பசுமையான அந்த பத்து வருடங்கள்!
பசுமையான அந்த பத்து வருடங்கள்! 1985 ஆம் ஆண்டு, முதன் முதலில் காரைக்குடியிலிருந்து திருச்சிராப்பள்ளி மாநகருக்கு எங்கள் ஜாகை மாற்றப்பெற்றது! அப்பா, முனிசிபல் பொறியாளராய் இருந்தவர், குடிநீர் வடிகால் வாரியத்துக்கு மாற்றம் பெற்றார்! அப்பாவுக்கு ஒரு பழக்கம். எங்கெல்லாம் அவருக்கு மாற்றல் கிடைக்கிறதோ அங்கெல்லாம் எங்களையும் உடன் கூட்டிக்கொண்டு சென்று விடுவார்! திருச்சி வரும் முன்னர், நான் காரைக்குடி, மார்த்தாண்டம், சென்னை அம்பத்தூர், தேவகோட்டை என்றெல்லாம் சுற்றியிருக்கிறேன்! அப்பாவுக்கு நன்றி! நான் ஒரு கலா ரசிகனாய் இருப்பதற்கு ஒருவேளை இது கூட அச்சாரமாய் இருந்திருக்கலாம்! திருச்சியில், முதலில் நாங்கள் செக்கடித் தெருவில், பாப்பாக்கா வீட்டு மாடியில், நான்கு புறமும் சுவர், தலைக்கு மேல் மூங்கில் கீற்று கொட்டகை, தகர டின் தடுப்பு குளியல் மற்றும் கழிவறை, மழை வந்தால் ஆங்காங்கே சொட்டும் தண்ணீரை நிரப்ப அலுமினிய பாத்திரங்கள், வெயில் அடித்தால் தரை எங்கும் ஜொலிக்கும் சூரிய வெளிச்ச வைரங்கள் என ஒரு அட்டகாசமான சூழலில் தான் வாழத் துவங்கினோம்! அந்த வீட்டுக்கு வராத நண்பர்களும், உறவினர்களும் இல்லை; அந்த வீட்ட...