காதலர் தினம்!
அன்று காதலர் தினம்! இன்னும் பசுமையாக இருக்கிறது! என் "அவளை" நான் இரெண்டாம் முறையாகப் பார்த்த நாள், 2003, பிப்ரவரி 14 ஆம் நாள் காலை, பெங்களூர் புகைவண்டி நிலையத்தில்...! ஒரு முயல் குட்டியாக வெளியே மெல்லத் தெரிந்தாள்! கண்களில் அவ்வளவு காதலையும் பயத்தையும் தேக்கி வைத்துக் கொண்டு, என் தங்கையின் முதுகின் பின்னால் தன்னை சின்னதாய் மறைத்துக் கொள்ள முயற்ச்சித்துத் தோற்றுப் போய்க் கொண்டிருந்தாள்! எனக்கு அவளைப் "பார்த்ததும் பிடித்துப் போனது" நடந்து சரியாக ஒரு ஆறு மாதங்கள் ஆகி விட்டிருந்தது! அதற்குப் பிறகு இப்பொழுதுதான் மீண்டும் பார்க்கிறோம்! இந்த இடைப்பட்ட காலத்தில் நாங்கள் அலைபேசிகளிலும் தொலைபேசிகளிலும் தான் எங்களைப் கேட்டுக் கொண்டிருந்தோம்! காதல் செய்வது எவ்வளவு வலிக்கச் செய்யும் என்பதை அறிந்தே புரிந்து கொண்டிருந்தோம்! காதல் பைத்தியம் பிடிக்கச் செய்யும் என்பதைத் தெரிந்தே ஒருவர்பால் ஒருவர் பித்து கொண்டிருந்தோம்! காதல், பசியை மறந்துப் போகச் செய்யும் என்பதனை உணர்ந்தே ருசியையும் மறுக்கக் கற்றுக் கொண்டிருந்தோம்! தங்கையின் திரும...