அன்பே சிவம்
அங்கு சுற்றி இங்கு சுற்றி கடைசியாக அவரவர் வீட்டு வாசலுக்கே வந்து கரோனா கதவைத் தட்டத் துவங்கியாகி விட்டது. எவ்வளவு தான் விழிப்புடனிருந்தாலும் இல்லாவிட்டாலும் தப்பித் தவறி அதனிடம் சிக்கி விட்டால், மீண்டு வருவோமா இல்லை மாண்டு வீழ்வோமா என்பது இன்னும் புரியாத புதிராகத்தானிருக்கிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஒருபுறம், பிரார்த்தனைகள் மற்றொரு புறம் என என்னெவெல்லாம் மனிதன் மேற்கொண்டாலும், எல்லாம் விதிப்படியே நடக்கும் என்பதையெல்லாம் பொய்யாக்கி விட்டு, காலனின் கணக்குகளை திருத்தியமைத்து, கரோனா தன் பங்கிற்கான சொந்த எண்ணிக்கையை மென்மேலும் கூட்டிக் கொண்டுதான் போகிறது. யார் மிஞ்சுவார் யார் கெஞ்சுவார் என எல்லோர்க்கும் உண்மையான மரண பீதியை ஏற்படுத்திக் கொண்டுதானிருக்கிறது.
வீட்டிலிருந்து கொண்டே வேலை பார்க்கும் கொடுப்பினை எத்தனை வேலைகளுக்கு இருக்கின்றது? வீட்டை விட்டு வீதிக்கு வந்தால் தான் நாலு காசு சம்பாரிக்க முடியும் எனும் எண்ணற்ற மானிடர், உயிர் முக்கியமா இல்லை பசி முக்கியமா எனும் கேள்விக்கெல்லாம் விடை தெரியாமல் இருக்கும் வரை நடத்தும் உண்மையான வாழ்வா சாவா போராட்டத்தைக் கண்டு கொக்கரிக்கும் இந்த உயிர்க் கொல்லி நோய், இந்த பிரபஞ்சத்தை விட்டு எப்போது செல்லும், இனி வரும் நாட்களில் இன்னும் எத்தனை பேரைக் கொல்லும், என்னும் கணக்குத் தெரியாமால் தத்தளிக்கும் இந்த அவல நிலையை என்னவென்று சொல்ல? யாரைத் தான் நாம் நொந்து கொள்ள?
மரண தேதி தெரிந்து விட்டால் வாழ்க்கையில் சுவாரசியம் குறைந்து விடும் என்பர். இப்பொழுதோ அது தெரியாமலேயே வாழ்க்கையில் சுவாரசியம் நீர்த்துப் போய்விட்டது. நமக்குத் தெரிந்த சொந்த பந்தங்களையும் நண்பர்களையும் மாறி மாறி இந்த திடீர் நோய்க்கு அநியாயமாய் பலி கொடுக்கும் போது நெஞ்சைப் பிசைகின்றது, பதை பதைக்கின்றது. மன உறுதி எல்லாம் ஆட்டம் காண்கின்றது.
எல்லாமும் தெரிந்த இறைவன் இதையும் தனக்குத் தெரிந்தே நடத்தி வைக்கிறார் என்று கொண்டாலும் மனிதனின் பாவ புண்ணிய கணக்குகள் பார்த்து தான் உயிர்பலி இருக்கிறதா என்று பார்த்தால், அது அவ்வாறு இல்லை எனும் உண்மை விளங்கும்போது இறை நம்பிக்கை என்பதே கேள்விக்குறியாகிவிட்டது. ஆதலால், இனி நாம் செய்ய வேண்டியது எல்லாம் ஒன்றே ஒன்று தான். இருக்கும் வரை, அனைவரிடமும் பாரபட்சமின்றி பிரதி பலன் பாராத அன்பு செய்தல் மட்டுமே...! விரோத மனப்பான்மை எல்லாவற்றையும் புறம் தள்ளிவிட்டு, உண்மையான, நேர்மையான நேசம் செய்வோம்.
Comments
Post a Comment