கள் வெட்கப்படும் போது, வெளிப்படும் சிரிப்பு வேறு வகையில் இருக்கும்!

மதிய வேளைகளில், எல்லோரும் அயர்ந்து தூங்கும் போது, அக்கா என்னை மடியில் கிடத்தி, என் தலையை கோதிக்கொண்டே, குமுதம் படிப்பார்கள்! நான் அப்படியே தூங்கிப் போய்விடுவேன். எழுந்திருக்கும் போது, அம்மாவும், அக்காவும் சேர்ந்து பூக்கட்டிக்கொண்டிருப்பர்கள். அக்காவின் கைகளில் இருக்கும் மல்லிகை வாசமும், அவர்களது அருகாமை சுவாசமும் இன்னும் எனக்குள் எங்கோ ஓரிடத்தில் தங்கியிருக்கவே செய்கிறது!

அதற்கப்புறம் என் வாழ்க்கையில் எத்தனையோ பெண்களை சந்தித்திருந்தாலும், என்னை ஏதோ ஒரு வகையில் பாதித்த லக்ஷ்மி அக்கா, என் முதல் காதலாய், என்னுள் இன்னும் சிம்மாசனம் போட்டு அமர்ந்து இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களுக்கு என்னைவிட வயது பதின்மூன்று கூடுதலாய் இருந்தாலும், அன்றைய இளம் வயதில், கன்னி ஒருத்தியின் சிநேகம், என்னில் கவிதையாய் இன்னும் வருடி கொடுப்பதிலுள்ள சுகம், எத்தனை வருடங்கள் ஆனாலும் இன்னும் நீங்கா நினைவுகளாயிருக்கும்.

நீங்குமோ காரை மாநகரின் நினைவுகள்???

விலகுமோ முதல் காதல் அனுபவங்கள்!

3 comments:

 1. அனைவருக்கும் இதுபோன்ற ஒரு பொருந்தா முதல் காதல் இருக்கும் போல,
  நல்ல எழுதிறிங்க தலைவா! தொடர்ந்து எழுதுங்க!

  ReplyDelete
 2. அருமையான இடுகை.

  லக்ஷ்மி அக்கா இதைப் படித்திருந்தால் "அடப் பாவி, சின்னப் பயல்னு மடியில போட்டு தூங்க வைச்சா, அதை முதல் காதல்னு சொல்லிட்டானே"-ன்னு எங்கேயோ இருந்து கொண்டு ஒரு நிமிடம் உன்னைக் கரித்துக் கொட்டியிருக்கலாம். ;-)

  காரைக்குடி நாட்டார் வழக்கு வார்த்தைகளைக் கொண்டு ஒரு இடுகை எழுத முடியுமா?

  ReplyDelete
 3. நன்றி சூர்யகண்ணன்.

  காதலில் பொருந்தும் காதல் அல்லது பொருந்தா காதல்
  என்றெல்லாம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. காதல் என்பது சம்பந்தப்பட்டவர்களின் தார்மீக கோட்பாடு என்றே நான் கருதுகிறேன்!

  ReplyDelete

ஆஞா...!

கணபதியாப்பிள்ளை என் அம்மா வழி தாத்தாவின் பெயர்! நாங்கள் செல்லமாக "ஆஞா" என்றே அழைப்போம்! 80 களிலிருந்து அவரது இறுதி மூச்சு...