கண்ணுக்குத் தெரியாத அரக்கன் ...!



வாழ்க்கை எவ்வளவு நிச்சயமற்றது என்பதனை புரிந்து கொள்ள நமக்கு ஒரு சந்தர்ப்பம் வாய்த்துள்ளது.  மனிதனாய் பிறக்கும் ஒவ்வொருவருக்கும் இங்கே கற்பிக்கப்படுவது என்ன?  எதைச் செய்தால் சாதனை என்று பார்க்கப்படுகிறது?

நன்றாக படிக்க வேண்டும்; நல்ல கல்லூரியில் இடம் வேண்டும்; நல்ல வேலையில் சேர வேண்டும்; நல்ல சம்பாத்தியம் செய்ய வேண்டும்; மகிழுந்து ஓட்ட வேண்டும்; வீடு வாங்க வேண்டும்; நல்ல வாழ்க்கைத் துணையினை அடைய வேண்டும்; நல்ல குழந்தைகளை பெற வேண்டும்; பிறகு பெற்றக் குழந்தைகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும்; அவர்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க வேண்டும், அது வரை ஓடிக் கொண்டிருக்க வேண்டும்; தத்தமது குடும்பத்திற்காக பொருள் ஈட்டுவதிலேயே காலம் கடத்த வேண்டும்; பின்பு நாம் சரியாகத் தான் வாழ்ந்து வந்துள்ளோமா என்று ஆராயக் கூட அவகாசமில்லாமல் ஒரு நாள் மரித்தும் போய்விட வேண்டும்.  

இதற்குள் எத்தனை எத்தனையோ நல்ல அல்லது தீய குணநலன்களை வளர்த்துக் கொண்டும் அல்லது அனுபவித்துக் கொண்டும் காலம் தள்ளுகின்றோம்.  எது சரி அல்லது எது தவறு என்ற எந்தப் புரிதலும் இல்லாமலே வாழ்ந்து, நமக்கு எல்லாம் தெரியும் எனப் பிதற்றிக் கொள்கின்றோம்.  

நாம் செய்யும் தவறுகளை மன்னிக்க அவரவர் வசதிக்கு ஒரு கடவுளை உருவாக்கிக் கொண்டு, இறை நம்பிக்கையை வைத்து வியாபாரம் செய்து கொண்டு, கடவுள் வழிபாட்டை பொழுதுபோக்காய் மாற்றி, சடங்கு சம்பிரதாயங்கள் என்று சொல்லிக் கொண்டு நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டு, கடவுளை பரிகாசம் செய்து கொண்டு வாழ்கிறோம்.

வாய் பேச முடியாத ஜீவராசிகள் அனைத்தையும் நாக்கின் சுவை கருதி அவற்றின் அனுமதி இல்லாமலே அவற்றை நம் தேவைக்காக செயற்கை முறையிலும் உருவாக்கிக் கொண்டு, அவற்றை கொன்று உண்டு களித்து வந்தோம்.  ஆனால் இன்றைய நிலை என்ன?  எங்கிருந்தோ வந்த கண்ணுக்குத் தெரியாத கரோனா எனும் ஒரு கொடிய வைரஸ் அரக்கன், மனித குலத்தையே உருக்குலைத்துக் கொண்டு வருகிறது.  எல்லாவற்றையும் புரட்டிப் போட்டு விட்டது.  மனிதனுக்கு மரண பயத்தைக் காட்டி விட்டது.

உயிருள்ள மீன், புழுவை உண்கிறது; உயிரற்ற மீனை மனிதன் உண்கின்றான்; மாண்ட மனிதனை மண்ணுக்குள் மீண்டும் புழு உண்ணுகிறது என்று சொல்வார்கள்.  இது தான் வாழ்க்கை.  நண்பர்களே, யோசியுங்கள்.  இனியும் தாமதிக்காது நமக்காக வாழுபவர்களுக்காக வாழ ஆரம்பியுங்கள், விலைமதிப்பற்ற அன்பை அவரிடத்தில் காட்டுங்கள்.  உயிரற்றவற்றின் பின்னால் ஓடுவதை சில காலம் தள்ளி வையுங்கள்.  ஏனெனில் நாளை உதயம் எப்படி இருக்கும் என்று நம்மில் எவர் அறிவார் எனும் உண்மை யாருக்கும் தெரியாது.

பா. மணிகண்டன்.

Comments

Popular posts from this blog

பண்ணப் பழகடா பச்சை படுகொலை...!

வயசாயிடுச்சில்ல...!

தங்கத் தாரகை