வணக்கம் ரெண்டாயிரத்துப் பதிமூன்று!
எத்தனைப் பதிவுகள் கடந்த நான்கு வருடங்களாக எழுதியிருந்தாலும்,
இந்த ஆண்டின் முதல் பதிவை நான் எழுத முற்படுகையில்,
வழக்கமான உற்சாகம் ஏனோ இல்லாது போனதிற்கு
"ஆண்" எனும் என் இனத்தின் மீதே வெறுப்பு கூட ஒரு காரணமாயிருக்கலாம்!
தலைநகரின் சமீபத்திய நிகழ்வு,
ஒரு ஆணாய் என்னை வெட்கப்பட வைக்கிறது என்றால் மிகையில்லை!
மிருக மனம் படைத்த ஆண் நடமாட்ட சமுத்திரத்தில்,
ஒரு பெண் தனியே சுதந்திரமாய் நடமாட முடிகிற வரையில்,
"நமக்கு சுதந்திரம் என்பது இல்லை" என்று
காந்தி சொன்ன வார்த்தைகள்
இன்னும் நிதர்சனமாய், நம்மை
ஒட்டுமொத்தமாய் குற்றவாளிகளாக ஆக்கியிருக்கிறது!
பெண்கள் இல்லாத வாழ்க்கை என்பது இல்லை!
பெண்கள் இல்லாமல் வாழ்க்கையே இல்லை என்பதே உண்மை!
மனைவியே ஆனாலும் "புரிதல்"
என்பது இல்லாது போனால்
அங்கேயே சமூக பிரக்ஞை பிறழ்ந்து போகிறது!
ஊடகங்களில் கூச்சமின்றி பெண்களுக்கு எதிரான
சமூக அவலங்களை அலசுவதைப் பார்ப்பதும், விவாதிப்பதும்
கூட அவலம் தான்!
விடியற்காலையில் செய்தித்தாளில் நம் ஆழ்மனது முதலில் படிக்க விழைவது
கொலை, கொள்ளை,
கற்பழிப்பு மற்றும் சமூக சீர்கேடுகள் பற்றியது
என்று ஒத்துக்கொள்வது வெட்கப்பட வேண்டியது தான்
என்றாலும் அதுவே கசப்பான உண்மை தான்!
நமது ஒவ்வொருவரின் தேடல்கள் எதை நோக்கிச் செல்கின்றன?
அதிக பொருளீட்டலா?? சொத்துகள்
சேர்ப்பதா?
சந்தோசமாய் இருப்பதற்கு "அதிக
பொருள்" வைத்திருத்தல்
என்பது ஒரு "அளவீடு"
என்பதே இல்லை!
தேவைக்கு அதிகமாய் எதுவாக இருப்பினும் அது அனாவசியமானதே
என்று சொல்வோம் என்றால் அதிலும் உண்மை இல்லை!
ஏனென்றால் தேவை என்பது என்னவென்று தெரியாமலேயே
நாம் தேடலில் ஈடுபட்டுளோம்!!
முகங்கள் அறியா எத்தனையோ தோழர்கள் போலி முகமூடிகள் ஏதுமின்றி
தங்களது சுய தேவைகளைத் துறந்து, அரசாங்க
உதவிகள் நாடாது
சமூக அவல மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்!
அவர்களைப் பற்றித் தெரிந்து கொள்ளும் தேடலிலாவது ஈடுபடுவோம்!
2013 ஆம் வருடத்தை வணக்கத்துடன் வரவேற்போம்!
நம் சுய முன்னேற்றத்திற்க்காக அல்ல; சுய
சிந்தனைகளின் முன்னேற்றத்திற்காக!
Comments
Post a Comment