அபர்ணா F 22
காலை 6 மணி...!
திருச்சி ஆண்டார்த் தெரு!
முகத்தில் வெயில் படவும்
சோம்பல் முறித்து எழுகையில்,
மலைக்கோட்டையில் தீபாராதனையின் ஒளி தெரிந்தது!
"பிள்ளையாரப்பா" கன்னத்தில் போட்டுக் கொண்டேன்!
ஜன்னல் வழி தூரத்தில்பக்கத்து வீட்டு மொட்டை மாடியில்
தலை காயத் துவட்டுகிறாள் ஒரு பெண்!
கூந்தல் முழுதாய் மறைக்க
அவளது முகம் தெரியவில்லை,
ஆனால் இளமை தெரிந்தது;உருவம் சரியாய் பதியவில்லை,
ஆனால் பருவம் புரிந்தது!
ஆர்வமதிகமாகி,
விலகியிருந்த கைலி சரிசெய்து,
முகத்தில் நீர்த் தெளித்து,
"அம்மா காபி" என
அவளுக்கு கேட்கும்படி சத்தமாய் கத்தினேன்!
சத்தம் கேட்டு அந்தப் பாவையின் பார்வை
எனை நோக்க,
தரிசன திருப்தியில் ஒருகணம்
எச்சில் விழுங்கிக்கொண்டே, அவளை வெறித்துப் பார்த்தேன்!
தலையில் அடித்துக் கொண்டாள் !
கைகளில் முகம் புதைத்து சிரித்துக் கொண்டாள்!
அசிங்கப்பட்டவனாய் கீழே பார்த்த போது
கைலிக்கு பதில் போர்வையை சுற்றியிருந்தேன் !
அந்த வெட்கப் புன்னகை
என்னைத் தாக்கி, வதம் செய்து, கிறங்கடித்து
இதோ இன்றோடு தேதி பன்னிரெண்டு ஆகிறது!
தினமும் காலையில் அவள் வருவாளா?
தரிசனம் தருவாளா, எனக் காத்திருப்பேன்!
இன்று வந்தாள்!
இம்முறை தைரியம் வரவழைத்து
"பெயரென்ன?" என்றேன்.
"எதற்கு?" என்றாள் .
"சும்மாத் தெரிஞ்சுக்கலாம்னு " என்றேன்.
"தெரிஞ்சு" ??
"உன்னை எனக்கு பிடிச்சிருக்கு" என்றேன்!
முகம் கோபம் காட்டியது!
"நான் யார் தெரியுமா? என்றாள்.
"தெரியும்" என்றேன்.
"யார்?"
"என் வருங்கால மனைவி" என்றேன் !
இம்முறை கோபமில்லை! சிரித்தாள்.
பரவசமடைந்தேன்!
"சந்திக்கலாமா?" என்றேன்.
"எப்ப?" இது அவள்!
"மாலை 4 மணிக்கு பாரதி பூங்காவில்", இது நான்!
"சரி" சொல்லி விட்டு சென்றாள்!
"பெயர்?" கத்தினேன், அவள் சென்றுவிட்டிருந்தாள் !
மாலை 4 ஆக இன்னும் பத்து மணி நேரமிருந்தது.
நாள் முழுதும் நான் நானாக இல்லை!
பசிக்கவில்லை! இரெண்டு முறை குளித்தாயிற்று!
நான்கு டிரெஸ் மாற்றியாயிற்று!
மணி 2 தான் ஆயிருந்தது!
பாரதி பூங்கா செல்ல அதிகபட்சம் 20 நிமிடங்கள் ஆகலாம்.
ஆனாலும் 2 மணிக்கு முன்பேயே சென்றுவிட்டேன்!
நுழைவு வாயிலின் நேரே
அவள் வந்ததும் என்னை பார்க்க ஏதுவாக,
நடுவில் இருக்கும் தாமரைத் தடாகச் சுவற்றில் அமர்ந்து கொண்டேன்!
மணி நான்கைக் கடந்து பத்து நிமிடமாகியிருந்தது!
அவசரத்தில் அவளது எண்ணைக் கூடக் கேட்கவில்லை.
என்னையே கடிந்து கொண்டேன்!
ஓர் ஆட்டோ வந்தது!
என்னுள் மெலிதாய் நம்பிக்கை வந்தது!
மஞ்சள் நிற சுடிதாரில் வெண்பூக்கள் ஆங்காங்கே
என கவிதையாய் வெளியே இறங்கினாள் என்னவள்!
தோளில் ஒய்யாரமாய்த் தொங்கிக் கொண்டிருந்த கைப்பையிலிருந்து
பணம் எடுத்து கொடுக்கவும், காற்று பலமாய் அடித்தது !
அருவியாய் அவள் கூந்தல் விலக,
கழுத்தில் சுற்றியிருந்த சால்வைப் பின்னோக்கிப் பறந்தது!
வாய்ப்புக்காக காத்திருந்த நான்,
எழுந்து அதை நோக்கி ஓட,
எதிரில் ஒரு கார் அவசரமாய் என்னை மோதவும்,
தூரத்தில் அழுகுரல் ஓலமாய் கேட்க,
வலி உணரும் முன் மயங்கிப் போனேன்!
விழித்துப் பார்க்கையில் ...!
என் குடும்பம் முழுக்க என்னைச் சுற்றியிருக்க,
என் கண்களோ அவளைத் தேடின!
உடலில் ஒரு இடம் பாக்கியில்லாமல் ரணம் தெறிக்க,
வழியும் கண்ணீரைத் துடைக்க
அம்மா அருகில் வந்தாள்!
நீ எங்கடா பூங்காவுக்குப் போன? என்றாள்.
"உன்னோடு சேர்ந்து பக்கத்து வீட்டுக்கு வந்திருந்த அவங்க சொந்தக்காரப் பொண்ணும் அடிபட்டுடாடா,
பாவம் அவளுக்கு இன்னும் முழிப்பு வரல!
அடுத்த வார்டில் தான் அந்தப் பொண்ணும் இருக்கு!
சொன்னதும் இடிந்து போனேன்.
"இது தங்கம்மா அவளது தூரத்து சொந்தக்கார அத்தை
அவள் தான் நாளும் பகலும் அவளோட துணைக்கு இருக்கா !
அந்தப் பொண்ணுக்கு நாகப்பட்டினம் பக்கத்தில ஏதோ பொன்வேலியாம்,
பாவம் அந்த பொண்ணோட தாயும் தகப்பனும்
போன வருஷ புயலுல பலியாயிட்டாங்களாம் !"
அம்மா சொல்லச் சொல்ல
எனக்கு நெஞ்செமெல்லாம் பதறியது!
"எழுந்து நடக்க இயலாது,
குறைந்தது நாலு வாரமாவது ஆகும்"
மருத்துவர் சொன்னது காதில் கேட்டது.
நானும் அவளும் மிக அருகாமையில் இருந்தும் பிரிந்திருக்கின்றோம்!
அவளின் மிக அருகிலேயே நானும் இருக்கிறேன்
எனும் ஆனந்தத்தைக் கூட முழுமையாக
பறைசாற்றிக் கொள்ள இயலா நிலையில் நான்.
வலியின் வேதனை ஒருபுறமும்
என் 'அவளை' பற்றி யாரிடமும்
கூற இயலா சங்கடம் இன்னொரு புறமுமென
துக்கம் தொண்டை அடைக்க நொந்துப் போனேன்!
அவள் பெயர் கூட அறியா
என் பேதைமையை எண்ணி வெதும்பினேன்!
ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு யுகமாய் கடந்தது!
அவள் விழித்துக் கொண்டு விட்டாள் என்று செய்தி வராதா
எனக் காத்திருந்தேன், அவள் விழித்தபாடில்லை.
அவள் நிலைமையோ 'கோமா' சென்று விட்டதாக
தங்கம்மா சொன்னதாக அம்மா சொன்னாள்.
துடிதுடித்துப் போனேன்!
அவள் இருப்பிடம் தேடிச் சென்றேன்!
அங்கே என் தேவதை வெறுமையாய் பொலிவற்று வாடிக் கிடந்தாள்!
கட்டிலில் தொங்கிய பெயர்ப்பலகை "அபர்ணா" F 22 என்றது!
அவளின் இந்த நிலைமைக்கு நான் தான் காரணம் என்று
அவளது உறவினரிடம் சொல்லிவிட வேண்டும் என அறிவு சொல்லிற்று!
ஆனால் மனமோ வேண்டாம் என்றது!
அவள் என்னைத் தேடி வந்ததால் தான் இப்படி ஆனது
என்றால் அந்த குடும்பத்திற்கு அவமானம் அல்லவா?
ஆகவே சொல்லாது என்னுள்ளே பூட்டி வைத்துக் கொண்டேன்!
நான் குணமானதும் வீடு செல்ல அறிவுறுத்தப்பட்டேன்.
தந்தை பணிமாற்றல் காரணமாக
நாங்கள் திருச்சியிலிருந்து சென்னை சென்று விட்டோம்!
அவளது குடும்பம் அவளை
தங்கம்மாவுடன் கிராமத்திற்கே அனுப்பி விட்டது!
ஊரில் அபர்ணா வெறும் உயிரை மட்டும் வைத்துக் கொண்டு
இன்னும் கோமாவில் தான் கிடக்கிறாள்!
நானோ உயிரோடிருந்தும் நடை பிணமாய் இருக்கிறேன்!
படித்து முடித்து வேலைக்குச் சென்றதும்
நான் எடுத்த முடிவை கண்டு
என் குடும்பம் அதிர்ந்து போனது!
அப்பா மட்டும் 'உன் இஷ்டம்டா" என்று சொன்னார்!
அவளுக்கான என் காத்திருத்தல்
வாரங்கள், மாதங்கள், வருடங்கள் என்றாகி விட்டது!
நான் பொன்வேலி வந்து
இருபத்தைந்து வருஷம் ஆகிவிட்டது!
எனக்கு இப்பொழுது வயது ஐம்பது ஆகிறது!
ஒரு குடும்பம் இருந்திருக்கலாம்!
மகனுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்திருக்கலாம்!
ஆனால் எதுவுமில்லை, அதனால் பரவாயில்லை,
எனக்கு அந்த கவலை எல்லாம் இல்லை!
இதோ என் மானசீக மனைவி அபர்ணா இப்ப முழிச்சுக்குவா!
எனக்கு நிறைய வேலையிருக்கு!
பா. மணிகண்டன்
Comments
Post a Comment