அபியும் நானும் ...!
அபி என் உடன் பிறவா சகோதரி....!
அபியைப் பற்றி நினைவுகூற
ஒரு கால் நூற்றாண்டாவது நான் பின்னோக்கிச்
செல்ல வேண்டும், பரவாயில்லை!
அபிக்காக செல்லலாம்!
அப்போது நாங்கள் திருச்சியில்
வாழ்ந்து வந்தோம்!
அபியை நான் முதன் முதலில் பார்த்தது
இன்னும் எனக்குள் பிரகாசமாய் ...!
அவளது தந்தையும், எனது தந்தையின் உயர் அதிகாரியுமான
"திரு. சங்கரன்" சார்,
அவரது மனைவியும், கனரா வங்கி ஊழியருமான
"திருமதி. மீனாக்ஷி" அவர்கள்,
"சத்ய நாராயணன்" எனும் "சதீஷ்" - அவர்களது செல்ல மகன்,
"நிரஞ்சனா" எனும் "அபி" - ஒரு குட்டி தேவதை...!
என அந்த பிராமணக் குடும்பம் குடியேறியிருந்த வீடு,
திருச்சியில் தெப்பகுளம் பார்த்த மாதிரி ஒரு அக்ரஹாரத்தில்,
அந்தப் பகுதியின் அதீத விசாலமானதும்
மிகப் பெரிய மொட்டைமாடியினைக் கொண்டதுமாகமாய்
பிரமாண்டமாகத் அப்பொழுது தெரிந்தது!
அங்கே தான் முதன் முதலாய் அபியும் சதீஷும்
எனக்கு அறிமுகமானார்கள்!
சதீஷ் பரம சாது! அபியோ மகா வாலு!
தெற்றுப்பல், பெரிய விழிகள்,
செம கலர், கொழுக் மொழுக் என
ரகளையாய் இருப்பாள்!
அடிக்கடி செல்லச் சண்டைகள் போடுவாள்!
பொய்யாய் அழுவாள்!
துரு துருவென எப்போதும்
எதையாவது தேடிக் கொண்டே இருப்பாள்!
கிடைக்காவிட்டால் கத்துவாள்!
பருப்புப் பொடியும், தயிரும் அவளுக்கு உயிர் !
பள்ளி விட்டு வந்ததும்
எல்லாவற்றையும் ஒரு கை பார்ப்பாள்!
காமிக்ஸ் விரும்பி படிப்பாள்!
பாடங்களை தலைகீழாய் ஒப்பிப்பாள் !
அப்போது அவளுக்கு வயது ஆறு அல்லது ஏழு இருந்திருக்கலாம்!
என் தங்கை படித்த ஆர் சி பள்ளியில் தான்
அவளையும் சேர்த்து விட்டனர் அவளது பெற்றோர்!
அவளுக்கும் சதீஷுக்கும், அவர்களது வீட்டிற்கும்
நான் அங்கீகரிக்கப்பட்ட மெய்க்காப்பாளன்!
இருவரையும் பள்ளி சென்று விடுவது,
மறுபடியும் திரும்ப அழைத்து வருவது!
மீனாக்ஷி அக்கா (அபியின் தாயை நான் அக்கா என்றே அழைப்பேன்) வங்கியிலிருந்து வரும்வரை
அவர்கள் வீட்டில் இருந்து, வந்ததும்
குழந்தைகளை ஒப்படைத்து விட்டு வருவது என
சில வருடங்கள் ஓடிற்று!
அக்காவிற்கு என்பால் ஒரு தனிப் பற்று!
என் கொள்கைகளின் நியாயங்களைச் சரியாகப் புரிந்து கொள்வார்!
தவறுகள் இருப்பின் என்னை உரிமையுடன் திருத்துவார்!
வீட்டின் அருகிலிருந்த வங்கியில் பணிபுரியும் பொழுது
நாங்கள் செல்லும் பொழுதெல்லாம்
எங்கள் சம்மந்தப்பட்ட அலுவல்களை
சடுதியில் முடித்துக் கொடுப்பார்!
கருணையின் உருவாய், எளிமையின் இலக்கணமாய் இருப்பார்!
வீட்டில் பலகாரங்கள் செய்யும் பொழுதெல்லாம்
எனக்குத்தான் முதலில் தருவார்!
அபியின் தந்தை சங்கரன் சார்!
ஒரு அலாதியான குணம் கொண்டவர்!
பொறுமையின் சிகரம்!
தான் உண்டு, தன் புத்தகங்கள் உண்டு என
இருக்கும் இடம் தெரியாமல் இருப்பார்!
பெரிதாய் ஒரு ராகத்துடன் சிரிப்பார்!
குழந்தை போல் களங்கமில்லா மனிதர்!
தனக்கு அல்சர் என்பதனால் உணவுப் பழக்க வழக்கங்களில்
மிகுந்த கவனமாய் இருப்பார்!
சமயங்களில் உணவில் எல்லை மீறுவார்!
அதற்காக ரொம்பவும் வருத்தப்படுவார்!
அகலமாய் கண்ணாடியும், கைனடிக் ஹோண்டா வண்டியும்
அவரை கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது!
அபியின் தமையன் சதீஷ்
குழந்தை மனம் கொண்டவன்!
கேள்விகள் கேட்டுத் தள்ளுவான்!
சமர்த்தாய் பாடங்கள் படிப்பான்!
அதி புத்திசாலி! அதனாலோ என்னவோ
மற்றவர்கள் அவனை சரியாகப் புரிந்துகொள்ளவில்லை!
அபியுடன் பயங்கரமாய் சம்பாசனைகளில் ஈடுபடுவான்!
ஏறக்குறைய எல்லா தர்க்கங்களிலும் அபியே ஜெயிப்பாள்!
அதனை பெருந்தன்மையாய் விட்டுக் கொடுப்பான்!
சத்யா சத்யாவென அவன் தாய்
அவனை செல்லமாய் கொஞ்சுவார்கள் !
அவரைப் பொருத்தவரை இப்பவும்
அவருக்கும் எங்களுக்கும் இன்னும் அவன் ஒரு குழந்தை தான்!
அவளது தாயின் தந்தை திரு. நாராயணன்
பிராமணராய் இருந்தாலும் நாத்திகம் பேசுவார்!
திண்டுக்கல்லில் கம்யூனிசம் சகோதரர்கள் மத்தியில் பிரபலம்!
திருச்சி வரும் பொழுதெல்லாம்
நானும் அவரும் உலக விசயங்களை அலசுவோம்!
ஆங்கிலத்தில் மெத்தத் தெளிந்தவர்!
ஹிந்து பத்திரிக்கைகளில் எடிட்டோரியல் எழுதுவா ர்!
என்னை அவருக்கு ரொம்பப் பிடிக்கும்!
ஒருமுறை சபரி மலை செல்லும் பொழுது
அவரையும் அழைத்துக் கொண்டு போனோம்!
யாத்திரையின் நடுவில் அவரது பர்ஸ் நழுவிப் போனது!
"இறைவனின் சோதனை"
எனப் பக்குவப் பட்டுக் கொண்டார் அந்த நாத்திகவாதி!
பின்னாட்களில் முழுமையாய் இறைவன்பால்
பக்தி பரவசமானார் என்பதெல்லாம் வேறு கதை!
1995 ஆம் ஆண்டு நாங்கள் சென்னைக்கு
மாறிய பிறகு அவர்களுடன்
இருந்தத் தொடர்பு கொஞ்சம் கொஞ்சமாய் விட்டுப் போனது!
தொலைபேசியில் அவ்வப்போது பேசுவதோடு சரி!
சில வருடங்கள் கழித்து
நாங்கள் சென்னையிலிருந்து பெங்களூர் மாறியதும்
ஒரு முறை கோரமங்களாவில் "அபி"யை பார்த்தேன்!
அப்போது அவள் குமரியாயிருந்தாள்!
திருச்சி ஆர் ஈ சி - கல்லூரியில் படித்து முடித்து விட்டு,
தற்போது இன்போசிஸ் கம்பெனியில்
பணிபுரிந்து வருவதாகச் சொன்னாள்!
மலைத்துப் போனேன்!
சில வருடங்கள் கழித்து
மீனாக்ஷி அக்கா தொலைபேசியில் அழைத்து
அபிக்கு திருமணம் சென்னையில் என்றார்கள்!
நாங்கள் அனைவரும் சென்று வந்தோம்!
அபி மணப்பெண் கோலத்தில் இருந்தாள்!
மாப்பிள்ளை அட்டகாசமாய் இருந்தார்!
அபிக்காகப் பெருமைப் பட்டேன்!
திருமணம் முடிந்ததும் அமெரிக்காவிலேயே
"செட்டில்" ஆகிவிடுவர் எனக் கேள்விப் பட்டேன்!
காலம் ஓடிற்று!
இதோ மீண்டும் முகநூலில் அபி!
இணையம் எங்களை மீண்டும் இணைத்து வைத்திருக்கிறது!
அபிக்கு இப்போது ஒரு குட்டி பையன் இருக்கிறான்!
குழந்தைக்கு ஒரு குழந்தை!
எங்கோ பல்லாயிரம் மைல்களுக்கப்பால் அவர்கள் இருந்தாலும்,
அபியைப் பார்த்து பல வருடங்கள் ஆனாலும்,
அவளைப் பற்றி அசைபோட எத்தனையோ நினைவுகள்!
எல்லாமும் நேற்று நடந்தது போலிருக்கிறது!
காலம் தான் சாட்சியம்!
அபி ஒருமுறை அழைப்பாயா?
உன் அண்ணனுடன் மீண்டும் உரையாடுவாயா?
நெகிழ்ச்சியுடன்,
அண்ணன்
Comments
Post a Comment