ஆஞா...!
கணபதியாப்பிள்ளை என் அம்மா வழி தாத்தாவின் பெயர்! நாங்கள் செல்லமாக "ஆஞா" என்றே அழைப்போம்! 80 களிலிருந்து அவரது இறுதி மூச்சு இருக்கும்வரை ஆஞா எங்களுடன் எங்கள் வீட்டிலேயே தங்க வேண்டிய சூழ்நிலை அவருக்கு ஏற்பட்டது! அவர் எங்களுடன் இருந்த அந்த பத்து வருடங்கள் எங்களால் அவ்வளவு சுலபமாய் மறக்க இயலாது! நெடு நெடுவென உயரம்! இருட்டுக் கறுப்பு நிறம் ! வெள்ளை வேட்டி வெள்ளை ஜிப்பா ! எந்த நேரமும் கைவிரலில் சிகரெட் ! அதன் சாம்பலை தட்டுவதற்கு அலுமினிய ஆஷ் டிரே! லொக்கு லொக்கு என இருமல் ! பச்சை பச்சையாய் சளி என்று ஒரு அபூர்வ கலவைதான் ஆஞா ! 24 மணி நேரமும் "பிள்ளையாரப்பா, ஸ்ரீ ராமஜெயம் " என இறைவன் நாமத்தையோ அல்லது "தனலக்ஷ்மி தனலக்ஷ்மி " என இறந்துபோன மனைவியின் பெயரையோ முணுமுணுத்துக் கொண்டே இருப்பார்! அம்மாவிற்கு ஏதோ தன்னால் ஆன உதவிகளை செய்து கொண்டிருப்பார்! எங்கள் பாடப் புத்தகங்களுக்கு அட்டை போட்டுக் கொடுப்பார் ; காய்ந்த துணிமணிகளை அழகாய் மடித்து வைப்பார்! தினமும் மாலை மலைக்கோட்டையை சுற்றி வருவார் ; கருப்பண்ண சாமி, மாணிக்க விநாயகர் சன்னதி, சங்கடம...