வயசாயிடுச்சில்ல...!
ஆண்டு 1991..!
மேல்நிலைப்பள்ளி இறுதித் தேர்வுகள்
முடிவுற்று கோடை விடுமுறையும் கழிந்து
புனித வளனார் கல்லூரியில்
இளங்கலை முதலாமாண்டு..
பதினேழு, பதினெட்டு வயது மட்டுமே
நிரம்பிய என்னைப் போன்ற
ஏராளமான இளைஞர் பலர் தங்கள்
அரும்பு மீசை எட்டிப் பார்க்க
முதல்நாள் அடியெடுத்து வைத்த நாள்
இன்னும் பசுமையாய் நினைவுகளில்...!
ஜனாதிபதி அப்துல் கலாம் அய்யா
அமர்ந்து படித்த இயற்பியல் வகுப்பில்
மர இருக்கைகளின் அரங்க அமைப்பு வகுப்பை மேலும் பிரமாண்டமாக காட்ட,
மாணாக்கர்கள் ஆங்காங்கே
ஒருவரையொருவர் தங்களுக்குள்
அறிமுகம் செய்து கொண்டிருக்க...
திடீரென எனை நோக்கி
நெடு நெடு உயரத்தில் ஓர் இளைஞன்
திராவிட நிறத்தில்
கண்களில் வசீகரம் மின்ன,
உதட்டின் மெல்லிதாய் ஒரு சிறு
புன்னகையைய்த் தவழவிட்டுக் கொண்டு அருகில் வரவும்,
ஏதோ ஓர் சொல்லனா பரிச்சயம்
இருவரிடத்தும் உணரப்பட்ட நிலையில்,
"ஃபிராங்க்ளின், பிரிட்டோ காலனி,
மணிகண்டன், மலைகோட்டை" என
கை குலுக்கிக் கொண்டு
நலம் பரிமாற்றிக் கொண்டோம்..!
இருவரும் பள்ளிப் பிராயத்தில்
பாராது "பார்த்துக்" கொண்டிருந்ததை
அளவலாவிக் கொண்டோம்..!
10ஆம் வகுப்பில்
மதிய இடைவேளைகளில்...
ரப்பர் செருப்பை வைத்துக்கொண்டு
காய்ந்து போன சோளக்கருதில்
நண்பர்களுடன் சேர்ந்து
பளிச்சென்று வெள்ளை நிறத்தில்
அம்பி ஒருவன்
மேனி நிறம் மங்குவதைப் பற்றியெல்லாம் கவலைப்படாது
கிரிக்கெட் விளையாடும் லாவகத்தை
பல முறை பார்த்து ரசித்ததை
அவர் நினைவு கூர,
அவர் குறிப்பிட்ட நபர்
'நான்' எனத் தெரிந்துகொண்டதும்,
அவமானமும் பெருமையும் சேர்ந்து
ஒருவித செயற்கைப் புழுக்கம் தர
நான் நெளியத் துவங்கிட...
அந்த இளைஞன்
என்னை மீண்டும் சகஜ நிலைக்கு
வெளிக் கொணர முயற்சி செய்தது
இதோ நேற்று நடந்தது போல இருக்கிறது...!
முதல் பெஞ்சில் நான், அவர் மற்றும் ஈரோடு ராமகிருஷ்ணன்
என்று நாங்கள் மூவரும்
679, 631, 683 என்ற
கல்லூரி அடையாள எண்களால்
அடையாளம் அறியப்பெற்றோம்..!
பேராசிரியர் பெருமக்கள் பலரின்
அன்புக்கும் சில சமயங்களில்
ஆத்திரத்திற்கும் பாத்திரமானோம்...!
ஒன்றாகக் கூடி,
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி,
புரிகின்ற தெர்மோடைனமிக்ஸ் முதல் புதிரான குவாண்டம் மெக்கானிக்ஸ் வரை, அவ்வப்போது படித்து,
பெரும்பாலும் அரட்டையடித்து,
ஆய்வுக்கூட பரி"சோதனை"களை
விருப்பமாய் அனுபவித்து,
ஆசிரியர்களை கேலிசெய்து,
சமயத்தில் கேலிக்குள்ளாக்கப்பட்டு,
நித்தம் சோறு உண்டு,
பிஜி படிக்கும் அக்காமார்களை வழிசலாய்ப் பார்த்து ஜொள்ளுவிட்டு,
வருங்காலம் பற்றியெல்லாம்
பெரிதாக கவலை கொள்ளாது
மூன்று வருட காலம்
வலம் வந்து கொண்டிருந்த வாழ்வை
நினைவு கூர்கையில்
கண்கள் ஏனோ பனிக்கின்றன...!
பின் ஆளுக்கொரு திசையில்
காலம் செலுத்திய வழியில்
மேற்படிப்பு, வேலை,
கல்யாணம், குழந்தைகள் என
இந்தச் சமூகத்தின் வரையறுக்கப்பட்ட
சங்கடங்களை சந்தோசங்களாய்
அனுபவிக்க பழக்கிக்கொண்டு,
வாழத் தொடங்கி இதோ
30 ஆண்டுகள் ஓடிவிட்டன....
வயது ஐம்பதைத் தொட்டுவிட்டது..!
திரும்பிப் பார்க்கையில்
பிரமிப்பாக இருக்கிறது...!
"வயசாயிடுச்சில்ல..." தளபதி வசனம்
ஓரமாய் எங்கோ ஒலிக்கிறது...!
Comments
Post a Comment