மறக்க இயலா விநாயகர் சதுர்த்தி!
இந்த இடுகையை நான் இன்றைய அதிகாலை மணி மூன்று முப்பதுக்கு எழுதத் துவங்குகிறேன். அயர்ந்து தூங்கும் என் மனைவியும் மகனும் இந்த விநாயகர் சதுர்த்திக்கு என்னுடன் சென்னையில் இருக்கின்றனர். வருடம் தவறாமல் இந்த பண்டிகை வந்து போனாலும், சற்றேறக்குறைய இருபது வருடங்களுக்கு முன்னால் நாங்கள் எல்லோரும் திருச்சியில் வசித்து வந்த பொழுது வந்த ஒரு விநாயகர் சதுர்த்தியை என்னால் மறக்க இயலாது. எங்களுக்கு மலைக்கோட்டைக்கு மிக அருகில், தாயுமானவர் சுவாமி கோவிலின் வெளிப் பிரகாரத்தில் அப்போது வீடு இருந்தது. நான் பத்தாம் வகுப்பு படித்து வந்தேன். மறு நாள், பண்டிகை என்றால், முதல் நாள் அதன் தாக்கம் எங்கெங்கும் களைகட்டி இருக்கும்! காவிரி ஆற்றுப் படுகையிலிருந்து, களிமண் எடுத்து வரப்பட்டு வீதியோரங்களில், சிறிதும் பெரிதுமாக, எல்லா அளவுகளிலும், பிள்ளையார் உருவாகி கொண்டு இருப்பார்! அவருக்கு, யார் அவரை உருவாக்குகிறார்கள் என்றெல்லாம் கவலை கிடையாது. ஒரு பிடி களிமண், யானை முகம், காலில் ஒரு மூஞ்சுறு, கைகளில் மோதகம், எருக்கம்பூ மாலை, அருகம்புல் போதும், பிள்ளையார் ரெடி! வருடம் முழுமையும் டவுன் ஸ்டேசனுக்கு பின்புறம், சீந்துவார...