காதலர் தினம்!



அன்று காதலர் தினம்!
இன்னும் பசுமையாக இருக்கிறது!
என் "அவளை" நான் இரெண்டாம் முறையாகப் பார்த்த நாள்,
2003, பிப்ரவரி 14 ஆம் நாள் காலை,
பெங்களூர் புகைவண்டி நிலையத்தில்...!
ஒரு முயல் குட்டியாக வெளியே மெல்லத் தெரிந்தாள்!
கண்களில் அவ்வளவு காதலையும் பயத்தையும் தேக்கி வைத்துக் கொண்டு,
என் தங்கையின் முதுகின் பின்னால்
தன்னை சின்னதாய் மறைத்துக் கொள்ள
முயற்ச்சித்துத் தோற்றுப் போய்க் கொண்டிருந்தாள்!

எனக்கு அவளைப் "பார்த்ததும் பிடித்துப் போனது" நடந்து
சரியாக ஒரு ஆறு மாதங்கள் ஆகி விட்டிருந்தது!
அதற்குப் பிறகு இப்பொழுதுதான் மீண்டும் பார்க்கிறோம்!
இந்த இடைப்பட்ட காலத்தில்
நாங்கள் அலைபேசிகளிலும் தொலைபேசிகளிலும் தான்
எங்களைப் கேட்டுக் கொண்டிருந்தோம்!
காதல் செய்வது எவ்வளவு வலிக்கச் செய்யும்
என்பதை அறிந்தே புரிந்து கொண்டிருந்தோம்!
காதல் பைத்தியம் பிடிக்கச் செய்யும் என்பதைத்
தெரிந்தே ஒருவர்பால் ஒருவர் பித்து கொண்டிருந்தோம்!
காதல், பசியை மறந்துப் போகச் செய்யும் என்பதனை
உணர்ந்தே ருசியையும் மறுக்கக் கற்றுக் கொண்டிருந்தோம்!
தங்கையின் திருமணம் நடைபெறாது
என் திருமணம் நடைபெறாது என்பதை
சுகமான சுமையாகச் சுமந்து கொண்டிருந்தோம்!
என் தங்கையின் தோழியின் தங்கை அவள்!
எனக்கும் தங்கையாகியிருக்க வேண்டியவள்!
விதியின் விருப்பம் வேறாகிப் போவதற்கு எங்கள்
மதியை மதிக்காது பழக்கிக் கொண்டோம்!

இப்படியெல்லாம் கூட எதார்த்தத்தில்
நடைபெறுமா என்பது சந்தேகமே!
நாளை என் வாழ்க்கைத் தோழியாக வர வேண்டியவள்
இன்று என் தங்கையின் திருமணத் தோழியாக வந்து இறங்குகிறாள்!
அவள் "எனக்காகப் பிறந்தவள்" என்பதை
சமூகம் ஒத்துக் கொள்ள  மேற்கொள்ளப்பட்ட
கலாசாரக் கோளாறுகளில் ஒன்றான
ஜாதகம் பார்த்தலில் சோதிடப் பொருத்தங்கள்
இரு வீட்டையும் திருப்திப் படுத்தியிருந்தது
எங்களுக்கு ஒருவகையில் வசதியாகப் போனதால்
நாங்கள் காதலிக்க சிறப்பு அனுமதிப் பெற்றிருந்தோம்!
அந்தத் திமிரில் அமைந்தது தான்
அவள் அன்றைய தினம் என் தங்கைக்குத்
திருமணத் தோழியாக வரவைக்கப் பட்டிருந்தது கூட!

பயணக் களைப்பின் அயர்ச்சி
அவளை இன்னும் அழகாகக் காட்டியது எனக்கு!
அவர்கள் இருவரையும் அழைத்து வர
நானும் அப்பாவும் வந்திருந்தோம்!
அவளை மட்டும் என்னுடன்
இருசக்கர வாகனத்தில் அழைத்துச் செல்ல விரும்பி
கண்களில் அவளைக் கேட்டுப் பார்த்தேன்!
அவள் நாணத்தில் தவித்துப் போவதை
நான் அவளறியாது ரசித்துக் கொண்டிருந்தேன்!
தங்கையை தந்தை இட்டுச் செல்ல
நானோ என் "அவளை"த்  தனியாக
என் வண்டியில் கூட்டிச் செல்ல ஆசிர்வதிக்கப்பட்டேன்!
அந்த சிறப்பு அனுமதியில்
அப்பாவிற்குப் பெரிதாக உடன்பாடில்லை என நன்கறிந்து இருந்தேன்!

எங்களது முதல் பயணம், ஒரு காதலர் தினத்தில் அரங்கேறுகிறது!
தங்கை, தாய் அல்லாது மற்றொரு பெண்ணை
முதன் முதலாக அவ்வளவு அருகாமையில்
வைத்தக் கொண்டுப் போனது நெஞ்சில்
இன்னும் பசுமரத்தாணி போல் பதிந்துப் போயிருக்கிறது!
எங்களுக்குள் நெருக்கமாய் ஒரு சிறு இடைவெளியை
ஏற்படுத்தி அதில் வெட்கச் சுவாசத்தை
விருப்பமாய் நிரப்பிக் கொண்டு
என் பின்னே என் முயல் குட்டி
பவ்யமாய், பாந்தமாய், சாந்தமாய்
என்னைக் கொல்லாமல் கொல்லும் காந்தமாய்
அமர்ந்து வந்து கொண்டிருக்கிறாள்!

காதலர் தினம்!
பெங்களூர் குளிர்!
பனிப் புகை மண்டலம்!
அருகில் என் பிரியமானத் தோழி!
"இதற்குத் தானே ஆசைபட்டாய் பாலகுமாரா" என் நான்!
எங்கள் ஸ்பரிசங்களின் தொடுதல் என்பது
அவ்வப்போது விபத்தாய் சாலைகளின்
மேடு பள்ளங்களின் புண்ணியத்தால் நடைபெற்றுக் கொண்டிருக்க
எனக்கோ வழக்கமாக வந்து போயிக் கொண்டிருந்த
வழிகள் மறந்துப் போயிக் கொண்டிருந்தது!
இறுதியில் வீடு வந்து சேர்வதற்குள்
அவ்வளவுப் பனியிலும் வியர்த்து இருந்தோம்!
அந்தக் கன்னியின் "கன்னி"த் தொடுகை,
எங்களுக்குள் அன்றைய தினம்
ஒரு இரசாயணப் புரிதலை விதைத்து விட்டுச்
சென்றதாகவே இருவரும் புரியாமல் புரிந்துகொண்டோம்!

அன்று விதைக்கப்பட்ட விதையின்
முளையாய், செடியாய், கொடியாய், மரமாய்,
பூவாய், காயாய் மற்றும் கனியாய்
இன்னும் பலவாய் நாங்கள்
மீண்டும் மீண்டும் இந்த பதின்மூன்று வருடங்களில்
காதலை அறுவடை செய்து மீண்டும் மீண்டும்
விதைத்துக் கொண்டே வந்துள்ளோம்!
இனி வரும் காலங்களிலும் இது தொடரும்!

இனிது இனிது காதல் இனிது!
இதைப் புரிந்துக் கொண்டால்
இனிது இனிது வாழ்க்கை இனிது!
உங்களுடன் உங்களுக்காகவே வாழ்ந்து வருகிற
காதல் மனைவியை விடாது காதல் செய்து பழகுங்கள்!
தினம் தினம் காதலர் தினங்களைக்
கொண்டாடி மகிழுங்கள்!

இனிய காதலர் தின வாழ்த்துக்கள்!























































மறுநாள் காதலர் தினம் என்பது நினைவுக்கு வரவில்லை!

Comments

Popular posts from this blog

பண்ணப் பழகடா பச்சை படுகொலை...!

வயசாயிடுச்சில்ல...!

தங்கத் தாரகை