நினைவிருக்கா...??
அன்று நல்ல மழை பெய்து விட்டிருந்தது...!ஜன்னல் கம்பிகளில் இன்னும் நீர்த் திவிலைகள் சொட்டிக் கொண்டிருந்தன...!புறாக்கள் தண்ணீர் தடாகங்களில் குளியலிட்டுக் கொண்டிருந்தன...!
மாலை தேநீரைப் பருகியபடியே வழியில் செல்வோரை எல்லாம் நான் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க...
தெரு முனையில் தேங்கியிருந்த நீரில் வெளிர் நீலக் கலரில் உன் சேலையின் நிழல் தெரிய உன்னைப் பார்க்கும் அவசரத்தில் விரலைச் சுட்டுக்கொண்டேன்..!
நல்ல உயரம் நீ...
ஒல்லியுமில்லை, பூசினமாதிரியும் இல்லாததாய் ஒரு தேகம்...
உன் வயதை பருவம் சொல்லாமல் சொல்ல, கழுத்தில் நீளமாய்
ஒரு தங்கச் சங்கிலி, மேட்டுப் பிரதேசத்தின்
மத்தியில் கர்வமாய் ஆடிக் கொண்டிருக்க, கண்களைத்
தாண்டி மையின் கருமையும்,
இதழ்கள் முழுதும் மெலிர் வண்ணப் பூச்சு உறுத்தாமலும் படிந்திருக்க, நெற்றியில்
கோவிப் பொட்டிருந்தது...!
தூவானமே ஆனாலும்
அந்த மங்கியப் பொழுதில்
நீ மட்டும் என் ரசனைகேற்றவளாய்
அழகாய்த் தெரிந்தாய்...!
மழை நீரைச் சேலை நனைக்காதிருக்க
சற்றே கெண்டைக் கால்களின் மேலே ஒரு கையில் தூக்கியபடி
நீ கடக்க முயல
எதிர்பாராமல் வந்த மகிழுந்து
உன் மேல் மழை நீரை
வாரியடித்து விருட்டென சென்று விட, சேலை முழுமையும் சகதியாகிட,
கோபமும், வெட்கமும், அழுகையும் என ஒரு கலவையாய்
உன் முகம் வாடவும்,
நாம் ஒருவரையொருவர்
தற்செயலாய் கண்டு கொண்டுவிட,
மேலே வரலாமா என உன் கண்கள் வினவ, வரமாட்டாயா என என் நெஞ்சம் விம்ம, அம்மா பின்னிருந்து வந்ததும், அவளைப் பார்க்கவும் சரியாகியிருந்திட,
"அச்சச்சோ... என்னம்மா
மேலெல்லாம் அசிங்கம் ஆகிடுத்தா... பரவாயில்லை நீ இங்கே வா, உடைமாற்றி செல்"
என அழைக்க, நீயோ சற்றும் எதிர்பாராமல் என்னை நோக்கி, இல்லையில்லை, என் இல்லம் நோக்கி வரத் தொடங்க,
நானோ, என் கண்களையே நம்பாது,
படியேறி வந்து கொண்டிருந்த உன்னை இமைக்காது
பிரமை பிடித்தது போல் பார்த்து
நின்று கொண்டிருக்க,
அம்மாவோ, " தள்ளுடா, அந்தப் பொண்ணு மேலே வரட்டும்"
என்று சிடுசிடுக்க,
மேலே வந்தவள்,
தோள்பையை ஹாலில்
சோஃபாவின் ஒரு முனையில் கிடத்தி விட்டு,
ஏற்கனவே பழகிய வீடு போல,
உள்ளே, அம்மா காண்பித்த
குளியலறையில்
சென்று மறைய,
நானோ முழுதுமாய் என்னை மறந்து போயிருந்தேன்...!
வெளியே அம்மாவின் சேலை ஒன்றை உடுத்திக் கொண்டு வந்த உனக்கு,
அம்மா தேநீர் கொண்டுவர,
" சாரி ஆண்ட்டி, நான் குடிக்கிறதில்லை, உங்கள் அன்புக்கு ரொம்ப நன்றி...
அப்பா தேடுவார்"
எனக் கூறிக் கொண்டே,
அவசரமாய் நீ என்னைக் கடந்து
செல்கையில்....
உன்னையே கண் பார்த்துக்
கொண்டிருந்த என்னைப் பார்த்து
"தேங்ஃக்ஸ்" என கவிதையாய்
சொல்லி விட்டு சென்றதும்...
அன்றைய தினம்
நீ குளித்து முடித்துச் சென்றதும்
அக்குளியலறை சென்று
உன் வாசம் தேடிய எனக்கு,
எதிரே கண்ணாடியில்
உன் நெற்றியை அலங்கரித்த கோவிப்பொட்டு...!
என் நெற்றிக்கு நடுவில்...
உன் முகம் காண்பிக்க,
அதைத் தொடர்ந்து
உன் பின்னே பித்து பிடித்தவனாய் சுற்றிய என்னை,
உன் வீட்டாரின் சொல் மதித்து,
நம் காதலையன்றோ
மறக்கச் சொல்லி
கடல் கடந்து
எங்கோ யாருக்கோ
உன்னை தாரை வார்த்துக்
கொடுத்து விட்டு சென்ற உனக்கு என்னையும்...
ஆண்டுகள் பலவும்
கடந்து போயிருந்தாலும்
அந்த மழை நாளும்...
கோவிப் பொட்டும்...
இன்னும் நினைவிருக்கா..???
பா. மணிகண்டன்
Comments
Post a Comment