மறக்க இயலா விநாயகர் சதுர்த்தி!




இந்த இடுகையை நான் இன்றைய அதிகாலை மணி மூன்று முப்பதுக்கு எழுதத் துவங்குகிறேன். அயர்ந்து தூங்கும் என் மனைவியும் மகனும் இந்த விநாயகர் சதுர்த்திக்கு என்னுடன் சென்னையில் இருக்கின்றனர். வருடம் தவறாமல் இந்த பண்டிகை வந்து போனாலும், சற்றேறக்குறைய இருபது வருடங்களுக்கு முன்னால் நாங்கள் எல்லோரும் திருச்சியில் வசித்து வந்த பொழுது வந்த ஒரு விநாயகர் சதுர்த்தியை என்னால் மறக்க இயலாது.

எங்களுக்கு மலைக்கோட்டைக்கு மிக அருகில், தாயுமானவர் சுவாமி கோவிலின் வெளிப் பிரகாரத்தில் அப்போது வீடு இருந்தது. நான் பத்தாம் வகுப்பு படித்து வந்தேன். மறு நாள், பண்டிகை என்றால், முதல் நாள் அதன் தாக்கம் எங்கெங்கும் களைகட்டி இருக்கும்!

காவிரி ஆற்றுப் படுகையிலிருந்து, களிமண் எடுத்து வரப்பட்டு வீதியோரங்களில், சிறிதும் பெரிதுமாக, எல்லா அளவுகளிலும், பிள்ளையார் உருவாகி கொண்டு இருப்பார்! அவருக்கு, யார் அவரை உருவாக்குகிறார்கள் என்றெல்லாம் கவலை கிடையாது. ஒரு பிடி களிமண், யானை முகம், காலில் ஒரு மூஞ்சுறு, கைகளில் மோதகம், எருக்கம்பூ மாலை, அருகம்புல் போதும், பிள்ளையார் ரெடி!

வருடம் முழுமையும் டவுன் ஸ்டேசனுக்கு பின்புறம், சீந்துவாரற்று மண்டி கிடக்கும் எருக்கம்பூவிற்கு, அன்றைய தினம், அப்படி ஒரு மவுசு வரும்! குட்டி பையன்களும், சிறுமிகளும் திடீர் வியாபாரிகளாகி விடுவர்! " அக்கா, அக்கா பூ வாங்கிக்கக்கா, அண்ணே, அண்ணே பிள்ளையார் வாங்கிக்கிங்க அண்ணே" என்று, வீதிகளில், மழலைப்பட்டாளம் அலைமோதும்! குளிக்காமல் கூட, நெற்றியினில், பட்டை பட்டையை விபூதி பூசிக்கொண்டு, திரிவார்கள்!

அப்படிப்பட்ட குழந்தைகளில், ஒரு குழந்தை அழுக்குச் சட்டையும், மூக்கில் சளியும், கிழிந்த டிரௌசரும், போட்டுக்கொண்டு பிள்ளையார் விற்று கொண்டு இருந்தது. அந்த குழந்தைக்கு தான் எதற்காக பிள்ளையார் விற்கிறோம் என்றெல்லாம் கவலை இருந்ததாக தெரியவில்லை. பிள்ளையாருக்குத் தான் கவலை இருந்ததா? அதுவும் இருந்த மாதிரி தெரியவில்லை. இருந்திருந்தால், ஏன் குழந்தைகளை அவர் அப்படி ஒரு நிலைமைக்கு எடுத்துச் செல்லப் போகிறார்?

அந்தக் குழந்தையின் தாயார், தூரத்தில் இருந்து அதை அழைத்தது, மற்றவர்கள் காதில் விழுந்ததோ இல்லையோ, எனக்கு கன்னத்தில் அறைந்தது மாதிரி இருந்தது!

"தம்பி, முஸ்தபா, பிள்ளையார் விற்றது போதும், கொஞ்சம் சாப்பிட்டு விட்டு போயா" என்பதுதான் அது!

வயிறு பசித்தால், யார் வேண்டுமானாலும் பிள்ளையார் விற்கலாம்! பிள்ளையார் வாங்குவதன் மூலம், ஒருவருடைய பசியாறும் என்றால், பிள்ளையார் சதுர்த்தி நியாயமானதே!

இன்று நான் காலையில் குளித்து விட்டு பிள்ளையார் வாங்க செல்கிறேன்! கடை வீதியில், எனக்காக காத்திருக்கும் முஸ்தபாக்களை சந்திக்க செல்கிறேன்!

பசிக்கு மதம் தெரியாது! மனிதனுக்குத்தான் மதமெல்லாம்! மதம் எனும் மதம் மனிதனை ஆட்டிப்படைக்காதவரை, பசியைப் போக்கும் இனம் எதுவோ, அதுவே உண்மையான மதம்! அந்த மதம், நடத்தும் எல்லா வைபோகங்களும், எனக்கு சதுர்த்திகளே!

என்னால், எனது இளம்ப்ரயாத்தில் நடந்த இந்த விநாயகர் சதுர்த்தியை என்றும் மறக்க இயலாது!

Comments

  1. நல்லதொரு இடுகை.

    அதிகாலையில் எழுந்து எழுதியிருக்கிறாய், விரைவில் பிரபல பதிவர் / எழுத்தாளர் ஆக வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. நன்றி ஜோ, உன் வாழ்த்துக்கள் பலிக்க எழுத்துலகம் அனுமதிக்கட்டும்! அருள் புரியட்டும்!

    ReplyDelete
  3. திரு ஜோ அவர்கள் பேச்சுக்கு சொன்னதை போய் உண்மைனு நம்பலாமா ! ஹையோ ஹையோ !

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பண்ணப் பழகடா பச்சை படுகொலை...!

வயசாயிடுச்சில்ல...!

தங்கத் தாரகை