நேபாள சேதம், பூபாள சோகம்..!

 

ஆகஸ்ட் மாதம் 26 தேதி 

அன்று காலை 

எல்லோருக்கும் போலவே 

உள்ளூர்வாசிகள் 

சுற்றுலாப் பயணிகள் 

அந்நிய நாட்டினர் 

அரசு ஊழியர் என்று 

நேபாள் - சீனா எல்லைப் பகுதியில் 

குழுமியிருந்த

அவர்களுக்கும் விடிந்திருக்கும்...!


கிராங் சோதனை மையத்தின் 

இருபுறமும், முன்னும் பின்னும்,

அழகிய பனிமலைகள் 

ஆர்ப்பரித்து ஓடும் ஆறு என்று 

வழக்கம் போல இயங்கிக் கொண்டிருக்க

ஆங்கே தொலைவில் 

பின்னே ஓங்கி உயிர்ந்த 

பனிமலையின் ஒரு பகுதி 

காலநிலை மாற்றத்தால் 

கடல் மட்டத்திலிருந்து 

ஐயாயிரம் மீட்டருக்கும் மேலிருந்து 

தானாக பெயர்ந்து 

கீழே 2000 மீட்டர் பள்ளத்தில் 

திரிசூலி நதிமுலத்தில் 

செங்குத்தாய் விழ

பொங்கிப் பிரளயமாய் 

வெளிப்பட்டதோர் ஆழிப் பேரலை

கண்ணிமைக்கும் நேரத்தில் 

விஸ்வரூபம் எடுத்து 

நதியின் கரை நெடுகிலும் 

பன்னெடுங்காலமாய் இருந்துவந்த 

குடியிருப்புப் பகுதி முழுமைதனையும் 

கபளீகரம் செய்து 

தன் பெரும்பசியை ஆற்றிக் கொண்டது!


எத்தனையோ கனவுகளுடனும் 

எதிர்காலத் திட்டங்களுடனும் 

ஆன்மீகப் பிராயாசைகளுடனும் 

அளவிலா ஆனந்தத்துடனும் 

உயிருடன் நம்மைப் போல் 

எல்லாவிதமான அபிலாஷைகளுடன் 

வலம் வந்த எண்ணற்ற மானிட உயிர்கள் 

மண்ணோடு மண்ணாய் 

புதைந்து போக, அவர்களைத் 

தேடும் பணியில் மீட்புப் பணியினர் 

தோண்டத் தோண்ட 

புதைந்தவர் பிணங்களாய்...

சதைப் பிண்டங்களாய்....

பிய்ந்து போன அங்கங்களாய்....

குப்பை குவியல்களாய்...

வெளிவர வெளிவர....

அடிவயிறு அழுத்திப் பிடித்து 

சொல்லனாத் துயரம் ஒன்று 

தொண்டையில் அடைக்கின்றது..!

காலனின் கோர தாண்டவம் 

என்பது இதுதானா?


மாண்டவர்கள் என்ன தவறு செய்தார்கள்?

அவர்கள் மனிதர்களாய் 

பிறந்ததைத் தவிர....!!!

கடவுளை இறுகப் பற்றிக் 

கொண்டவர்களுக்கு அவர்தரும் 

கைமாறு இது தானா?

கைலாயம் சென்றவர்கள் 

கைலாசம் செல்வது என்பது இதுதானா???

வல்லரசாகிடும் பேராசையால் 

தேசங்கள் இயற்கைக்கு 

இழைத்திடும் நாசச் செயல்களால் 

புவி வெப்பமயமாகி 

காலநிலை மாறுபட்டு 

பனிமலைகள் உருகியதாய்ச் சொல்வது 

உண்மைதானா??



எதுவாகினும் போன உயிர்கள் 

போனவையே...!

அவை திரும்பி வரப்போவதில்லை!

நான்காயிரத்துக்கும் மேலானோரை 

தேடும் பணி இன்னும் தொடர்வதானால் 

அவர்தம் உறவினர் 

அடையாள தகனம் செய்யத் 

துவங்கியதாய் வரும் செய்திகள் 

நெஞ்சை ஏதோ செய்கிறது..!

அதே தருணத்தில் 

ஒரு உண்மையும் புரிகிறது!

இந்தப் பிரபஞ்சம் நமக்கு மட்டும் 

சொந்தமில்லை என்று புரிகிறது!

இயற்கைக்கு முரணாக 

நீண்ட நெடுங்காலமாய் 

நம்மை யார் கேட்க 

எனும் திமிரோடு நாம் செய்து வரும் 

எல்லா வகையான ஆக்கிரமிப்புகளுக்கும் 

அந்த இயற்கை திருப்பிக் கொடுக்கத் 

தயாராகி விட்டது என்பது 

பட்டவர்த்தனமாய் நிரூபணமாகிறது...!


இனியாகிலும் உளமார மனதார 

இயற்கைக்கு துரோகம் செய்யாது 

அதனை வழிபட்டு ஆராதனை செய்வோம்!

மாண்டோர் ஆன்மாக்கள் 

சாந்தி பெற பிரார்த்திப்போம்..!


பா. மணிகண்டன் 






Comments

Popular posts from this blog

தங்கத் தாரகை

என்ன தவம் செய்தேன் நான்!

கடவுள் இருக்கிறார்!