உயிர்ப்பறவை
இன்று பிப்ரவரி 14... நேரம் மாலை 5:40... சென்னை 2028..!
மேகா வந்து அரை மணி நேரமாகி விட்டது. அடையாறு கடலோடு கலக்கும் முகத்துவாரத்தில், பாதி அழிந்த நிலையில் நின்று கொண்டிருக்கும் பாலத்திற்கு அவள் வந்து அரை மணிக்கும் மேலாகத் தான் ஆகி விட்டிருந்தது. பாலத்தின் அடியில் குழந்தைகள் விளையாடிக் கொண்டு இருக்கிறார்கள்.
"அக்கா, நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க" என்றது அந்த நீலப்பாவாடைச் சட்டை அணிந்திருந்த சிறுமி. மேகா, இலேசாக புன்முறுவல் செய்தாள். முழுமையாய் அவளால் சிரிக்க முடியவில்லை. காரணம், ஆகாஷ். மதியம் பாண்டிச்சேரியிலிருந்து கிளம்பும் போது, இன்று மாலை 5 மணிக்கு அவர்களுடைய பேவரிட் ஸ்பாட் - பட்டினப்பாக்கம் பழைய பாலத்தில் சந்திப்பது என்று ஆகாஷ் சொல்லியிருந்தான். அதனால் தான் நிற்கிறாள். அவன் வருகைக்காக காத்திருக்கிறாள்.
காற்று பலமாக வீசுகிறது நெற்றியில் கற்றையாய் முடி மீண்டும் மீண்டும் விழ, அதை சரி செய்து சரி செய்து தோற்றுப் போனாள். வெளிர் நீல குர்தாவும், ஜீன்ஸ்ஸும் அணிந்திருந்தாள். கண்களில், "ரே பான்" அவளை மேலும் நவீனமாய்க் காட்டியது. ஒரு கை பாலத்தின் மதில் சுவரையும், மற்றொன்று தான் ஓட்டி வந்த காரின் சாவியையும், சுழற்றிக் கொண்டிருந்தது. சற்று தொலைவில், சில முகம் தெரியா ஆண்களின் கண்கள் அவளையே பார்த்துக் கொண்டிருந்தன. அவளுக்கு அது அருவருப்பாக ஒரு மாதிரி சங்கடமாக இருந்தது. பழகிப் போய்விட்டது, பொறுத்துக் கொண்டாள்.
அவர்கள் இருவரும் காதலிக்க ஆரம்பித்து 3 வருடங்கள் ஆகின்றன. முதலில் ஆகாஷ் தான் புரபோஸ் செய்தான். இருவரும் ஒன்றாக அடையாறில் ஒரு ரெப்புயூடெட் ஆர்கிடெக்ட் ஆபிஸில் வேலை செய்கிறார்கள். ஆகாஷ் சீனியர் ஆர்கிடெக்ட், அவள் டிசைனர். அவளுடன் சேர்த்து அங்கே 4 பெண்கள் பணிபுரிகிறார்கள். அனைவருக்கும் அவன் மேல் ஒரு கண், திருமணமானவர்கள் உட்பட. அவனது அழகு, அவனிடத்து தோன்றும் டிசைன் ஐடியாக்களில் வெளிப்படும். தான் ஒரு "கிரியேட்டர்" என்ற திமிர் அவனிடம் கிடையாது. சப்ஜெக்ட்டில் யாருக்கு எந்த சந்தேகம் இருந்தாலும், கேட்டாலும் உடனே தீர்த்து வைப்பான். கண்களை மட்டும் தான் பார்த்து பேசுவான். தேவையற்ற அரட்டைகள் தவிர்ப்பான். மதிய வேளைகளில், உணவு சாப்பிடும் பொழுது, ஓரிரெண்டு வார்த்தைகள் கூடுதலாக பேசுவான். லினன் சட்டைகள் விரும்பி அணிவான். மேகா அந்த அலுவலகத்தில் இண்டர்வியூவுக்கு வந்த போது, அவனிடம் தான் அனுப்பப்பட்டாள். அன்று அவள் ஒரு கருப்பு சுடிதார் அணிந்திருந்தாள். செங்கல் சிவப்பில் ஷால் ஒன்றை ஒரு பக்கமாய் விட்டிருந்தாள். மேக்கப் பெரிதாக இல்லை என்றாலும், புருவங்களுக்கும், உதட்டுக்கும் மட்டும் சற்று தூக்கலாகத் தெரிந்தது. ஆனாலும், அவை உறுத்தலாகத் தெரியவில்லை. தலை முடியை ஒரு பக்கமாக தவழ விட்டிருந்தாள். "மே ஐ கமின் சார்" என்று அவனது அறையில் நுழைய, அவள் அணிந்திருந்த GUCCI புளோரா பெர்ப்யூம் மணம் அந்த அறை முழுதும் வியாபித்தது. அந்த புதிய நறுமணத் தாக்குதலில் இருந்து மீள்வதற்குள், அவளது "எந்த வரைமுறைக்கும் கட்டுப்படாத புதிதான" அழகு அவனை தன் முதல் பார்வையிலேயே, அந்த முதல் சந்திப்பிப்பிலேயே அவளிடத்து வீழச் செய்தது. சுதாரித்துக் கொண்டான். அவனுக்கு எல்லாம் புதிதாக இருந்தது. அந்த அனுபவம் அவனுக்கு பிடித்து இருந்தது. சம்பிரதாய கேள்விகளுக்கு அவள் அளித்த பதில்களில் அவளது அறிவு கூர்மையும் வெளிப்பட, தன தேர்வு சரி என கருதி, எம்டிக்கு பரிந்துரை செய்து அனுப்பினான். மேகா, நன்றி சொல்லி விட்டு, அவனது கேபின் கதவை நோக்கித் திரும்பியவள், அவனை மீண்டும் ஒருமுறை தீர்க்கமாய் பார்த்தாள். அவளுக்கும், அவனது வசீகரம் பாதித்ததாகத் தான் தெரிந்தது.
மேகா வேலைக்கு சேர்ந்தாள். ஒர்க் சைட்டுகளுக்கு, பெரும்பாலும் அவளை, தன் போக்ஸ்வேகன் விட்ரஸ் காரில் தான் அழைத்து செல்வான். அன்றொரு நாள், தன் கார் சர்வீஸ் சென்று விட, "மேகா, டேக் யுவர் கார்" என்றான். ஒரு கணம், அவளுக்கு ஆச்சர்யமாக இருந்தாலும், மறு கணம், தான் மற்றவர்களால் கவனிக்கப்படுவதை புறக்கணித்து, " யா, ஸ்யூர் சார்" என்றாள். கீழ்த் தளத்திலிருந்து அவளது வெள்ளை நிற ஐ 20 காரை அனாயசமாக அவள் ஓட்டி வந்த நேர்த்தி அவனுக்கு பிடித்திருந்தது. "யூ ட்ரைவ் லைக் எ ப்ரோ" என்றான். "ஹூ செட், ஐ ஆம் நாட்" என்று துள்ளலலாகச் சொன்னாள். ஏறிக் கொண்டான். "ஹவு லாங் சின்ஸ் யூ ஜாயிண்ட் ஹியர்" என்றான். "சிக்ஸ் மந்த்ஸ் சார்". ஹே, ஸ்டாப் காலிங் மீ சார், ஜஸ்ட் ஆகாஷ் வில் டூ என்றான். அவள் ஓகே சார், சாரி.... ஆகாஷ் என்றதும், தட்ஸ் பெட்டர் என்றான். அவர்களுக்குள், அந்த பரஸ்பர சம்பாஷணைகள் மேற்கொண்டு தொடர்ந்து கொண்டு வர, " மேகா, டேக் தி கமிங் ரைட்" என்றான் ஆகாஷ். நம்ம சைட்டுக்கு, நேரா பார்க் டவுன் தானே போகணும் அவள் சொல்லிக் கொண்டே, அவன் சொன்ன ரைட்டில் சிறு கலவரத்துடன் திரும்பினாள். அது பட்டினப்பாக்கம் கடற்கரையை நோக்கி போகும் சாலை . "டோன்ட் பேனிக், ஐ ஹாவ் டு ஷோ யூ சம் ஸ்பாட், இந்த ரைட் எடு" என்றான். அந்த பாதை மீனவர் குடியிருப்பு வழியாக சிறிது தூரம் சென்று, அடையார் ஆறு, கடலை சங்கமிக்கும் பகுதிக்கு சென்றது. அங்கே, ஒரு பழைய பாலம். காரை நிறுத்தியதும், ஆகாஷ் அந்த பாலத்தை நோக்கி நடக்கத் துவங்கினான். பின்னால், மேகா ஒன்றும் புரியாதவளாக அவனைப் பின் தொடர்ந்தாள். பாலத்தின் நடுப் பகுதியை அடைந்தததும், கடல் நீரைப் பார்த்துக் கொண்டிருந்தவன், அவள் அருகில் வந்ததும், அவள் பக்கம் திரும்பிப் பார்த்தான். பாலத்தின் கைப்பிடி சுவரில் நிறைய இடங்களில் காதலர்களின் நினைவுக்கு குறியீடுகள் வரையப்பட்டிருந்தன. அந்த, வித்தியாசமான இடமும், சுழலும் அவளுக்குள் இனம் புரியா பரவசத்தை ஏற்படுத்த, ஆச்சர்யதுடன், " ஏ, செம ஸ்பாட் ஆகாஷ் என சொல்லி முடிக்கையில், அவளது வலது கையை சிறிது அழுத்தம் கொடுத்து தன் பக்கம் இழுத்து, அவளை தனது மார்பின் மேல் அவள் முகம் பதிக்க அணைத்து, " மேகா, ஐ டோன்ட் வாண்ட் டு பீட் அரௌண்ட் தி புஷ், ஐ திங்க் ஐ ஆம் இன் லவ் வித் யூ," என்றான். மேகா, அவனது இந்த திடீர் செயலை சற்றும் எதிர்பாராதவளாய், அவசர அவசரமாக அவளை விடுவித்துக் கொண்டு, " ஆகாஷ், ஐ நெவெர் எக்ஸ்பெக்டெட் திஸ் பிரம் யூ " என்று காரை நோக்கி நடக்கத் துவங்க, ஆகாஷ் கேட்டான், " யோசிச்சு சொல்லு மேகா". காரை எடுத்துக் கொண்டு, விருட்டென்று கிளம்பி வீட்ட்டுக்குச் சென்று, ரூமில் தன்னை அடைத்துக் கொண்டாள். அன்று முழுதும் வெளியே வரவில்லை. அம்மா கேட்ட போது, ஒண்ணுமில்லை வழக்கமான பீரியட்ஸ் வலி என்று சமாளித்தாள். செல்லை ஆப் செய்து விட்டுருந்தாள்.
காலையில் வழக்கம் போல ஆபீஸ் சென்றாள். ஆகாஷ் கேபினில் தென்படவில்லை. மதியம் வரை அவனைக் காணவில்லை. யாரிடமாவது கேட்டு விட வேண்டுமென மனசு கேட்டது. ஆகாஷ் சார் வரல்லயா? இல்ல, அவர் போன் சுவிட்ச் ஆப்ல இருக்கு, நோ ஐடியா, ரோஷினி சொன்னாள். அவளுக்கு, ஏதோ மாதிரி இருந்தது. வாட் ஹெப்பெண்ட் டு ஹிம்? மதிய உணவை அவளால் சரியாக சாப்பிட முடியவில்லை. மாலை சீக்கிரமாக பெர்மிஷன் போட்டு விட்டு கிளம்பினாள். செல்லும் வழியில், நேற்று இருவரும் சென்றதும், அவன் பேசியதும், அவன் சிரித்ததும், அவளை இழுத்து, மார்பில் வைத்து புரபோஸ் செய்ததும், ஒரு நிமிடம் மனதில் வந்து போயின. அவளுக்கு மீண்டும் நேற்று அவர்கள் சென்ற இடம் சென்று பார்த்து விடத் தோன்றியது. காரை யூ டர்ன் செய்து, பட்டினப்பாக்கம் நோக்கி விரைந்தாள்.
தூரத்தில், அந்த பாலத்தின் நடுவில் ஆகாஷ் நின்று கொண்டிருந்தான். "ஓ மை காட், இஸ் ஹி கிரேஸி ஆர் வாட்?" நேராக அவனிடத்தில் சென்றாள். சோர்வாகத் தெரிந்ததான். அதே டிரெஸ்ஸில் இருந்தான். "ஆகாஷ், என்ன ஆச்சு உங்களுக்கு? ஏன் இப்படி பண்றீங்க ?
"யோசிச்சிட்டியா" என்றான்.
வாட், நான் கேட்டதுக்கு மொதல்ல சொல்லுங்க... என்றாள்.
ஐ ம் மேட்லி இன் லவ் வித் யூ மேகா ...
ஆகாஷ், நீங்க என்ன பேசுறீங்கன்னு தெரிஞ்சுதான் பேசுறீங்ககளா? ஏன் இப்படியெல்லாம்.... நேற்று முழுக்க இங்கேயேவா இருந்தீங்க?....அவளுக்கு அழுகை வந்தது, அழத் தொடங்கினாள்.
அவளை மீண்டும் இழுத்து மார்போடு சேர்த்து அணைத்தான். அவள் கண்ணீர் அவனது லினென் சட்டையை நனைத்தது. அவனைப் மேலே பார்த்து, கால்களை உயர்த்தி, கைகள் இரண்டையும், முதுகிலும், அவனது பின் தலையிலும் அழுத்தி பிடித்த மாதிரி, இதழோடு இதழ் பதித்தாள்.
அவர்களுக்குள் அந்த முதல் முத்தம் அரங்கேறி, இன்றோடு 3 வருடங்கள் ஓடிப் போயின. அந்த அலுவலகம் முழுமைக்கும், அவர்கள் இருவர் பற்றியும் அவர்கள் லிவின் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறார்கள் என்றும் தெரியும். திருமணத்தில் இருவருக்கும் பெரிதாக உடன்பாடு இருக்கவில்லை. எம்டி கூட, ஒருமுறை, இருவரையும் அழைத்து, "கைஸ், ஒய் டோண்டு யூ போத் கெட் மாரீட்? என்றார். இருவரும் மழுப்பலாய் பதில் சொல்லி தப்பித்தார்கள். யூ கைஸ் ஆர் வெரி கிளீயர் அன்லைக் அஸ், என்றார்... சிரித்துக் கொண்டே.
இப்போதெல்லாம், லிவின் ரிலேஷன்ஷிப் மலிந்து விட்டிருந்தது. இந்த சமூகத்திற்கு அதனைப் பற்றியெல்லாம் பெரிதாக கவலையோ, அக்கறையோ இருப்பதாக தெரியவில்லை. பெற்றோர்கள், பிள்ளைகளின் விருப்பங்களை மதித்தனர். அவர்களை, சுதந்திரமாக இருக்க அனுமதித்தனர். டேட்டிங் செல்வது, தங்கள் பார்ட்னர்களைத் தங்களே தேர்ந்தெடுப்பது, அவரவர் உரிமையாக பார்க்கப்பட்டது. ஆடம்பரத் திருமணங்கள் வெகுவாய் குறைந்து போய் விட்டிருந்தது. ஜாதி, மதம், ஆணவக் கொலைகள் எல்லாம் வரலாற்றுப் பாடங்களில் மட்டும் இன்னும் ஒட்டிக் கொண்டிருந்தது.
மேகா - ஆகாஷ் இருவரையும் பொறுத்த வரை மோகம், காமம் என்பது எல்லாம் காதலுடன் கூடிய பிஸிகல் ரிலேஷன்ஷிப் எனும் ஒற்றைப் புள்ளியில் சங்கமித்து விடுவதால், திருமணமோ, குழந்தை பெற்றுக் கொள்வதோ, தேவையில்லை எனும் புரிதல் இருந்ததனால், அவர்களுக்கு என்று "இரத்தமும் சதையுமாக" அவர்கள் முகம் பதித்த, அவர்கள் பெயர் சொல்ல, ஒரு குழந்தை பிறந்து விடுவதை தடுக்கும் செயற்கைச் சாதனங்களின் தேவை இல்லாமலே, அவர்களால், காதல் "செய்து" கொண்டிருக்க முடிந்தது.
நேற்று இரவு, முதல் தடவையாக, கலவியினூடே ஆகாஷ் கேட்டான். பேபி, ஷால் வீ ஹாவ் எ பேபி ? அயர்ச்சியில், கண்களைத் திறக்காமலே, பதில் சொன்னாள். "ஏண்டா, இப்ப திடீர்னு....? இறங்கு கீழ... போர்வையை சரி செய்து கொண்டு, திரும்பி படுத்தாள். பேபி, நாளைக்கு ஈவ்னிங் நம்ம பேவரைட் ஸ்பாட்ல 5 மணிக்கு மீட் செய்யலாமா? என்னாச்சுடா உனக்கு? பேசாம தூங்குடா. அசதியில் தூங்கிப் போனவள், முகத்தில் வெளிச்சம் பட்டதும், மெதுவாக கண்ணைத் திறந்தாள். மணியைப் பார்த்தாள். 7:45 AM பிப் 14 எனக் காட்டியது. ஓ, ஷிட் ..." ஆகாஷ் எங்கடா போன? ஆகாஷ் அவளுக்கு புரபோஸ் செய்து இன்றோடு 3 வருடங்கள் முடிகிறது. போனைப் பார்த்தாள். ஆகாஷ் மெசேஜ் செய்திருந்தான். "கோயிங் டூ பாண்டி, வில் பி பேக் இன் த ஈவ்னிங்".
ஆபிசில், பாஸ் அழைத்தார். மேகா, ஆகாஷ் பாண்டி போயிருக்கான்மா. தெரியும் சார், தேங்க்ஸ். லன்ச் பிரேக்ல, அவனுக்கு கால் செய்தாள். "கிளம்புறேன் பேப்ஸ்" என்றான். "என்ன சார், செம ரொமான்டிக் மூடில் இருக்கீங்க போல? "ஆமா, யூ நோ வாட் டே டுடே" சொல்லிக் கொண்டே கிஸ் செய்தான். "ரோட்டைப் பார்த்து ஓட்டுடா.." அருகில் ரோஷினி அவளைப் பார்த்து சில்மிஷமாய் சிரித்தாள்.
இதோ பாலத்தில் நடுவில் ஆகாஷுக்கு முதன் முதலில் தான் கொடுத்த முத்தமிட்ட இடத்தில் நின்று கொண்டிருக்கிறாள். கைப்பிடிச் சுவரில், ஒரு ஹார்ட் படம் போட்டு, அதில் சுரேஷ் அகல்யா என்று எழுதி இருந்தது. ஆம், இதே இடம் தான். அவளுக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. நேரம் மாலை 6 ஐக் கடந்து விட்டிருந்தது. அவன் இன்னும் வந்து சேரவில்லை. இருள் சூழத் துவங்கிருந்தது. ஒரு மணிக்கெல்லாம் கிளம்பினானே, ஏன் இவ்வளவு லேட் ஆகுது. போனும் போக மாட்டேங்குது. ஏன் இப்படி செய்றான்.... ரோஷினியிட மிருந்து அழைப்பு வந்தது. " ஏய், மேகா எங்க இருக்கப்பா...? பதட்டமாக கேட்டாள். "ஆகாஷ் கார் ECR கல்பாக்கம் பக்கத்தில மீடியன்ல மோதி ....." ரோஷினி சொல்லிக் கொண்டிருந்த போதே, மேகா மயக்கத்தில் சரியத் தொடங்கினாள்.
பாலத்திற்கு கீழே விளையாடிக் கொண்டிருந்த அந்த நீலப்பாவாடை அணிந்திருந்த சிறுமி, அவள் கீழே விழுவதை பார்த்து, "ஆயா, ஆயா...என்று கத்திக் கொண்டு, பாலத்தின் மேலே ஓடி வந்தது. அந்த சிறுமியின் ஆயாவும், இன்னும் சில பெண்களும் சற்று நேரத்தில் அங்கே கூடி விட, ஆயா, தான் கையோடு கொண்டு வந்திருந்த தண்ணீரை மேகாவின் முகத்தில் தெளித்தாள். மேகா, புருவம் சுருக்க, ஆயா அவளது நாடியை பரிசோதித்தாள். முகத்தில் சற்று புன்னகையோடு, பக்கத்தில் இருந்த ஒரு பெண்ணிடம் ரகசியமாக ஏதோ சொன்னாள். இந்த காலத்தில, புள்ளைங்களுக்கு எல்லாத்துக்கும் அவசரம்... .. அவள், ஆயாவை குழப்பத்துடன் பார்க்க, "நீ உண்டாயிருக்கம்மா" என்று அவள் நெற்றியில் வாஞ்சையாய் தடவினாள்.
அதற்குள், ஆகாஷ் போனில் இருந்து கால் வர, சுதாரித்துக் கொண்டவளாய் மேகா பேச, மறு முனையில் பாஸ் பேசினார். "மேகா, வேர் ஆர் யூ ? சாரிம்மா, கொஞ்சம் சீக்கிரம் வாம்மா ...!
ஆஸ்பிடலில், ரோஷினியும், பாஸ்ஸும் இன்னும் சிலரும் ICU க்கு வெளியே நின்று கொண்டிருந்தனர். மேகா, பீறிட்டு வந்த அழுகையை கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டு, "என்ன சார் ஆச்சு ஆகாஷு க்கு ...???? கொஞ்சம் பொறுமையா இருமா. ICU விலிருந்து டாக்டர் வெளியே வர, பாஸ் அருகில் சென்று கேட்டார். மேகாவை அவரிடம் அறிமுகம் செய்து வைத்தார். " ஹி ஹேஸ் சிவியர் இன்ஜுரிஸ் இன் ஹிஸ் லெப்ட் லெக், பிராக்சர் இன் த நீ ... மற்றபடி ஹி இஸ் அவுட் ஆப் டேஞ்சர், தேங்க்ஸ் டு ஏர் பேக்ஸ்..." சொல்லிச் செல்ல, அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
இரண்டு நாள் கழித்து ஆகாஷ் ரூமுக்கு மாற்றப்பட்டான். ஒவ்வொருவராக, அவனைப் பார்க்க வந்தவர்கள், அவனைப் பார்த்து, ஸ்பீடி ரிக்கவரி போக்கேக்களை தந்து விட்டுச் சென்று கொண்டு இருந்தனர். மேகா, எல்லாருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்ட வண்ணம் இருந்தாள். விஸிட்டிங்க் அவர்ஸ் முடிந்ததும், அவன் அருகில் வந்து, அமர்ந்து கொண்டு, கைகளைப் பிடித்துக் கொண்டு கேட்டாள் "பேபி, எப்படியிருக்க ...??? " வலியுடன் மெதுவாய் புன்னகை செய்தான்.
மேகா, அவன் நெற்றியில் முத்தம் பதித்து, காதின் அருகே மென்மையாய் சொன்னாள். " ஐ ஏம் 2 மன்த்ஸ் பிரக்னன்ட்"
ஆகாஷ் கண்களில் இருந்து நீர் வழியத் துவங்கிற்று. அந்த ரூமின், ஜன்னலுக்கு வெளியே, தூரத்தில் ஒரு பறவை தன் குஞ்சுகளுக்கு இரை அளித்துக் கொண்டிருந்தது.
Comments
Post a Comment