மதம் பெயரில் அரசியல் எதற்கு?
கறுப்பர் கூட்டத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், தமிழ்க் கடவுள் முருகனைத் துதித்து, தேவராய சுவாமிகளால் இயற்றப்பட்ட கந்த சஷ்டி கவசத்தில் வரும் சில வரிகளை விமர்சித்து பேசிய காணொளியைக் காரணம் காட்டி, எழுந்துள்ள எதிர்ப்பலையினால், அதனைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ள வேண்டி, அந்த காணொளியைய் பார்த்தேன். அந்த நபர் குறிப்பிட்ட படி, கவசத்தில் எழுதப்பட்டிருக்கும் வரிகளும், அதற்கான பொருளும் சரியே. ஆனால், அதை எடுத்துக்காட்டிய விதம், சிலருக்கு சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கலாம். அதன் வெளிப்பாடே, தற்போது ஏற்பட்டிருக்கும் எதிர்ப்பலை. நானும் ஒரு இந்து மதத்தைச் சார்ந்தவன் தான். ஆனால் எனக்கு அந்த நபர் மீது எந்த வருத்தமும் இல்லை. ஏனெனில், அது அவரது கருத்து சுதந்திரம். அதற்கு எதிர்வினையாற்றியாகிய வேண்டிய கட்டாயம் எவர்க்கும் தேவையுமில்லை. சில விஷயங்களை பெரிதுபடுத்துவதாலேயே அவற்றுக்கு அவசியமற்ற முக்கியத்துவம் கிடைத்து விடுகிறது. என்னுடைய பார்வையில், அந்த நபருக்காகவும், அவரது வெறுப்பாளர்களுக்காகவும், நான் சொல்ல விரும்புவது இதைத் தான்.
கடவுளிடம் ஒரு பக்தன் தனக்காகவும் மற்றும் தன் குடும்பத்தில் உள்ள அனைவருக்காகவும், எல்லாவற்றிற்காகவும், எல்லா உறுப்புகளின் நலத்திற்காகவும், பிணிகள் எல்லாம் தம்மை விட்டு, ஓடிடச் செய்ய வேண்டி, உருகிப் பாடுவதில் எந்தத் தவறும் இல்லை. நம் உடம்பில் உள்ள எல்லா உறுப்புகளுக்கும் ஒவ்வொரு வேலை இருக்கிறது. அந்த உறுப்புகளின் பெயர்களில் என்ன ஆபாசம் இருக்கிறது? அந்த உறுப்புகள் படைக்கப்பட்டதற்கான நோக்கத்தில் என்ன விரசம் இருக்கிறது? உயிர்ப்படைப்பின் நோக்கம், இனவிருத்தியே. அந்த இனவிருத்திக்காக மேற்கொள்ளப்படும் செயலையோ அல்லது பாலினத் தேவைக்காக புணர்ச்சி கொள்ளுதலையோ, ஆபாசமாகவோ, அருவருப்பாகவோ, பார்த்தால், அது சாத்தியப்படுமா?
அவ்வாறு இருக்கும் போது, கவசத்தில் உன்மையாகவே எழுதப்பட்டிருக்கும் வரிகளில் ஆபாசமிருக்கிறது என்று ஒருவர் சொல்வதும், அதனைப் புரிந்து கொள்ளாது அவரை வசைபாடுதலும் தேவையில்லாதது. உண்மையான இந்துக்கள் இதனை அறிவர், ஒப்புக் கொள்வர். ஆனால், மதத்தின் பெயரால் மதம் பிடித்துப் போயிருக்கும் பலர், தான் சார்ந்த மதத்தின் பெயரால் செய்யும் அரசியல் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று. அது, பல்லாயிரம் கோடி கடவுள்களைக் கொண்டிருக்கும் இந்து மதத்தின் தாத்பரியமான, ஒவ்வொரு உயிரையும் கடவுளாகப் பார்க்கும் உயரிய நோக்கத்தையே இழிவுபடுத்தும் செயல். இனியும் இவ்வாறு செய்தலைத் தவிர்க்க வேண்டும். அறிவார்ந்த சமூகம் இதனை ஒப்புக் கொள்ளாது.
பா. மணிகண்டன்
அருமை.
ReplyDeleteதெய்வ நிந்தனை பண்ணிட்டாங்கன்னு கூட்டத்தை சேர்த்து கலவரம் பண்ண நினைப்பது மதவாத அரசியல்வியாதிகளின் வேலை.
உண்மையான ஆத்திகவாதிகள், “தெய்வ நிந்தனை பண்ணவன தெய்வமே தண்டிக்கட்டுமே”னு அவர்கள் வேலைய பாக்க போய்டுவாங்க.
மிகவும் சரி
ReplyDelete