என் இனிய கிரெட்டா...!

 

உன்னோட நானிருந்த

ஒவ்வொரு மணித்துளியும் 

மரணப் படுக்கையிலும் 

மறவாது கிரெட்டாவே...!


பத்து வருடங்களுக்கு முன்

உன் கொரிய அண்ணன் "வெர்ணா" 

நான்கு வருட பந்த பாசத்திலிருந்து

எங்களை விட்டு பிரிந்து சென்ற

சோகத்தினை சில நாட்களிலேயே

அழகிய உன் "செவ்வண்ணச்" சிரிப்பால்

மறந்திடச் செய்தாய்...!


*என்னால்" இயக்குவதிலிருந்து

"தன்னால்" இயங்குபவனாய் ஆன 

எந்திரனைப் பெற்ற உன்னை

இயக்குவது எவ்வளவு சுலபம் என

வந்த சில நாட்களில்

சொல்லாமல் சொல்லி எங்களை

சொக்க வைத்தாய்...!


தென்குமரி, வட திருப்பதி தொடங்கி

நெல்லூர், அதிரம்பள்ளி, பெங்களுர் ஆகிய

அண்டை மாநிலங்கள் வரை

அம்பை, பம்பை என பம்பரமாய்ச் சுழன்று

நீ எங்களை கூ(ஓ)ட்டிச் செல்லாத

இடம் தான் உண்டோ...?

ஒரு லட்சத்து நாற்பதாயிரம் கிலோமீட்டர்கள்

என்கிறது உன் ஓடோமீட்டர்...!

வருடங்கள் பத்து ஆயிற்று நீ வந்து

என காலம் உணர்த்துகிறது...!

ஆனாலும் மனம் அதை ஏனோ

ஒத்துக் கொள்ள மறுக்கிறது...!


எரிபொருளில் 20 சதவிகிதம் எத்தனாலை

அரசாங்கம் படிப்படியாக 

கலந்திடத் துணிந்ததால்

உன் இதயத்திற்கு அபாயம்

என உணரத் துவங்குவதற்கு சாட்சியாக

உன் செயல்பாட்டில் சற்றே

வேறுபாடு அறியப் பெற்றவனாய்

அதிர்ந்து போனேன்...!

பிறகு என்னையே நான் தேற்றிக் கொண்டு

கண்ணானக் கண்ணே உன்னை 

பிரிவதைத் தவிர வேறு வழியின்றி,

உயிரோடு கலந்திட்ட உன்னை

உடலளவில் மட்டுமே பிரிகிறோம்

என சமாதானப்படுத்திக் கொண்டு,

இன்றைய தினம் 

பிரியாவிடை கொடுத்து

வழியனுப்பினோம்...!


சென்று வா....!

செல்லும் இடத்தில் 

என் பேர் சொல்லும் பிள்ளையாக

நடந்துகொள்....!

சங்கடம் கொடுக்காதே...

சந்தோசம் பொங்கச் செய்...!


வாகன மறுவிற்பனைச் சந்தையில் 

உனக்கு "மவுசு" என்றும் குறையாது என்பதை உனக்குத் தரப்பட்டுள்ள

மதிப்பீட்டுத் தொகை மூலம்

புரிந்து கொள்ள முடிகிறது...! 


உன்னை கொடுத்துப் பெற்ற முதலீடும்

வங்கியின் தயவும் கைகூட,

ஜெர்மானிய எந்திரத்தையும்

செக் குடியரசின் வடிவையும்

ஒருங்கேப் பெற்று 

ஐரோப்பிய தொழில்நுட்பத்தோடு

வந்திருக்கும் தம்பி "ஸ்கோடா கைலாக்" எனும் சிறுவனை வரும் திங்கள் அன்று 

நம் இல்லத்திற்கு அழைத்து வர காத்திருக்கின்றோம்...!

அவனுக்கு ஒரு வாழ்த்து சொல்!


உங்கள் மூவருக்கும் மூத்தவரும்

தோற்றத்தில் சிறியவருமான 

"நானோ" அய்யா

பதினான்கு வருடங்களுக்கு 

முன்பு நம்மிடையே சிலகாலம் இயங்கினார்.

அவரை நினைவு கூர்ந்து

நம் புதிய பயணங்களைத் தொடருவோம்!


பா. மணிகண்டன்

Comments

Popular posts from this blog

தங்கத் தாரகை

அடுத்த நொடிப் பொழுதின் ஆச்சர்யங்கள்

திருப்பள்ளியெழுச்சி