ஆஞா...!
கணபதியாப்பிள்ளை
என் அம்மா வழி தாத்தாவின் பெயர்!
நாங்கள் செல்லமாக "ஆஞா" என்றே அழைப்போம்!
80 களிலிருந்து அவரது இறுதி மூச்சு இருக்கும்வரை
ஆஞா எங்களுடன் எங்கள் வீட்டிலேயே தங்க வேண்டிய
சூழ்நிலை அவருக்கு ஏற்பட்டது!
அவர் எங்களுடன் இருந்த அந்த பத்து வருடங்கள்
எங்களால் அவ்வளவு சுலபமாய் மறக்க இயலாது!
நெடு நெடுவென உயரம்!
இருட்டுக் கறுப்பு நிறம் !
வெள்ளை வேட்டி வெள்ளை ஜிப்பா !
எந்த நேரமும் கைவிரலில் சிகரெட் !
அதன் சாம்பலை தட்டுவதற்கு
அலுமினிய ஆஷ் டிரே!
லொக்கு லொக்கு என இருமல் !
பச்சை பச்சையாய் சளி என்று ஒரு அபூர்வ கலவைதான் ஆஞா !
24 மணி நேரமும்
"பிள்ளையாரப்பா, ஸ்ரீ ராமஜெயம் " என இறைவன் நாமத்தையோ
அல்லது "தனலக்ஷ்மி தனலக்ஷ்மி "
என இறந்துபோன மனைவியின் பெயரையோ
முணுமுணுத்துக் கொண்டே இருப்பார்!
அம்மாவிற்கு ஏதோ தன்னால் ஆன
உதவிகளை செய்து கொண்டிருப்பார்!
எங்கள் பாடப் புத்தகங்களுக்கு அட்டை போட்டுக் கொடுப்பார் ;
காய்ந்த துணிமணிகளை அழகாய் மடித்து வைப்பார்!
தினமும் மாலை மலைக்கோட்டையை சுற்றி வருவார் ;
கருப்பண்ண சாமி, மாணிக்க விநாயகர் சன்னதி,
சங்கடம் தீர்க்கும் விநாயகர், தெப்பக்குளம் ஆஞ்சநேயர்
வானப்பட்டறை மாரியம்மன் கோவில்
என ஒரு கணக்கு வைத்திருப்பார்!
வேஷ்டியின் ஒரு முனையை கைகளின் இடையில்
பிடித்துக் கொண்டே நடப்பார்!
ஒரு நாளின் பல சமயங்களில் மனைவியை நினைத்துக் கொண்டே
கண்களில் கண்ணீர் வழிய விட்டுக் கொண்டிருப்பார்!
அவரது உள்ளங்கைகள் மயிலிறகு போல் மென்மையாய் இருக்கும்!
தமிழில் பண்டிதர், ஆனால் ஆங்கில பாண்டித்தியமும் உண்டு!
காவல் அலுவலகத்தில் மேலாளர் பதவி வகித்தவர்!
கையெழுத்து கண்களில் ஒத்திக் கொள்ளும்படி இருக்கும்!
மாதம் தவறாது தன் மனைவியின் சமாதிக்கு
மிதிவண்டியில் சென்று வருவார் !
பிரதி மாதம் அவருக்கு பென்ஷன் வரும்!
அதனை வாங்கச் செல்லும்போதெல்லாம்
எங்களுக்குப் பிடித்தமான இனிப்புகளையும் வாங்கி வருவார்!
தையல் கடை தாத்தா, சின்னா சித்தப்பா, எத்திராஜ் அக்கா
என சில பெயர்கள் அவர் பலமுறை உச்சரித்தது மிகப் பிரபலம் !
அப்பாவுக்கு கோபம் வரும் போதெல்லாம்
எங்களை குறிப்பாக 'என்னை' அவரிடமிருந்து
காப்பாற்ற ஆஞாவின் தயவு எனக்கு பெரிதும் உதவிற்று எனலாம்!
அம்மா எப்பொழுதும் எங்களுக்காக
ஓடி ஓடி வேலை பார்ப்பதை காணப் பொறுக்காமல்
"எப்பம்மா உனக்கு விடிவு காலம் பிறக்கும்"
என அங்கலாய்த்துக் கொண்டே இருப்பார்!
முழுவதும் இயங்கி கொண்டிருந்தவர்
திடீரென ஒருநாள் மதிய உணவு முடிந்ததும்
நாற்காலியில் சற்று ஆசுவாசமாய் அமர்ந்தவர்
அடுத்த சில மணித் துளிகளில்
தன இஷ்ட தெய்வமான மலைக்கோட்டை பிள்ளையாரை
நோக்கியபடியே இறுதி மூச்சை விட்டார் !
யாருக்கும் எவருக்கும் ஒரு சிறு உயிருக்கும்
தீங்கு நினைத்திராத அவரது நல்ல உள்ளத்திற்கு
மரணமும் அவர் விரும்பியபடியே வந்தது!
சிறு பிள்ளைகளாய் இருக்கும் பொழுது
வீட்டிற்கு ஒரு பெரியவர் கூட இருப்பதும்
அவரை நாம் பார்த்துக் கொள்ளுவதும்
நம்மை அவர் பார்த்துக் கொள்ளுவதும்
அவர் சொல்லி கதைகள் கேட்பதுவும்
அவர் அருகாமை தரும் தைரியமும்
ஒவ்வொருவரும் கண்டிப்பாக அனுபவிக்க வேண்டிய ஒன்று!
இன்று ஜூன் ஒன்றாம் தேதி !
அவர் மரணம் தழுவிய நாள்!
அவர் பற்றிய இந்த பதிவை எழுதியதன் மூலம்
அவர்தம் நினைவுகளில் மூழ்கிப் போனதில்
இன்னும் சிறு பையனாகவே இருந்து கொண்டு
வாயார "ஆஞா, ஆஞா" என்று அழைத்துக் கொண்டு
இருக்க மாட்டோமா என்று ஏங்கியபடியே முடிக்கின்றேன் !
மணிகண்டன் பா
அனுபவித்தவள் நானும் என்பதனால் , அழுகை என்னையும் அறியாமல் கண்களில் வழிகிறது. மிக அருமையான பதிவு.
ReplyDelete