காதல் வசப்படும்?
கதை நாயகி, மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பொது மேலாளர்!
நாயகன் கட்டிட உள் அலங்கார நிபுணன்!
இருவரும் கிறித்தவ மதம் சார்ந்தவர்கள்.
நாயகி பணிபுரியும் நிறுவனம்
புதிய இடம் பெயர்தலை முன்னிட்டு
நிபுணர்களை அழைக்கிறது!
அவர்களில் நாயகன் நிறுவனமும் போட்டியிடுகிறது.
விளக்கச் சந்திப்பில் நாயகன் நாயகிக்கு அறிமுகமாகிறான்!
அவனது ஆளுமையில் நாயகி மனதைப் பறிகொடுக்கிறாள்.
நாயகனின் திறமை அந்த வேலையை
அவனது நிறுவனத்திற்கே வென்றுத் தருகிறது.
நாட்கள் செல்கின்றன!
நாயகி அவன்பால் காதல் கொள்கிறாள்.
வெளிப்படையாக சொல்லத் தயக்கம் அவளுக்கு!
அவனைச் சந்திக்கும் பல சந்தர்ப்பங்களில் சொல்லத் தவிக்கிறாள்.
தன்னைப் பற்றி அவனது எண்ணம் என்ன என்பதில் ஆர்வமாயிருக்கிறாள்.
தன்பால் அவனுக்கு காதல் வாராதா என ஏங்குகிறாள்!
நாயகன் இதை அறியாமலிருக்கிறான்.
அவனது கவனமெல்லாம் செய்யும் வேலையிலேயே இருக்கின்றது!
நாயகியிடத்தில் மரியாதையாய் நடந்துகொள்கிறான்.
வேலையின் நிறைவு அவர்களைப் பிரிக்கின்றது!
6 மாதங்கள் நகர்கின்றன.
நாயகி வீட்டில் திருமணப் பேச்சு வருகிறது.
அவளது தந்தை ஓர் முற்போக்குவாதி!
தன் மகள் விருப்பத்தை மதிப்பவர்.
அவளிடம் வினவுகிறார்.
நாயகி தன் விருப்பத்தையும்,
நாயகன் அதை அறியாதவன் என்றும் சொல்கிறாள்.
என்ன செய்யலாம்? கேட்கிறார்.
பொது நண்பர்கள் எவரேனும் உள்ளனரா என ஆராய்கிறார்.
அவனது நிறுவனத் தலைமை அதிகாரி
தன் பால்ய சினேகிதன் என்று அறிந்து கொண்டதும் குதூகலம் அடைகிறார்!
நாயகிக்கு நம்பிக்கைப் பிறக்கிறது!
விதி வேறாக இருக்கின்றது!
அவனுக்குத் திருமணமாகி விடுப்பில் இருக்கக் கேட்டு அதிர்கின்றனர்!
கூடுதல் தகவலாக அவனது புது மனைவி
தன் நிறுவனத்தில் பணி புரிகின்றதும் தெரிய வருகிறது.
நிலைகுலைந்து போகிறார்கள். மகள் நிலைகண்டு மனம் வாடுகிறார். அவளது மனம் புரிந்து, தேற்றி,
இலங்கையிலிருக்கும்
தன் தமக்கை இல்லம் அனுப்பி வைக்கிறார்.
புதுச் சூழல் அவளுக்கு அந்நியமாயிருக்கிறது!
தேவாலயம் செல்ல விரும்புகிறாள்.
நாளை பண்டிகைக்கு செல்லலாம் என்கிறாள் அத்தை!
கூட்டமாயிருக்கும் என அடம்பிடித்து
முதல் நாளேசென்று வருகிறாள்!
நாயகனோ தேனிலவை கழிக்க புது மனைவியுடன் இலங்கை வந்திருக்கிறான்.
அன்று ஞாயிற்றுக் கிழமை!
இயேசு உயிர்த்தெழும் நாள்!
புது மனைவியுடன் தேவாலயம் செல்கிறான்.
எதிர்பாராமல் தீவிரவாதத் தாக்குதலால்
ஆலயத்தில் குண்டுவெடிப்பு நிகழ்கிறது.
எங்கு நோக்கினும் மனிதப் பிணங்கள் சிதறிக் கிடக்கின்றன.
புது மனைவி பலியாகிறாள்!
நாயகன் படுகாயமடைந்து தலையில் குருதியுடன் கிடக்கிறான்!
மரண ஓலம் அந்தப் பிரதேசமெங்கும் ரணமாய் கேட்கிறது.
செய்தி தீயாய் பரவுகிறது.
எதேச்சையாக நாயகி அந்தச் செய்தி பார்த்து அதிர்கிறாள்!
தான் நேற்று சென்று வந்ததை எண்ணிப் பார்த்துக் கொள்கிறாள்.
தந்தை அலைபேசியில் அழைக்கிறார்.
செய்தி பார்க்கச் சொல்கிறார்.
தன் நிறுவனத்தில் பணிபுரியும் நாயகனின் மனைவி
குண்டுவெடிப்பில் இறந்த தகவல் தருகிறார்.
அப்படியென்றால் அவன் கதி?
நாயகி சம்பவ இடம் விரைகிறாள்.
அவன் பிழைத்தால் போதுமென வேண்டிக்கொள்கிறாள்.
இறந்தவர் பற்றியத் தகவல் பெறத் துடிக்கிறாள்!
இறுதியில் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் பட்டியலில்
அவன் பெயர்கண்டு நிம்மதியடைகிறாள்!
தீவிர சிகிச்சை ஒரு வாரம் செல்கிறது!
தினசரி வந்து செல்கிறாள்.
அவனது குடும்பம் அவளைப் பற்றித் தெரிந்து கொள்கிறது.
பணியழைக்க நாயகி சென்னை திரும்புகிறாள்.
3 மாதம் கழித்து அவனுக்கு நினைவுத் திரும்புகிறது,
ஆனால் முழுமையாக இல்லை!
தலையில்அடிபட்டதில் அவனது சில நினைவுகள் அவனிடத்தில் காணமல் போயிருந்தன! குறிப்பாக தன் திருமணம் பற்றிய நினைவு அவனுக்கு சுத்தாமாக இல்லை! அவன் உயிர்ப் பிழைத்தது கடவுள் செயல் என்று அவன் குடும்பம் அவனை சென்னைக்கே அழைத்து செல்கிறது.
சென்னை வந்ததும் பணிக்குத் திரும்புகிறான். அவனுக்கு நிகழ்ந்த அனைத்தையும், நாயகி பற்றியும் தன் தலைமை அதிகாரி சொல்லக் கேட்டு, அவளைத் தேடிச் செல்கிறான்!
அங்கே அவள் இல்லை, குடும்பத்துடன் ஒரிசா மாநிலம் பூரிக்குச் சென்று 4 நாட்கள் ஆகிவிட்டதாய் தகவல் வருகிறது! அவனது செல்லில் அவளது எண்ணைத் தேடுகிறான். வருகிறது. அழைக்கின்றான்,
மறுமுனையில் மௌனமே பதிலாக வருகிறது.
செல்லில் 'டோலி 'ப்புயல் பற்றிய குறுஞ்செய்தி வருகிறது.
புயல் ஒரிசாவில் ஆடிய தாண்டவத்தை அறிந்து பதைபதைக்கின்றான். விமானம் பிடித்து கட்டாக் செல்கிறான்.
கட்டாக்கிலிருந்து பூரி செல்ல ஒரு காரை அமர்த்திக் கொள்கிறான். வழி நெடுக புயலின் தாக்கம் தெரிந்தது.
மழையும் கொட்டிக் கொண்டே இருந்தது.
அங்கே, அவன் கொணர்ந்த முகவரியில் இருந்த பழைய வீட்டில், அவள் பெயர் கேட்டு வெளியே காத்து நின்றான். கொட்டும் மழையில் சொட்ட சொட்ட நனைந்து நின்று கொண்டிருந்தான். மேலே மாடியில் இருந்து அவனைப் பார்த்தவள், படிகளில் விரைந்து வந்து, கொடியில் கிடந்த துண்டை எடுத்துக் கொண்டு வந்து அவனிடம் கொடுக்கையில், விரல் நடுங்க, உதடு துடிக்க, துண்டை நீட்டியவாறேக் கேட்டாள்,
'இங்க என்ன செய்றீங்க?'
துண்டுடன் சேர்த்து அவளையும் அணைத்தவன்,
நெற்றியில் மய்யமாய் முத்தமிட்டுக் கொண்டே கேட்டான்,
'நீ இங்கு என்ன செய்ற?'
- பா மணிகண்டன்
Comments
Post a Comment